டாக்டர். எஸ். நஜிமுத்தீன்

ஒரு கடிதம்

அன்பின் உமா வரதராஜன் அவர்கட்கு,

உங்களது மூன்றாம் சிலுவை எனும் நாவலைப் படிக்கும் சந்தர்ப்பத்தினை வழங்கியமைக்காக முதலில் உங்களுக்கு எனது நன்றிகள். இன்றைக்கும் ஞாபகத்திலிருக்கிறது. பல வருடங்களுக்கு முன்னர் ஏற்கனவே அறிமுகமில்லாத உங்களது பத்திரிகைச் செவ்வியினைக் கண்டவுடன், அதில் என்னை நான் கண்ட உவகையுடன் உங்களுக்கு எழுதிய நீண்டமல்.

எது எப்படியிருப்பினும் உங்களது துணிச்சல் இமாலயமளவானது. ஒரு சிலபேருக்குத்தான் அந்தத் துணிச்சல் வரும். அவர்களை என்னால் பெயரிடமுடியும். ஆனால் சிலவேளை அவை ஒப்பீடாக மாறிவிடுமோ அல்லது ஒப்பிட முடியாதவையோ எனும் அச்சத்தால் தவிர்க்கின்றேன்.

ஏனெனில் மானிட சமூகம் மனிதனை அல்லது தான் சேர் பிறவிகளைக் கணிப்பிடுவதற்கு சில அளவுகோல்களை வைத்திருக்கின்றது. அதன் அளவிடைகளுக்குள் அடங்கவில்லையெனில் தறுதலையாக்கிவிடும்ளூ அல்லது தங்களைச் சுற்றி வேலியிடும். இதனை நீங்கள் அனுபவரீதியில் உணாந்திருக்கலாம்.

செம்மறியாட்டுக்கூட்டத்துள் ஒரு கலகம் செய்யும் ஆடு-கறுப்பாடு என்று கூறவில்லை- கலகம் செய்வது என்றே குறிப்பிடுகின்றேன். எந்தவிதமான ஆபத்துக்களையும், குறிப்பிடலாம். சவால்களையும் எதிர்கொள்ளும் திறனும், திறமையும் மிக்கதென அதனைக் குறிப்பிடலாம். ஏனெனில் அது இன்னும் தலை நிமிர்ந்து நிற்கிறது. யேசுவின் தோளில் போற்றப்பட்டபடி. யேசு ஒரு சிலுவையைச் சுமக்க, ஏனையோர் இரண்டாம் சிலுவையைச் சுமக்க அந்த ஆடோ மூன்றாவது சிலுவையைச் சுமப்பது போன்றதொரு பிரமை. ஆனால் எல்லோரும் அறையப்பட்டுத்தானாக வேண்டும். அது நியதி. அதில் மூன்றாவது சிலுவை சற்று வித்தியாசமானது, அற்புதமானது, ஏனென்றால் அது முளைத்த விதம் யாருக்கும் தெரியாது. அது எடுத்துச் செல்லப்பட்டதும், சுமக்கப்பட்டதும், நடப்பட்டதும், அறையப்பட்டதும் யேசுவின் ஆடு உயிர்த்தெழுந்து அம்பலப்படுத்தும் வரை யாருக்கும் தெரியாது. அந்தச் சிலுவiயைச் சுமந்தவனின், அறையப்பட்டவனின் வேதனையை அளவிடும் அளவுகோல் சமூகத்திடமில்லை. எனவே அது சாடும். தனது கையாலாகாத்தனத்தை மறைத்துக் கொள்வதற்கெனவே மற்றையோரைக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தும். நிறுத்தி, தண்டனை பெற்றுத்தரப் பிரயத்தனப்படும் ஃ பட்டிருக்கலாம்.

இருந்தும் ஒரு மனிதனது உணர்வுகளை வெளிக்கொணர பேச்சு அல்லது எழுத்து மிகச்சிறந்த ஓர் ஊடகம்தான். உள்ளக்கிடக்கையை வெளிப்படுத்துகின்ற போது அதற்கென ஒரு இலக்கணம் வகுப்பது பொருத்தமாகாது.

அந்தக் காலத்து மக்கள் செதுக்கிய கலை, இலக்கியங்களில் நாம் காணாத விசயங்களா என்று எம்மை ஒரு கேள்வி கேட்டுக்கொள்ளலாம். திருமணமே புரியாத வாத்சாயனர் எழுதியதால் காமசூத்திரம் சாகாவரம்பெற்றதோ? அவர் திருமணம் செய்திருந்தால் அது ஃ அவை அவர்களது அனுபவமாகக் கொள்ளப்பட்டு சந்தி சிரித்திருக்குமோ?

சீகிரிய, அஜந்தா, கிளிமஞ்சாரா ஓவியங்களும், கற்சிலைகளும் அதனைப் பிரதிபலிக்கின்றன.

ஒரு சில மனிதரைச் செதுக்குவதற்கு நாம் மட்டும் ஏன் ஒரே அச்சினைப் பயன்படுத்த வேண்டும். எனது அச்சு வித்தியாசமானது. ஏனெனில் நான் பார்த்த மாந்தரின் வடிவம் வேறானது என ஏன் கொள்ளமுடியாது.

கலைஞர்கள் தோலுரித்தும் வடித்தார்கள், அலங்கரித்தும் வடித்தார்கள். நாம் கண்டது கலையைத்தானே தவிர காமத்தையல்ல. உண்மையிலேயே காமத்தையே கண்டாலும் கூட கள்ளத்தனமாக ரசிப்பதில் நாம் கைதேர்ந்தவர்கள். வெளியில் கலா ரசிகர்கள்.

காதல் என்பது மிகவும் அழகானதோர் உணர்வு. சிறு குழந்தைகளிடம் கூட ஏற்படக்கூடிய ஒரு வகையான அற்புதமான வெளிப்பாடு. ஆனால் வெளிப்படுகையில் எதிர்வினையாற்றவல்லது.

சிறு குழந்தையை முத்தமிட, அதுவும் முத்தமிடும். இனிப்பு, சொக்லட், விளையாட்டுப் பொருட்களைக் கேட்கும், வாங்கிக் கிடைக்கும் போதெல்லாம் மீண்டும் முத்தமிடும். மடியில் துள்ளி விளையாடும். கூடவே தூங்கும். கதை கேட்கும்.

வயது வந்த பிள்ளைகளிடையே பகிரப்படுவதென்ன, இனிப்பா, பிஸ்கட்டா? அங்கும் முத்தம்தான். ஆனால் அது அந்த வயதில் ஒரு தீப்பொறி. மின்சாரத்தைக் கடத்தும் நரம்புக் கம்பிகளால் கடத்தப்பட்டு, கூடிய நெருக்கத்தில் நேர்-எதிர் மின்னேற்றங்கள் ஒன்றைநோக்கி ஒன்று மின்னலாய்த் தெறிக்கையில் உயிர்க்காடு பற்றிக் கொள்ளாதா?

அங்கே உயிர்மட்டுமல்ல, உடலே எரிந்து சாம்பலாகி மீண்டும் எழுகிறது. உண்மையிலேயே இதனை விபரிக்கும் வார்த்தைகள் இன்னும் எந்த மொழியிலும் கண்டுபிடிக்கப்படவில்லை. ஒரு சில கவிஞர்கள், கதைஞர்கள் தமது நடையில் எடுத்தியம்ப விழைந்துள்ளனர். இது இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என்பதனாலேயே பல்லாயிரம் வருடங்களாக இந்தக் கவிதைகள் ஒரே உணர்வினை, ஒரே அனுபவத்தினைப் புதிது புதிதாக ரசிக்கவும், ருசிக்கவும் முடியுமானபடி எழுதி வருகின்றன, வெற்றி பெறுகின்றன.

பிரளயம் பிடித்து ஓய்ந்து உச்சம் கண்ட அலைகள் அடங்கி உற்குவது போல் வாழ்வின் ஒவ்வொரு உணர்வும் உச்சம் கண்டு அடங்கி விடுகின்றன.

ஒரு வேறு விதமான உணர்வொன்றின் உச்சமாக இந்த மூன்றாவது சிலுவையைப் பார்க்கின்றேன். பரிமாறப்பட்டவை என்னவோ குழந்தைகளிடையே பரிமாறிக் கொள்ளப்பட்ட இனிப்புகளும், விளையாட்டுப் பொருட்களுமே. ஓங்கி அறையப்பட்ட ஆணிகள், மறு குழந்தை வயதுக்கு வந்துவிட்டதனை உணராததால், எதிர்பாராத நேரத்தில் கன்னத்தில் விடப்பட்ட அறைகள்தான். சிறு குழந்தையானாலும் வலியில்லாமல் ஓர் அடியா? அதுவும் கையில் கிடைத்த வேறோரு தடியால்!

இலய்பான உணர்வு ஓங்கி, உச்சம் கண்டிருக்கிறது. ஒரு சில பற்றைக் காடுகள் மீண்டும் பற்றிக் கொள்ளக்கூடும்.

இன்னும் பல உணர்வுகள் தமது ஓட்டிற்குள் தலையையும், கால்களையும் மேலும் இழுத்துக் கொண்டு, தங்கள் மனையாட்டிகளிடம் தங்களது கற்பின் தூய்மை குறித்தும், பலம் குறித்தும் கதையளந்து கொண்டிருக்கவும் கூடும்.

நான் மட்டும் மீண்டுமொருமுறை என்னைக் காண்கின்றேன்.

வாழ்க, வளர்க எம் நட்பு.
அன்புடன்
டாக்டர். எஸ். நஜிமுத்தீன்


பதிவேற்றம் - ஜூலை 2010
© பதிப்புரிமை உமா வரதராஜன் - 2010
Designed By : HLJ Solutions