ராஜகோபால்

தவறான காலத்தில் வந்து சேர்ந்த துக்கம்
You can always count on a murderer for a fancy prose style – Vladimir Nabokov

அது மழைக்குப் பிந்திய காலைப்பொழுது. சீதோஷ்ணம் ரம்மியமாக இருந்தது. திருமணமான எனது நண்பன், புறநகர்ப் பகுதியிலிருந்து நகரத்தின் மையப்பகுதிக்குப் பேரூந்தில் பயணித்துக் கொண்டிருந்தான். அவனுடைய இருக்கைக்கு அருகில் ஒரு பெதும்பை நின்றுகொண்டிருந்தாள். பேரூந்தின் தள்ளாட்டத்திற்கு இடையிலும் அவள் வசீகரமாக இருந்தாள். அவளுடைய ஆள்காட்டி விரலை என் நண்பன் பற்றினான். அவள் ஆட்சேபிக்கவில்லை. கண்கள் எங்கோ வெறித்துக் கொண்டிருந்தன. பேரூந்திலிருந்து இறங்கும் வரை அவள் விரலை அவன் பற்றிக் கொண்டே இருந்தான். பின்னாட்களில் அதை நினைவு கூரும்போது, புணர்ச்சியின் போது கூட அடைய முடியாத கிளர்ச்சியை அவள் எனக்கு அளித்தாள் என்றான் அவன். ஒரு நவீனத்துவ மனம் எளிதில் இதை ஆபாசம் என்றும் வக்கிரம் என்றும் வரையறுத்துவிடும். முற்போக்காளர்களோ மோசடி, சுரண்டல், வன் புணர்ச்சி போன்ற பெரிய வார்த்தைகளை வீசி எறியவும் குற்றஞ்சாட்டுவதற்கும் இச்சூழலை நன்கு பயன்படுத்திக் கொள்ளலாம். எனினும், சமூக விளக்கங்களுக்கு அப்பால் மிதந்துகொண்டிருக்கின்றது புரிந்துகொள்ள முடியாமையின் ஒரு வெளி. தொடுகைக்கும், அனுமதிக்கும் இடையில் அமர்ந்திருக்கிறது ஒரு புதிர். இப்பிரதேசத்தில்தான் மூன்றாம் சிலுவையும் நடமாடுகிறது.

காமத்தின் தன்னிச்சையான வல்லமைக்கும் சமூக நெறிகளுக்கும் இடையேயான நுட்பமான மோதலை, அன்பிற்கும் காமத்திற்கும் நடுவிலுள்ள நுட்பமான சிக்கலை, காமத்திற்கும் குரோதத்திற்கும் இடையேயான மெல்லிய உருமாற்றத்தை தமிழ்ப்படைப்பு மனம் வெற்றிகரமாகவே சித்தரித்துக் காட்டியுள்ளது. காமத்தின் பல்வேறு பரிமாணங்களை கு.பா.ரா.வில் தொடங்கி, தி.ஜானகிராமன், கரிச்சான்குஞ்சு, லா.ச.ரா, ஜெயகாந்தன், கி.ரா, ஆதவன், வண்ணநிலவன், ராஜேந்திரசோழன், திலீப்குமார், லஷ்மிமணிவண்ணன், ஜே.பி. சாணக்கியா என்ற பல படைப்பாளிகள் வழியாகவும் நாம் அறிந்து கொள்ள முடியும். உமா வரதராஜன் இம்மாபெரும் தொடர்ச்சியில் மற்றொரு கண்ணி.

இலங்கையிலும் இப்பாரம்பரியத்தை எஸ்.பொ, மு.தளையசிங்கம், குமார்மூர்த்தி, இன்றைய ஷோபாசக்தி, அ.ரவி, இளங்கோ (ஓரிரு கதைகள்) போன்றோரிடமும் நாம் பார்க்க முடியும். ஷோபா சக்தியிடமும், இளங்கோவிடமும் உள்ள விஷேசம் இவர்கள் காமத்தின் அரசியலையும், அரசியலில் பொதிந்திருக்கும் காமத்தையும் சித்தரிக்க முயலுபவர்கள்.

'மூன்றாம் சிலுவை' ஒரு வயோதிபருக்கும் ஒரு இளம்பெண்ணுக்கும் இடையேயான உறவை, காமத்தைப் பற்றிப் பேச முயலுகிறது. இந்நாவலைப் பற்றிப் பேசுவதில் நிறைய அசௌகரியங்கள் இருக்கின்றன. நிறைய இடர்களும் இருக்கின்றன. 'லோலித்தா'வை டெக்ரானில் வாசிப்பது எத்தனை அசௌகரியமோ அத்தனை அசௌகரியம் 'மூன்றாம் சிலுவை'யை இலங்கையில் வாசிக்க முயல்வது.

முதலாவது, இந்நாவலையோ இதன் ஆசிரியரையோ மிக எளிதாக குற்றம் சாட்டிவிட முடியும். இரண்டாவது, நாவலின் பின்புலமும் மிகுந்த பிரச்சினைக்குரியது. 'இந்நூற்றாண்டின் மிகப் பெரிய பேரழிவுகளும், அழித்தொழிப்புகளும் நிகழ்ந்து கொண்டிருக்கும் பிரதேசம் அது. நாவல் இந்த அவலங்களைப் பற்றியோ அதன் பிரச்சினைப்பாடுகள் குறித்தோ மௌனம் கொண்டிருப்பது மிகுந்த வருத்தத்திற்குரியது; மற்றும் சர்ச்சைக்குரியது.' இந்த ஒரு காரணத்தை முன்னிட்டே நாவலைப் பலர் நிராகரிக்கக்கூடும். அல்லது தட்டையாக புரிந்து கொள்ளவும் கூடும். என்றுமே ஒன்றை நிராகரிப்பது எளிது, புரிந்து கொள்வது கடினம். மற்றொன்று, ஒரு நாகரீக சமூகத்தில் ஒருவர் எதை எதைப் பற்றியெல்லாம் பேச வேண்டும் என்று மற்றொருவர் நிர்ப்பந்திக்க முடியாது. எனினும், 'தவறான காலத்தில் வந்து சேர்ந்து விட்ட இந்த துக்கத்தை' (நன்றி: சுந்தர ராமசாமி) புரிந்து கொள்வது முக்கியம்.

நாவல் சிறு சிறு அத்தியாயங்களாகப் பிரிந்து பதினாறு அத்தியாயங்களில் ஒரு வயோதிக தன்னிலையின் வேட்கையை, உடைமை மனோபாவத்தை சித்தரிக்க முயல்கிறது. விஜயராகவனுக்கு ஐம்பத்திரண்டு வயது. இருமுறை திருமணமானவர். மூன்று பிள்ளைகள். எவரிடமும் சுமுகமான உறவு இல்லை. மனக்கசப்பு. சொந்த வீட்டிற்கே ஏதோ அன்னியன் போல, ஏதோ வருகையாளர் போல சென்று வருபவர். அலுவலகத்தில் பணி புரியும் ஜுலியோடு ஒரு உறவு வாய்க்கிறது. உறவு காமத்தை பகிர்ந்து கொள்ளும் அளவிற்கு முன்னேறுகிறது. எட்டாண்டுகள் தொடரும் உறவில் காளான்கள் பூக்கத் தொடங்குகின்றன. ஜுலி, 'என்னை என்ன செய்யப் போகிறீர்கள்?' எனக் கேட்கிறாள். பதிலற்ற இக்கேள்வி ஜுலியை வேறு பாதையை நோக்கி உந்தித் தள்ளுகிறது. சமூக நெறிகளும், காமமும் விஜயராகவனை அலைக்கழிக்கிறது. விஜயராகவனின் உடமை மனோபாவம் ஜுலியை பீதி கொள்ளச் செய்கிறது. நாவலில் இது வெளிப்படையாக சித்தரிக்கப்படவில்லை. ஜுலியின் விலகலும் விஜயராகவனின் வேட்கை மிகுந்த பேதமையும் துயரமும் பிதற்றலும் தான் பின்வரும் பக்கங்கள். நாவலின் பிற்பகுதி – குறிப்பாக பதினான்காவது அத்தியாயத்திற்குப் பிறகான பக்கங்கள் - மிகுந்த பலவீனமானவை.

நாவலில் பெரும்பாலான மனிதர்கள் எதிர்மறையாகத்தான் சித்தரிக்கபட்டுள்ளார்கள். நாவல் கைக்கொண்டுள்ள எள்ளல் தொனி, அங்கதம் அல்ல, எள்ளல் தொனியே இதற்குக் காரணம். விஜயராகவனின் நண்பர்களான காட்டுப்புலி, செந்தூரன், ஞானசம்பந்தன் போன்றோர் பற்றிய குறிப்புகளை இதற்கு உதாரணமாக சொல்ல முடியும். நாவலில் பெண்கள் பற்றிய சித்தரிப்புகள் மிகுந்த ஆண் மையப் பார்வையும் தட்டையான புரிதலும் கொண்டவை. குறிப்பாக, தாதி மனோன்மணியைப் பற்றிய கதைசொல்லியின் சித்தரிப்புகள் ஆபாசத்தின் எல்லைக்குச் சென்று மீளுபவை.

நாவலின் சுவாரஸ்யமான விடயங்களில் ஒன்று, சமீபத்திய தமிழ்த் திரைப்படங்களை அது உவமானமாகப் பயன்படுத்திக் கொள்ளும் விதம். கதை சொல்லி மருத்துவமனை வாயிற்காப்போனிடம் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும் இடம் அதற்கு சிறந்த உதாரணம். ('அவளுடைய தலையில் இருக்கும் விக்கைக் கழற்றி விடுவேன் எனச் சொல்லு' என இந்த வேலுநாயக்கர் கூறத் தயங்கவில்லை). எரிச்சலின் போதும், துயரத்தின் போதும், ஏமாற்றத்தின் போதும் கூட தமிழ்த் திரைப்படங்கள் பிரக்ஞையற்று உவமானங்களாக வெளிப்படுவது சமூகவியல் ஆய்வுக்குரியது.

நாவலின் மற்றொரு சுவாரஸ்யம் மிகுந்த பகுதிகளில் ஒன்று, ஜுலியின் தமக்கையான ஜெனிக்கும் அவளுடைய மாணவனான ஜோதிக்குமிடையேயான உறவு. நாவலின் மையப்பாத்திரம் எதிர்கொள்ளும் அதே பிரச்சினையைத்தான் ஜோதியும் எதிர்கொள்கிறான். எனினும், அந்த உறவைப் பற்றிய கதை சொல்லியின் பார்வை மிகுந்த ஏளனம் கொண்டது என்பது இங்கு கவனிக்கத்தக்கது.

நாவலின் கவித்துவமான பக்கங்கள் என ஜுலியின் பாட்டியை முதியோர் விடுதிக்கு அழைத்து செல்லும் பகுதியைப்பற்றி சொல்லலாம். அப்பக்கங்களில் செயல்படும் மனம் நாவல் எங்கும் பரவி இருந்திருந்தால் இந்நாவல் மிக முக்கியமான படைப்புக்களில் ஒன்றாக மாறியிருக்கும். கதைசொல்லியின் தோழியான ஜினோவைப் பற்றிய பகுதிகளும் கவித்துவமானவை. ஜினோவின் தரப்பை புரிந்து கொள்ளும் மனம், பாட்டியை சகஜமாக உணரும் மனம் பிற தன்னிலைகளைப் பற்றிய புரிதலற்று இருப்பது வினோதமானதே.

நாவல் என்பது பல்வேறு தரப்புக்கள் அல்லது பல்வேறு நியாயங்கள் மோதும் களம். பன்முகத் தன்மையை வலியுறுத்தும் இலக்கிய வடிவம். பல்வேறு ஊடுபாவுகளின் வழியாக மனிதனின் இருத்தல் குறித்த வளர்ச்சி மாற்றத்தை பதிவு செய்யும் இலக்கிய ஆக்கம். தரிசனத்தை அல்ல இருத்தல் குறித்த ஞானத்தை கண்டுபிடிப்பது தான் நாவலின் கடமை. ஆஸ்திரிய படைப்பாளியான ஹெர்மன் ப்ரோச் நாவலை இவ்வாறு வரையறுக்கின்றார்: நாவலின் முக்கிய பண்புகளில் ஒன்று மனிதனின் இருப்பு குறித்த ஞானம். எந்த படைப்பொன்று இதை வெளிப்படுத்த தவறுகிறதோ, அது நெறி பிறழ்ந்த படைப்பு; அதை நாவல் என்று அழைக்க முடியாது.

ஒருமுறை பிரெஞ்சு விமர்சகரான செயிண்ட் ப்யூவ் ஃபிளொபெர் டின் மேடம் போவரியைப் பற்றி இவ்வாறு கூறினார்: இந்தப் புத்தகத்தைப் பற்றிய என்னுடைய விமர்சனம் என்பது, நல்லது என்ற அம்சம் மிக குறைவாகவே இதில் இடம்பெற்றுள்ளது. ஏன் ஒரு புத்தகம் ஆறுதல் தரும் விதத்தில் இருக்கக்கூடாது, வாழ்க்கையை முன்னேற்றும் வித்தில் இருக்கக்கூடாது என்று வினவினார். ஃபிளா பெர்ட் இதற்கு, தான் நாவல் எழுதுவது தன்னுடைய அபிப்பிராயங்களை நிறைவேற்றுவதற்கு அல்ல் விஷயங்களின் ஆன்மாவிற்குள் ஊடுருவுவதற்கு என்று பதிலளித்தார். ஃபிளொபெட்டின பதில் மிகத் தெளிவாகவும் எளிமையாகவும் ஒரு நாவலாசிரியனின் பணியை நினைவூட்டுகிறது. ஒரு கதாபாத்திரம் மீதான அதிருப்தி அல்லது விருப்பு வெறுப்புக்கள் அல்ல இங்கு பிரச்சினை. ஒரு கதாபாத்திரம் குரூரமானவனா அல்லது கருணைமிகுந்தவனா என்பதும் இங்கு பிரச்சினை அல்ல. ஒரு கதாபாத்திரத்திற்குள் அதன் ஆன்மாவிற்குள் ஒரு நாவலாசிரியன் எவ்வளவு தூரம் ஊடுருவியுள்ளான் என்பதே ஒரு நாவலாசிரியனின் தலையான பிரச்சினை.

மூன்றாம் சிலுவையை இப்பின்னணியில் வைத்துப் பார்க்கும் போது பலவீனமான படைப்பு என்றே ஒருவர் மதிப்பிடுவார். எனினும், மூன்றாம் சிலுவையின் சாதகமான அம்சம் அதன் ஆற்றொழுக்கான மொழி நடையிலும், மைய கதாபாத்திரத்தின் வேட்கை பற்றிய அதன் பதிவிலும் அடங்கியுள்ளது.

இன்று எல்லா தரப்புகளும் எதிர் தரப்பின் குரல்களையே பாவனையாக பேசி எதிர் தரப்பை மழுங்கடித்து கொண்டிருக்கும் வேளையில் மூன்றாம் சிலுவை பாவனையை கைக்கொள்ளாமல் கதாபாத்திரத்தின் பிரச்சினையை அதன் அழுக்குகளோடும் அதன் பலவீனங்களோடும் பதிவு செய்ய முயன்றிருப்பது அதன் சிறப்பம்சம். காமத்தின், சுயநலத்தின் கரிய சித்திரத்தை முன்வைக்கும் இந்நாவலின் நோக்கந் தான் என்ன? என்று எண்ணும் போது நபக்கோவின் 'லோலிதா'வின் நினைவு தவிர்க்க முடியாமல் எழுகிறது. லோலிதாவில் வெளிப்படும் தீமையின், வேட்கையின் அகண்ட சித்திரம் மூன்றாம் சிலுவையில் வெளிப்படவில்லை என்ற போதும் மூன்றாம் சிலுவையை லோலித்தாவின் பாரம்பரியத்தைச் சேர்ந்த படைப்பு என்று சொல்லலாம்.

லோலிதாவைப் பற்றி நபக்கோவிடம் 'உங்கள் நாவலின் நோக்கந்தான் என்ன?' என்று விமர்சகர்கள் கேட்ட போது நபக்கோ, 'ஒரு திரிந்த மனம் குறித்த உளவியல் ஆய்வுக்கு தேவையான பல தகவல்கள் இப்படைப்பில் உள்ள போதும் என்னுடைய நோக்கம் ஒரு பிறழ்வை முன்வைப்பதல்ல. ஒரு படைப்பை எழுதத் தொடங்கும் போது அதை என்னிலிருந்து வெளியேற்றுவதை தவிர வேறு எந்த நோக்கமுமில்லை' என்றார். மூன்றாம் சிலுவையும் அப்பாரம்பரியத்தைச் சேர்ந்ததுதான். உமா வராதராஜன் மூன்றாம் சிலுவையை தன்னிலிருந்து வெளியேற்ற முயன்றிருக்கிறார். ஆதலால் தான் அதன் கரிய சித்திரம் அதிர்ச்சியும் ஆபாசத்தையும் ஏற்படுத்துகிறது. புரிந்து கொள்ளலின் சிக்கலை நம் முன் சுமத்துகிறது.

பாலுணர்வுகள் மீது பலவகையான பாசாங்குகள் நிரம்பிய நம் கலாச்சார சூழலில் பாலுணர்வும் வன்முறையும் மனதின் அடியோட்டமாக ஓடுவதின் சித்திரத்தை அளிப்பதன் வழியாக மூன்றாம் சிலுவை கவனத்திற்குரிய படைப்பாக தன்னை நிலைநிறுத்திக் கொள்கிறது. மூன்றாம் சிலுவை காமத்தின் எளிய கரிய சித்திரம்.

நன்றி : காலம் - ஜுலை - செப்டெம்பர் 2010


பதிவேற்றம் - நவம்பர் 2010
© பதிப்புரிமை உமா வரதராஜன் - 2010
Designed By : HLJ Solutions