உமா வரதராஜனின் எலியம்
ஸ்ரீரஞ்சனி

‘மூன்றாம் சிலுவை’, என்ற நாவலுக்கூடாகவே முதன்முதலில் உமா வரதராஜன் என்ற எழுத்தாளரை நான் அறிந்தேன். அதன் கதைமாந்தர்கள் பற்றியும், அதில் விபரிக்கப்பட்டிருந்த சம்பவங்கள் பற்றியும் நிறைய விமர்சனங்களும் கேள்விகளும் எனக்குள் எழுந்தபோதும், அவை யாவும் வெளியில் முகிழாமல் எனக்குள்ளேயே உறைந்துகொண்டன. அதன்பின் உமா வரதராஜனின் எழுத்துக்களைப் படிக்கும் சந்தர்ப்பம் எனக்குக் கிடைக்கவில்லை.

இரண்டு வருடங்களின் முன்னர், இங்குள்ள தமிழ் மாணவர்களின் தமிழ் மொழி அறிவினை மதிப்பிடும் ஒரு தொழில் கடமைக்காக ஆதாரவளங்களைத் தேடி, இலங்கைக் கல்வித் திணைக்களத்தின் வலைப்பக்கத்தைப் பார்வையிட்டபோது எனக்கு மகிழ்ச்சியும் வியப்பும் ஏற்பட்டன. நாங்கள் படித்த அந்தக்காலத்தில், எழுபதுகளின் இறுதிப்பகுதிகளில், எங்களின் தமிழ்ப் பாடநூல்களில் இலங்கைத் தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகள் இடம்பெற்றதில்லை. நிலக்கிளி- பாலமனோகரன், வாடைக்காற்று-செங்கை ஆழியான், பூசைக்கு வந்த மலர்-ந. பாலேஸ்வரி என ஓரிரு எழுத்தாளர்களின் படைப்புகளை பாடசாலைக்கு வெளியிலேயே வாசிக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. அங்கனமின்றி, என். கே. ரகுநாதன், அ. யேசுராஜா, உமா வரதராஜன், தாமரைச்செல்வி போன்ற சம கால எழுத்தாளர்களின் படைப்புகள், பாடப்புத்தகங்கள் ஊடாக இன்றைய மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தப்படுவதைப் பார்த்தபோது மனதுக்குள் இனம்புரியாத பரவசம் ஏற்பட்டது. இதுமட்டுமன்றி கே. எஸ். சிவகுமாரனின் மொழிபெயர்ப்புக் கதை, கி.பி. அரவிந்தனின் கவிதைகள், நந்திக் கலம்பகம், புறநானூறு என பல இலக்கிய வடிவங்களால் பாடப்புத்தகங்கள் நிறைந்து போயிருக்கின்றன. வாசிக்கும் பழக்கத்தை மாணவர்களிடையே உருவாக்கவும் இது உதவுமென நான் நினைக்கின்றேன்.

அந்த இலக்கிய வடிவங்களில் ஒன்றாக இருந்த உமா வரதராஜனின் ‘எலியம்’ என்ற சிறுகதை என்னை மிகவும் கவர்ந்தது. அதனை நான் மிகவும் ரசித்து வாசித்தேன். வாசிக்கும்போது எனக்குள் பல தடவைகள் சிரித்தும் கொண்டேன். அந்தக் கதை தந்த உந்துதல், அவருடைய சிறுகதைத் தொகுதியையும் தேடி வாசிக்க வைத்தது. இருப்பினும், எலியம்தான் இன்னும் மனதுக்குள் நிற்கிறது. அது பற்றி எழுத வேண்டுமென அன்று ஏற்பட்ட ஆசையை இப்போதுதான் செயலாக்க முடிந்திருக்கிறது.

‘எலியம்’, என்ற அந்தச் சிறுகதையில் ஒரு சொல்கூட தேவையற்று வரவில்லை எனச் சொல்லுமளவுக்கு அத்தனை சொற்களும் மிக அழகாகக் கதையுடன் இயைந்து போகின்றன. அந்தக் கதைக்களத்தை மனக்கண் முன் கொண்டுவரும் உமா வரதராஜனின் வருணனைகளும், அவரின் எழுத்தில் இழையோடும் நகைச்சுவையும் அபாரமாக உள்ளன. வைத்தியசாலைக்கும், சந்தைக்கும் அருகிலிருந்த அந்த வீடு, படம் பிடிக்கும் இடத்துக்கும் அருகில் இருப்பதால், படம் பிடிக்கப் போகும்போது அவர்களுடைய அழுக்கு நிரம்பிய சீப்பைப் பாவிக்க வேண்டியதில்லை என்பதும், பாண் வேகும் முறுகலான மணம், சிறுவர்கள் ஒப்புவிக்கும் வாசகங்கள் என்பனவும் கதைக்களத்தினை நகைச்சுவைசொட்ட அழகாகக் கண் முன் கொண்டுவருகின்றன.

கதையின் நாயகனுக்கு பல்லி, நத்தை போன்ற ஐந்துக்களை மட்டுமன்றி எலிகளையும் பிடிக்காது. அவனுடைய வீட்டிலிருந்த நறுமணச் சவர்க்காரத்தையும் காணாதபோது, எலி அதன் காதலி எலிசாவுக்கு அதை எடுத்துச் சென்றிருக்குமோ என முரண்நகையுறுகிறான், அவன். ஒரு நாள், அவன் தன்னை மறந்து சிந்தனைவயப்பட்டிருந்தபோது, அவனுக்குத் தொல்லை கொடுக்கும் அந்த எலிகளில் ஒன்று அவனுடைய கட்டிலில் விழுந்து, அவனுடைய கால் வழியாக அவனைக் கடக்க முற்படுகிறது, எப்படியிருக்கும்? எலியினை அருவருப்பவர்கள் அந்த அருவருப்பை அப்படியே உணர்ந்துகொள்ளலாம். அவன் துள்ளிய துள்ளல் கட்டில் சட்டத்தை முறித்து, அவன் காலிலும் காயத்தை ஏற்படுத்தி விடுகிற்து. அந்தச் சம்பவம் எலியின் மேல் அவன் யுத்தப் பிரகடனம் செய்வதற்குப் போதுமானதாகின்றது.

வளவொன்று குப்பையாக இருந்தால், அதைத் துப்பரவு செய்வதற்குப் பதில் அதனை மேலும் குப்பைக் கூடையாக்கிவிடும் மனிதர்கள்தான் இந்தப் பிரச்சினைக்குக் காரணகர்த்தாக்கள் ஆகின்றனரோ எனச் சலிக்கும் அவன் சுட்ட கருவாட்டை எலிப் பொறி ஒன்றிலிட்டு, எப்போ எலி மாட்டும் என ஆவலுடன் காத்திருக்க, எறும்புகள் மட்டும்தான் அங்கு மொய்த்திருக்கின்றன. அதனால் ஏற்பட்ட எரிச்சலுடன் படுக்கப் போனவனுக்கு எலியின் கீச்சல் ஒலி நாதஸ்வரமாகின்றது. பிறகென்ன சொல்லவா வேண்டும்? கழுத்தில் நெரிபட்ட எலி அவனுக்கு குரூர மகிழ்ச்சியைக் கொடுக்கின்றது. இன்னொரு எலியும் மாட்டியவுடன் எல்லாவற்றையும் பிடித்து விடலாம் என அவனுக்கு மிகுந்த நம்பிக்கை வருகிறது. ஆனால், அந்தக் கதையை சக ஊழியர்களுக்குச் சொல்லி மகிழ அவனால் முடியவில்லை. அவர்கள் அவனை வினோதமாகப் பார்க்கிறார்கள். இருந்தாலும், இப்படித்தான் ஆர்கிமிடீஸை அந்த நேரம் பாத்திருப்பார்கள் என தனக்குத் தானே கூறி ஆறுதலடைந்து கொள்கிறான், அவன். இருப்பினும், அந்த எலி வேட்டையின் வெற்றி தொடரவில்லை.

அதனால், பக்கத்து வீட்டுக்காரனிடம் ஆலோசனை கேட்கிறான், அவன். அந்தப் பக்கத்துவீட்டுக்காரன் சொன்ன எலிப்பாஷணம் செத்துப்போன எலிகளை அவன் வீட்டில் எதிர்பாராத இடங்களில் எல்லாம் நிரப்புகிறது. இருந்தாலும் அதைத் தவிர வேறு வழியில்லை என அவன் முடிவெடுத்திருந்தபோது, அவன் வீட்டில் மீண்டும் எலி நடமாட்டம் ஆரம்பிக்கிறது. அதன் தொல்லை பொறுக்கமுடியாமல் பூனை ஒன்றை வளர்க்கப்போக, அது அவனுக்கு மேலும் சிரமத்தைக் கொடுக்கிறது. சரி, பாழடைந்த வளவைத் துப்பரவாக்குவோம் என முயன்றது கூட அவனுக்குத் தீர்வைக் கொடுக்கவில்லை. கூலிக்காரர் மண்ணில் வேர்களை விட்டு வைத்ததால், மீண்டும், ‘பச்சைகள்’ துளிர்க்க மீண்டும் எலிகள் தலைகாட்டுகின்றன.

முடிவில் எலிகளை அழிப்பதை விடுத்து, தன்னை எப்படிப் பாதுகாப்பது என அவன் சிந்திப்பதாக அந்தக் கதை நிறைவுகின்றது. இதில் வரும் அந்தக் கதைநாயகனையும் எலிகளையும் எங்கள் வாழ்வில் காணும் பல விடயங்களுக்கு நாங்கள் உவமையாக்க முடியும்.

நல்ல சிறுகதை ஒன்றின் முடிவு எதிர்பாராததாகவும் வாசகர்களைச் சிந்திக்க வைப்பதாகவும் அமையவேண்டும் என்பதற்கேற்ப அமையும் இந்தக் கதை வாய்விட்டுச் சிரிக்கவும் மனமாரச் சிந்திக்கவும் வைக்கின்றது.


பதிவேற்றம் - நவம்பர் 2017
© பதிப்புரிமை உமா வரதராஜன் - 2017
Designed By : HLJ Solutions