அட்சராயூ

இதையெல்லாம் ஏன் எழுத வேண்டும்?

தமிழ் வாசகப் பரப்பில் நன்கறியப்பட்ட பலரும் தேடி வாசிக்க விருப்பப்படும் எழுத்தாளர்களில் ஒருவரான உமா வரதராஜனின் முதல் நாவல் மூன்றாம் சிலுவை, சிலரால் அதிருப்தியுடன் எதிர்கொள்ளப்பட்டிருக்கிறது; மிகப் பலரால் கண்டுகொள்ளப்படாதது போன்ற மௌனத்துடன் விடப்பட்டிருக்கிறது.

இங்கு வெளியிடப்படும் எந்தவொரு புத்தகத்தையும் கிணற்றுக்குள் வீழ்ந்துவிட்ட கல்லாய் ஆக்கிவிடும் நம்மூர் இலக்கியச் சுற்றுச்சூழல் பற்றி மு.பொ., சிவகுமாரன் போன்ற மூத்தவர்களிடம் கேட்டால் ஒரு பாட்டம் சொல்லித் தீர்ப்பார்கள். அது உள்ளதுதான்.

ஆனால், மூன்றாம் சிலுவைக்கு வேறு தடங்கல்களும் இருப்பதாகத் தெரிகிறது. ஆடையை உருவிவிட்ட உரையாடல்கள், விவரணைகள், முறைதவறிய தொடர்பொன்றை நியாயப்படுத்துவது மட்டுமல்லாமல் அதை ஏற்றுக் கொண்டு பரிதாபப்படவும் கோருகிறதோ என்ற சங்கடத்திலும் பலர் மௌனமாயிருக்கக்கூடும்.

இந்த சங்கடத்தை மேலும் அதிகப்படுத்தும்படியாக, இது எழுதியவரது சொந்த வாழ்க்கையாக இருக்குமோ என்று சந்தேகப்படும் படியான உண்மைத் தன்மைக்கு நெருக்கமான எழுத்து நடையும், பாத்திரவார்ப்பும் இருப்பதைச் சொல்ல வேண்டும்.

உமா வரதராஜனின் சிறுகதைகளும் கூட நிஜமும் புனைவுமாகத் தோற்ற மாயம் கொடுக்கின்ற மொழி விளையாட்டுகள்தாம்! நிஜத்தன்மையைக் கொண்டு வருவதற்காக பல்வேறு உத்திகளும் அவர் வசமுண்டு. நமக்குத் தெரிந்த நிலக்காட்சியையும். அறிந்த மனிதர்களையும் பற்றியே சொல்லிக் கொண்டிருப்பதாக உணர வைக்கிறார். நம் வாழ்வில் ஊடுருவியிருக்கும் தமிழ் சினிமாக் கூறுகளை இவரளவிற்கு யாரும் கதைகளில் கொண்டு வந்ததில்லை. நாங்களெல்லாம் பெருமளவுக்கு தமிழ் சினிமாவினால் உருவாக்கப்பட்டவர்கள் என்பதைக் காட்டுவது கூட கதைகளில் உண்மைத் தன்மை கூடுவதற்கான உதாரணமே!

நாவலுக்கான முன்னுரையில் பிரபஞ்சனும் ஓர் உதாரணம் தருகிறார். ராகவனின் ஆண்திமிர் வெளிப்பாடும், சமூகத்தில் நிலவும் பொருண்மையின் ஒரு பகுதிதான் என்கிறார். இந்த நாவல் பெண்களை ஆவேசமாக எதிர்வினையாற்றத் தூண்டும் என்று பதிப்பாளர்கள் குறிப்பிடுகிறார்கள்.

'ஒரு பொம்பளையான உனக்கே இவ்வளவு கொழுப்பிருந்தா, ஆம்பளையான எனக்கு எவ்வளவு இருக்கும்?... கொழுப்பு கொழுப்பு?...' என்று கைவிரல்களை உள்ளே திருப்பி மேலும் கீழும் ஆட்டிச் சொன்னால் தியேட்டர் அதிர விசில் எழுப்பும் சமூகம்தானே இது? இந்த சமூகத்தின் ஆண்மை என்பது, ஜுலிக்கு எதிரிலேயே இன்னொரு பெண்ணை இழுத்துப் போய் நிறுத்தி வசனம் பேசிவிட்டு, ஸ்டைலாக புதியவள் தோளில் கைபோட்டுத் திருப்பிச் செல்வதல்லவா? அப்படிப் பார்த்தால், விஜயராகவன் பெண்ணியர்கள் சீற்றம் கொள்ளுமளவுக்கு ஆண்திமிர்க்காரரல்ல.

குற்றவுணர்வு, வேதனை, அன்பின்மை, துரோகம் ஆகியவற்றால் ஆட்டிப் படைக்கப்படும் உருக்குலைக்கப்படும் மனித உளவியலை துருவி ஆராயும் நாவலாக இதைப் படிக்க முடியும். எழுதியவரின் சொந்த வாழ்வைத் தேடும் கவலை நமக்கெதற்கு? எழுதிய பிறகு அவர் இறந்துவிடுகிறார் என்பதை ஒப்புக் கொண்டு விடலாம், என்றால், விஜயராகவன் பற்றிய விமர்சனத்தை விஜயராகவனிடமிருந்தே தொடங்கலாம்.

கவிஞர் தேவதேவன் கவிதையொன்றில்.
'இரை பொறுக்கவும்
முட்டையிடவும் மட்டுமே
மண்ணுக்கு வரும்
வான்வெளிப் பறவை ஒன்று'
என்பதாகத் தன்னை உணர்வது போல ஒரு வரி வரும். அப்படி வந்து தவறி இங்கு தங்கிவி;ட்டவர் போலவே விஜயராகவன் நடவடிக்கைகள் உணர்த்துகின்றன. வெறும் காமத்திற்கு வடிகாலாக ஜுலியைப் பயன்படுத்திக் கொண்டவராக இருந்தால் வலியேது? இந்த நாவலேது?

மூன்றாம் சிலுவை, ராகவன் தன் மனதில் தானே சுமப்பதுதான். யேசுநாதர் போல மற்றவர் பாவங்களை வாங்கிக் கொண்டு பிறருக்காகச் சுமக்கும் சிலுவை அல்ல. மூன்றாவது பெண் ஒருவர் மீதும் அபரிமிதமான அன்பும் வேட்கையும் கொண்டு விடுவதால் ராகவன் தனக்குள் சுமக்கும் துயரம்.

ஜெரூசலத்தில் யூதர்கள் அழுகைச் சுவர் ஒன்றைக் கட்டி வைத்திருப்பதாகவும். அதில் போய் முட்டி முட்டி அழுது ஆறுவதாகவும் சொல்லப்படுகிறது. அழுது கரைவதுதான் மனக்கறைகள் போக்கும் மாமருந்து. விஜயராகவனும் அழுகிறார். கரைகிறார். ஆக்ரோசப்படுகிறார். கழிவிரக்கம் கொள்கிறார். சமூக அங்கீகாரமற்ற உறவுக்கு ஆட்பட நேரும் பெண்ணும், அவள் தாயும் தங்களைக் காத்துக் கொள்ள என்ன கவசங்கள் எல்லாம் பூண நேரும் என்பதை உணர்ந்து கொள்ளாதவராக அல்லது தாங்கிக் கொள்ள மாட்டாதவராக வான்வெளிப் பறவை ஒன்றின் மனதைக் காட்டுகிறார். எந்த மனதாக இருந்தால் என்ன, பெருமளவுக்குத் தனக்குச் சார்பாகவே சிந்திக்க முடியும் என்பதே நிஜம்! எனவே எப்போதும் பிறரால் துன்பப்படுவதே அந்த மனதுக்கும் விதியாகி விட்டது. அழுதல், அரற்றுதல், ஆரோடும் பகிர்தல், எழுதுதல், பாடுதல் எல்லாம் சொந்த மனதின் துன்புறுத்தலிலிருந்து தப்பித்துக் கொள்ளும் முயற்சிகளே.

வாழ்க்கை என்பது கடைசி வரை கற்றுக் கொண்டேயிருக்க வேண்டிய ஒன்றுதான் போலும். மனைவியை, சகோதரனை, பெற்றோரை, நண்பர்களைக் கூட எப்படி என்று கடைசிவரை கற்றக் கொண்டே இருக்க வேண்டியிருக்கிறது. ஒவ்வொரு மனதும் ஒவ்வொரு புதிரே. நமது சொந்த மனதின் போக்குகளே நமக்குப் பிடிபடுவதாய் இல்லை.

அப்படியான கோடி கோடி மனங்களில் ஒன்று இந்த நாவலின் மூலமும் நமக்கு தெரியவருகிறது. சமூகத்தின் ஒழுக்க நியதிகளைக் காரணமாக வைத்து இதை நாம் புறக்கணித்துவிட முடியாது. ஒழுக்க நியதிகள் எனப்படுவதும் எப்போதும் ஒரே மாதிரியாக இருந்து வருகிறதா? இவை குறித்த இந்த சமூகத்தின் நிலைப்பாடு நாம் ஏற்றுக் கொள்ளக் கூடியதுதானா என்றும் கேட்டுப் பார்த்துக் கொள்ளலாம்.

ரகசியமாய் நடப்பவற்றை, அறிந்து கொண்டும் அவற்றைக் கண்மூடி அனுமதிக்கும் சமூகம், பகிரங்கத்தில் ஏற்க மறுக்கிறது. இதுவே மனிதர்களை இரட்டைவேடம் போட நிர்ப்பந்திக்கிறது. நாம் செய்ய விரும்பி ஆனால் செய்யப் பயந்த – வாய்ப்புக் கிட்டாத தப்புகளைப் பிறர் செய்யும் போது கண்டிக்க முடிகிறது. சமூக ஒழுக்கத்தின் காவலர்களாகவும் நம்மை நியமித்துக் கொள்ள முடிகிறது. மீறுபவர்களை ஒடுக்கியோ விலக்கியோ தீர்ப்பளிக்கவும் இயலுகிறது.

அதாவது, சமூகம் காலத்திற்குக் காலம் குற்றம் என்று வகைப்படுத்தி வைத்திருக்கின்ற ஒன்றில் - நாம் மாட்டிக் கொள்ளத் தேவையேற்பட்டிருக்காத ஒரு தப்பில் மாட்டிக் கொண்டிருப்பவர் மீது நாம் தீர்ப்புச் சொல்வது சுலபமாகி விடுகிறது. அப்போது சமூகத்தின் கௌரவ வேடங்களில் ஒன்றாயிருக்கும் நாம், வழிதவறிய ஆட்டுக்குப் புத்திமதிகள் வழங்கவோ தள்ளி வைக்கவோ தயங்குவதில்லை. ஆனால், நாங்கள் மீறவிரும்புகின்ற சமூக நியதி என்று வரும்போது. இந்த சமூகம் மிகவும் கட்டுப்பெட்டித் தனமானதாக பிற்போக்குத் தனத்திலிருந்து விடுபடாததாக நம் தீவிர கவலைக்குரியதாகி விடுகிறது. இந்த சமூகத்தின் பிற்போக்கான மூடப்பிடிவாதங்களை மாற்றியாக வேண்டும் என்கிற புரட்சிகர ஆவேசமும் அக்கறையும் நமக்கு வருகிறது.

வேறு வேறு சந்தர்ப்பத்தில் வௌ;வேறு மூன்று பெண்களிடம் அன்பு செலுத்திய ஒருவனைக் குற்றவாளியாக்கும் சமூகநியதியில் உள்ள நியாயம் என்னவாக இருக்கும்? அல்லது அதிக வயது வித்தியாசம் உள்ள இருவர் காதல் கொள்வதில் அருவருப்படைய என்ன உண்டு? இலக்கியம் என்று வருகையில் அந்த மனிதனது தத்தளிப்புகளுக்கும் தாராளமாய் இடமுண்டே. இவ்வாறான அனுபவங்கள் ஏதும் லபித்திராதவர்கள் கூட, இப்படியெல்லாம் ஏன் நடக்கிறது, மனிதர்கள் தத்தம் மனங்களாலும் சக மனிதர்களாலும் எப்படியெல்லாம் அலைக்கழிக்கப்படுகிறார்கள் என்பதை அறிந்து கொள்வது ஒன்றுந்தப்பாயிராது. அவன் காதல் செலுத்திய முதலிரண்டு பெண்களின் தரப்பும், பிள்ளைகளின் தரப்பும், நண்பர்களினதும் தரப்பும் இன்னும் என்னவெல்லாமோ நாவலில் வரவில்லை என்பது உண்மைதான். ஜுலியின் தரப்பு என்னவென்று அறிவதையும் வாசகர்கள் விரும்பக்கூடும். இவ்வாறு பல தரப்புகளின் மோதலும் அதனூடான தரிசனமும்தான் நாவல்களின் இலக்கணம் என்று ஜெயமோகன் சொல்வதையும் கேட்டுக் கொள்ளலாம். ஆனால் அதையெல்லாம் நிபந்தனையாகப் போட அவசியமிருப்பதாகத் தெரியவில்லை. ஜெயகாந்தன் போல மறுதரப்புகளுக்கும் தனித்தனியாக நாவல்கள் எழுதலாம். அதை வேறு யாராவது கூடச் செய்யலாம்.

'உன்னைப் போலவே பிறரையும் நேசி' என்று யாரோ சொல்லியிருக்கிறார்கள். நேசிப்பது பிரச்சினையில்லை ஆனால் நம்மைப் போலவே மற்றவர்களும் இருக்க வேண்டும். நாம் நம்புகிற ஒழுக்கநியதிகளுக்குட்பட வேண்டும். இல்லாவிட்டால் அவர்கள் இவ் உலகில் வாழத் தகுந்தவர்களில்லை என்று பிடிவாதம் பிடிக்குமளவுக்கு அதைப் பின்பற்றுவதுதான் சரியில்லை. ஃபாசிஸம் என்ற மிகப்பெரிய வன்முறையின் ஆரம்பப் புள்ளி இந்த இடம்தான். மனிதனின் இயல்பான இயங்குதல்களை மறுத்து ஒடுக்குவதன் மூலமே ஆதிக்க நிறுவனங்கள் பெருமளவு அதிகாரத்தைத் தம்மிடையே குவித்துக் கொள்கின்றன. ஒழுக்க பயங்கரவாதம் மற்றெந்த பயங்கரவாதத்துக்கும் சளைத்தல்ல.

சமூகம் விலக்கியிருப்பவை பற்றியெல்லாம் ஏன் எழுத வேண்டும் என்று ஒழுக்கம் குறித்த பதற்றத்தோடு கேட்பவர்களுக்கு ஜி. நாகராஜன் பதில் ஏற்கனவே இருக்கிறது.

'இப்படியெல்லாம் ஏன் நடக்கிறது? என்று வேண்டுமானால் கேளுங்கள். இதையெல்லாம் ஏன் எழுதவேண்டும்? என்று கேட்டுத் தப்பித்துக் கொள்ளப் பார்க்காதீர்கள்'

இப்படியெல்லாம் நடந்து கொண்டுதானிருக்கிறது. இதைவிட மோசமாகவே நிஜத்தில் எல்லோரும் உரையாடிக் கொண்டிருக்கிறோம். விலக்கப்பட்ட கனியைப் புசித்ததாலேயே உண்டானதாகச் சொல்லப்படும் மனித குலம் எப்படி விலக்கப்பட்ட சொற்களைப் பேசாது விடமுடியும்? எழுத்துக்கு மட்டும் என்ன புனிதத் தன்மை? ஒருவேளை மதத்தின் பணியையே அதுவும் செய்ய எதிர்பார்க்கிறோமா என்ன?

இலட்சிய வாழ்க்கை, இலட்சிய புருஷர்கள் எல்லாமே இ;ந்த மொழியால் ஆக்கப்பட்டவைதானே! மொழிதான் அவற்றை உடைத்தும் பார்க்கும்.

காமத் துய்ப்புக்கு மட்டும் தடைவிதிக்கும் சமூகமல்ல இது. காதலுக்கும் இங்கு தடைகள்தான் உண்டு. இளம்பருவக் காதலை அனுமதிப்பதில்லை; சாதி மாறிக் காதலிப்பதை, கல்யாணமான பிறகு வேறோருவரைக் காதலிப்பதை, ஒருவர் பலபேரைக் காதலிக்க முடிவதை, ஒரே பாலினரிடம் காதல் வருவதை... எல்லாம் அனுமதிக்காதது போலவே வயது வித்தியாசம் கொண்டவர்கள் காதலிப்பதையும் சமூகம் விரும்புவதாய்க் காட்டிக் கொள்வதில்லைதான், என்ன செய்ய முடியும்? எல்லாக் காதலையுமே கள்ளத் தொடர்பாகத்தான் கண்காணிக்கிறது சமூகம். இந்த சமூகம் சரியாக இல்லை என்பதிலிருந்துதான் நாம் தொடங்க வேண்டியிருக்கிறது.

தனது எதிர்ப்புணர்வுகளையெல்லாம் நகைச்சுவைக்குள் ஒளித்து வைத்துக் கொள்ளத் தெரிந்தவர் என்று கருதியிருந்த உமா வரதராஜன், தனது முதல் நாவலில் ஒருவித அறம் பாடும் கோபத்தோடு வெளிப்பட்டிருக்கிறார். இதிலும் அவரது எழுத்தின் வசீகரமான நையாண்டியை அவர் கைவிட்டுவிடவில்லை என்றபோதும், அதை மீறி வெளிப்படும் கோபமும் காயப்பட்ட கதறலும், இது அவரது கதைவிளையாட்டுகளுள் ஒன்று என்று பார்க்க விடாமல் தடுக்கின்றன. இருந்தாலும், விஜயராகவன் தனது மனப்பாரத்தை இறக்க முற்படும் ஜினோ தவிர்ந்த ஏனைய இலக்கிய நண்பர்கள் வரும் பகுதியில் பழையபடி தன் கிண்டலை மேலுக்குக் கொண்டுவந்து விடுகிறார். 'சிந்திக்கின்றவர்களுக்கு உலகம் ஒரு நகைச்சுவை நாடகம். உணர்கிறவர்களுக்கு உலகம் ஒரு துன்பியல் நாடகம்' என்றும் யாரோ சொல்லியிருக்கிறார்கள். இந்த நாவல் அவரது துன்பியல் நாடகம் என்றே நம்பச் சொல்லி வற்புறுத்துகிறது.

ஆனால், எழுதியவரை மறந்துவிட்டுப் படிப்பதன் மூலமே இந்த நாவலை நாம் சரியான முறையில் நெருங்க முடியும் என்பது என் எண்ணம்..

'உமா வரதாராஜனின் இந்த நாவல் ஆண்களை ரகசியமாக மகிழ்ச்சி கொள்ளச் செய்யும்' என்று பின்னட்டையில் பதிப்பாளர்களும் குறிப்பிட்டிருப்பதால் இந்த அவஸ்தைகள் பலருக்குமுள்ளதுதான் என்றே ஊகிக்க முடிகிறது. ஆதலால் எழுதுகிறவரின் வரலாறா அல்லது வாசித்துச் சிலாகிக்கிறவர்களினதும் விருப்பமோ அனுபவமோதானா என்றெல்லாம் நம்மை ஒழுக்கக் காவலர்களாய்க் காட்டிக் கொள்வதில் முந்துவதை விட இந்த மாதிரியான எழுத்து முறையின் தேவை என்ன என்று சிந்திப்பது உபயோகமானது.

இலக்கியம் மனிதர்களையும் வாழ்வையும் அறிந்து கொள்வதில் பெரும் பங்காற்றுகிறது என்பதன் காரணங்களை முன்னுரையில் பிரபஞ்சன் விளக்குகிறார். அடுத்த மனிதர்களை அறிவது அல்லது அதற்கு முன் அவரவர் மனதின் விசித்திரக் கூத்துகளை, நமக்குத் தெரியாமலே நமக்குள் ஒளிந்திருந்து சமயங்களில் வெளிப்படும் மர்மங்களை என நாம் தெரிந்து கொள்ள இன்னும் எவ்வளவோ மிச்சம் இருக்கிறது என்பதுதான் ஒவ்வொரு புதுக்கதையையும் படிக்கும் போது புரிகிறது. இதைத் தெரிந்து கொள்ள நேர்மையுடன் தன்னை எழுதுதல், உடலை எழுதுதல் என்பன பொதுவாக மனிதர்கள் அனைவருக்குமான கொடையாகத்தான் பார்க்கப்பட வேண்டும்.

தமிழில் நான் அறிந்து சாருநிவேதிதா இதைத் துணிச்சலுடன் செய்து வருபவராக இருக்கிறார். அதற்கான எல்லாச் சிலுவைகளையும் அவரும் சுமக்கிறார் என்றே தெரிகிறது. அதாவது அவரது உன்னத சங்கீதம் சிறுகதை அல்லது ஸீரோ டிகிரி, ராஸலீலா நாவல்கள் போல தன் கதையென நம்ப வைத்து, அதனுள்ளே ஒருபால் புணர்ச்சி மற்றும் ரகசிய பாலியல் விருப்பங்களை எல்லாம் தன்மைப் புனைவாக வெளியிடுவதைக் குறிப்பிடுகிறேன். ஈழத்தில் அந்தத் துணிச்சலும் தன்னைச் சிதைத்தலும் உமா வரதராஜனின் இந்த நாவலிலேயே வெளியாகியிருக்கிறது. ஒருவகையில் இது மரணத் துணிச்சல்தான். இலக்கிய நேர்மைக்காக, பதுக்கப்பட்டிருப்பவற்றைப் பேசி அதிகாரத்தைத் திணற வைப்பதற்காக, மனதை – உடலை நேர்மையுடன் திறந்து வைக்கும் முயற்சியில் சிலுவை சுமக்கத் தயாராகும் தியாகம் இது. சிலுவை சுமப்பது மட்டுமல்ல, மீளுயிர்க்க விடாது கொன்றுவிடத் துணியும் இச்சமூகத்தின் மூர்க்கத் தண்டனைக்கும் தயாராயிருக்க வேண்டும்.

நிறுவனப்பட்டிருக்கும் அதிகாரம், இறுகிப் போயிருக்கும் மூடத்தனம், உடலை-மனதை ஒடுக்கும் கருத்தியல்கள் ஆகியவற்றை உடைக்கும் வழியில், முதலில் தன்னை உடைத்துக் கொள்ளும் எழுத்து முறைக்கும் தேவை இருக்கிறது. விடாமல் எழுதி இதன் அவசியத்தை உணர்த்திச் செயற்படாவிட்டால் இதுநாள் வரை எழுதி உருவாக்கிய இலக்கிய ஸ்தானத்தை இழப்பது உட்பட பல்வேறு இழிவுகளுக்குத் தயாராக வேண்டும். அதுவும் ஒருவகையில் சாவுதான்.

நாவலிலும், விஜயராகவனுக்கு இறுதியில் சாவுக்குரிய நோய் வருகிறது. ஆனால் அவனுக்கு அதற்கு முன்னரே நிகழும் மனதின் சாவுதான் மிகவும் பயங்கரமானதாகத் தோன்றுகிறது. ஏனென்றால் அப்பொழுது சாவு அவன் கண்முன் உயிருடன் உலவுகிறது. அதுபற்றிச் சமூகத்தின் மீது வைக்கப்படும் விமர்சனமாக இந்த நாவலைப் படிக்க முடியும்.

 


பதிவேற்றம் - ஜூலை 2010
© பதிப்புரிமை உமா வரதராஜன் - 2010
Designed By : HLJ Solutions