நண்பர் ஆனந்தனைப்பற்றி எழுதாமல், அவர் மொழி பெயர்த்த கதைகளைப்பற்றி மட்டும் கூறுவது பொருத்தமானதாகப் படவில்லை.

ஆனந்தன் மறைந்து போன சம்பவம் நேற்று நிகழ்ந்தது போலவும் இருக்கின்றது. ஒரு யுகம் கழிந்தது போன்றும் உள்ளது. ஒரு குருவி பறந்த வெற்றிடமாயும் அது தெரிகிறது, ஒரு விருட்சம் சாய்ந்த வெளியாகவும் தென்படுகின்றது.

எறும்பைக் கண்டால் கூட விலகிச் செல்லும் ஆனந்தன் போரின் நிமி;த்தம் காரணம் தெரியாமலேயே பலியானான். அப்படிப் பலியாக அவன் ஒன்றும் சத்திரிய வம்சத்தைச் சேர்ந்த அரவானோ, கடோத்கஜனோ, இந்திரஜித்தோ, கர்ணனோ அல்ல. ஒரு சாமான்ய குடிமகன். ஆனந்தன் என்ற எனது அந்த நண்பன், வத்சலாவின் அன்புக் கணவன், இரண்டு மதயானைகளின் மோதலுக்கு நடுவே சிக்கி, இறந்து போன பஸ் பயணிகளுள் ஒருவன்.

அந்த துரதிருஷ்டம் நிகழந்த 1995 இன் டிசம்பர் மாதமும், 5ம் திகதியும் எனக்கு இன்னமும் ஞாபகமிருக்கின்றது. அது ஒரு மழைக் காலம். மார்கழி மாதத்தின் ஈரப் பளபளப்பு மரஞ்செடி கொடியையெல்லாம் பற்றியிருந்த வருடத்தின் கடைசிப் பகுதி.ழுஃடு பரீட்சை எழுதிவிட்டு திரும்பிக் கொண்டிருக்கும் வெள்ளைச் சீருடையணிந்த பிள்ளைகள் நீர் சொட்டும் குடைகளுக்குள் தங்களை ஒடுக்கிக் கொண்டு வீடுகளுக்கு பாட்டம் பாட்டமாக விரைகின்றார்கள்.

வாடிக்கையாளர் நடமாட்டம் குறைந்த எனது நகரத்தின் கடைகளெல்லாம் வெறிச்சோடிப் போய்க் கிடக்கின்றன. வாசற் படியெல்லாம் ஈரமணல். கடை சிப்பந்திகள் தத்தம் வாசல்களில் நின்று வீதியை வேடிக்கை பார்கின்றனர். நனையும் கால் நடைகள் ஒதுங்குவதற்கு இடம் தேடுகின்றன. அப்படி ஒரு பொழுதில்தான் ஆனந்தன் வெகு வேகமாக என்னை தேடி வந்தார்.

தொழில் நிமி;த்தம் அவர் தினசரி சம்மாந்துறைக்கும், மட்டக்களப்புக்குமாக 112 கிலோமீற்றர் பயணம் செய்யும் ஒருவர். அவர் தபால்காரராக இருந்தும் சீருடையணிந்ததை ஒரு போதும் கண்டதில்லை.அவர் பயணம் செய்யும் பஸ்ஸில் இடைத்தரிப்பு நிலையமாக அமைந்த எனது நகரத்தில் பஸ் தரித்து நிற்கும் 15 நிமிட இடைவெளிக்குள் அவர் என்னை சந்தித்து நாலைந்து வார்த்தைகளைக் கதைத்துச் செல்வது வழக்கம்.

டிசம்பர் 5ஆம் திகதியும் அவர் அவ்வாறே என்னை சந்திக்க வந்தார். சிறிது பேசி விட்டு அவசர அவசரமாக விடைபெற்றுச் சென்ற அவரை வாசல் வரை சென்று வழி அனுப்பி வைத்தேன், அவர் கையசைத்த படி சென்றார். அதுதான் அவருடைய கடைசி கையசைப்பு என்றோ அவருடனான இறுதிச் சந்திப்பு என்றோ எனக்கு அப்போது தெரியாது. மரணத்தின் அபசகுனங்கள் எதுவும் தெரியாத அந்த பிற்பகல் வேளையில் சுமார் 45 நிமிடத்துக்குள் அந்த துரதிருஷ்டம் நடந்து முடிந்து விட்டது.
இது நிகழ்ந்து இன்றைக்கு ஏறத்தாழப் 15 வருடங்களாகி விட்டன.

அவர் இன்றைக்கு இருந்தால் எப்படியிருப்பார் எனக் கற்பனை பண்ணிப் பார்ப்பேன். 61 வயது நிரம்பிய அவர் ஓய்வூதியம் பெறும் ஒரு முன்னாள் தபால்காரராக இருந்திருப்பார். ' ஒருவர் மனதை ஒருவர் அறிய உதவும் சேவையிது' என்ற டி.எம்.எஸ்ஸின் பாடல் வானொலியில் போகும் போது தன்னையறியாமல் அவர் முகத்தில் புன்னகை அரும்பியிருக்கும். அவர் தபாற்காரனாக உலாவித்திரிந்த சொறிக்கல்முனையின் மக்கள் - முக்கியமாக லேசாக அரும்பிய தாடியுடன் இருக்கும் எல்மோ ஃபாதர் அவருடைய ஞாபகத்தில் வந்து போகக்கூடும்;. எண்ணெய் காணாத அந்தத் தலைமுடி இலையுதிர் காலத்து மரம் போல சற்றுக் கொட்டி பின்வாங்கியிருக்கும். மேலுதட்டை எப்போதும் மறைக்கின்ற அந்த அடர்த்தியான மீசையில் நெற்கதிர்களுக்கிடையே களை போல நரை புகுந்து புறப்பட்டிருக்கும். லேசாகத் தொப்பை போட்டிருக்கும். தாமரையையும், கணையாழியையும் தூக்கி திரிந்த கைகளில். இப்போது கவிதாசரணோ, தீராநதியோ, காலச்சுவடோ இருந்திருக்கும். வாடகை வீட்டை விட்டு வெளியேற அடம்பிடிக்கும் குடியிருப்பாளன் போல இப்போதும் கண்களில் அந்தத் கோவைப்பழச் சிவப்பு நிரந்தரமாக தங்கியிருக்கும்.

இன்றைக்கு அவர் இருந்தால் என்ன செய்து கொண்டிருப்பார் என்பதும் ஒரு முக்கியமான கேள்வியாகவே படுகிறது.

இன்றைய சூழலில் புத்திசாலித்தனமானது விமர்சனமா அல்லது மௌனமா என்ற கேள்விக்குப் பதிலாக அவர் இரண்டாவதைத்தான் தேர்ந்தெடுத்திருப்பார். என்பதில் எந்த ஐயமும் இல்லை. அவர் வயது போன பேராசிரியர் அல்ல என்பதால் அத்தகைய முடிவொன்றை எடுக்க அவ்வளவு கஷ்டப்பட்டிருக்க மாட்டார்.

1974 இல் தான் ஆனந்தனுடன் எனக்குப் பரிச்சயம் ஏற்பட்டது. அப்போது எனக்கு 18 வயது. காலரதம் என்ற பெயரில் இலக்கிய சஞ்சிகை ஒன்றை அப்போது வெளியிட்டுக் கொண்டிருந்தேன். முதலாவது இதழ் வெளிவந்த சில நாட்களில், ஒரு காலை வேளையில் எனது வீட்டின் வாசல் கதவைத் திறந்து கொண்டு ஒருவர் உள்ளே வந்தார். ஆடை அலங்காரங்களில் அவ்வளவு அக்கறை கொள்ளாத தோற்றம், குடிகாரர்களுக்குரிய சிவந்த கண்கள், எண்ணெய்யைக் கண்டு பல மாதங்களாகிப் போன தலைமுடி, குள்ளமான தோற்றம், கரு முறுவென்ற அடர்த்தியான மீசை.

என் அனுமதியை எதிர் பார்க்காமலேயே உரிமையுடன் கூடத்திலிருந்த இருக்கையில் அமர்ந்து கொண்டு பளீர் என்ற சிரிப்புடன் 'நான் ஆனந்தன்' என்றார்.

முன் பின் பரிச்சயம் அற்ற அவருடன் என்ன பேசுவது என்று தெரியாமல் நான் தடுமாறிக் கொண்டிருந்தேன். அவர் குடிப்பதற்காக ரூபா கேட்டு வந்தவர் என்ற முன்னெச்சரிக்கையுடனான மனப்பதிவே என்னுள் அப்போது உருவாகியிருந்தது. அவரை சமாளித்து அனுப்பும் சம்பாஷணை குறித்து மனதுக்குள் ஒத்திகை பார்த்துக் கொண்டிருந்தேன்.

என்ன முட்டாள்தனமான முற்கணிப்பு.

ஆனந்தன் என்ற அந்த அசாதாரண மனிதன் என்னிடம் அன்று கேட்டது இதைத்தான்.
'என்னைத் தெரியாதல்லவா ? உங்கள் காலரதம் கிடைத்தது. என்னோடு சம்மாந்துறைக்கு நீங்கள் வந்தால் சில பிரதிகளை விற்றுத்தர முடியும்'

அன்று தொடங்கிய நட்பு இறுதி வரை கீறல் விழாத இனிய சங்கீதம் ததும்பிய ஓர் இசைத்தட்டு. ஆனந்தன் அன்றிலிருந்து என் வீட்டில் ஓர் உறுப்பினன்.

ஆனந்தனின் திருமணம் நடைபெற்ற போது, ஒரு மாலை வேளையில் நானும் எழுத்தாள நண்பர்களுமாகப் போனோம்;. மருதூர்க் கொத்தன் மணமக்களை வாழ்த்தி அங்கே கவிதை பாடினார். அன்று நாங்கள் சைக்கிள்களில் திரும்பும் போது பௌர்ணமி நிலவின் பால் வெள்ளம் மாவடிப்பள்ளியின் வயல்களின் நடுவே உள்ள அந்த நேர் வீதியில் வழிந்து கொண்டிருந்தது. இதைப்போல எத்தனையோ தருணங்கள். அனேகமான இலக்கிய மேடைகளில் விஸ்வநாதன் இராமமூர்த்தி இரட்டையர்கள் போல நாங்களும் இருந்திருப்போம்.

ஆனந்தனை நான் சந்தித்த ஆரம்பத்தில் அவர் மிகவும் கடுமையான, இறுக்கமும் கண்டிப்பும் கலந்த மார்க்ஸீய ஆதரவாளர். தான் வரித்துக் கொண்ட கோட்பாட்டுக்கு எதிரான எந்தப் படைப்பையும் அவர் ஏற்றுக் கொண்டதில்லை. ஆனால் நானோ சாண்டில்யனில் இருந்து – தமிழ்வாணனுக்கு
தமிழ்வாணனின் இருந்து – எல்லார்வீக்கு,

எல்லார்வீயில் இருந்து புதமைப்பித்தனுக்கு,

அங்கிருந்து ஜெயகாந்தனுக்கு,

அதிலிருந்து சுந்தர ராமசாமிக்கு

பின்னர் அசோகமித்திரனுக்கு என நூல்களின் உலகத்தில் தத்தித் தத்திச் சென்று கொண்டிருந்த ஒரு தேரை.

'ஓர் உன்னதமான படைப்பில் 50 வீதம் உள்ளடக்கமும் 50 வீதம் உருவமும் இருக்க வேண்டும் என ஆனந்தன் சொல்வார். இது என்ன விசித்திரமான கலையின் கலவை என நான் குழம்பிப் போவேன்.
ஆனால் காலப்போக்கில் என்னுடைய வாசிப்புலகம் விரிவடையத் தொடங்கியதைப் போன்றே ஆனந்தனின் பார்வையிலும் விசாலம் ஏற்படுவதை உணரத் தொடங்கினேன். ஒரு கட்டத்தில் நாங்கள் போட்டி போட்டுக் கொண்டு வாசித்தோம் என்று சொன்னால் மிகையில்லை.

அவர் வானம் பாடிக் கவிதைகளை வெகுவாக சிலாகித்துச் சொல்வார். ஆனால் அவற்றில் பல என்னைப் பொறுத்த வரையில் வெற்று வரிகள், துணுக்குகள். உதாரணமாக,

'இரவில் வாங்கினேன்

இன்னும் விடியவில்லை' என்பது அந்த நாட்களில் அவரைப் பொறுத்த வரையில் அற்புதமான கவிதை. ஆனால் எனக்கோ அது சாதாரண வாசகம்.

நாஞ்சில் நாடன் அவருக்கு மிகவும் பிடித்த எழுத்தாளா. எனக்கும் அவரைப் பிடிக்கும். என்றாலும் அவருடைய மொழிநடை செயற்கையான இறுக்கத்தைக் கொண்டிருப்பதாகத் தோன்றும். நாங்கள் இருவரும் எந்தவிதமான அபிப்பிராய பேதமுமில்லாமல் வண்ணநிலவனை, கி.ராஜநாராயணனை, அசோகமித்திரனை இலங்கையில் நீலாவணண், சண்முகம் சிவலிங்கம், நுஃமான் போன்றோரை ஏற்றுக் கொண்டோம்.

பன்கர்வாடி, இலட்சிய இந்து ஹோட்டல், நீலகண்டப் பறவையைத் தேடி, சோரட் - உனது பெருகும் வெள்ளம், சம்ஸ்க்கார், சித்தார்த்தா, அழிந்தபிறகு, மண்ணும் மனிதரும், செம்மீன், அண்டைவீட்டார் போன்ற பல மொழிபெயர்ப்புகளைப் படித்துவிட்டு மணிக்கணக்கில் பேசியிருக்கின்றோம்.

இன்றைக்கு யோசிக்கும் போது ஆனந்தன் ஒரு தலைசிறந்த ஆக்க இலக்கியக்காரர் என சொல்லமுடியாமலிருக்கலாமம். ஆனால் அவர் இரண்டு வகைகளில் முக்கியத்துவம் பெறுகின்றார்.

ஒன்று, பரந்துபட்ட வாசிப்பறிவைக் கொண்ட அவர் ஒரு தேர்ச்சி பெற்ற போதகர் போல, பிரசங்கி போல இலக்கிய மேடைகள் தோறும் நவீன இலக்கியத்தின் பால் பலரது கவனத்தையும் ஈர்த்தவர். பொட்டல் வெளியில் பயிருக்கான விதைகளைத்தூவிய கைங்கரியம் அது என்பதை மட்டக்களப்பின் இன்றைய நவீன இலக்கிய ஆர்வலர்கள் உணர்வார்கள்.

இரண்டாவது, மலையாளப் படைப்புக்களை மொழி பெயர்த்தவர் என்ற அந்தஸ்து.

02

ஆனந்தன் மலையாள மொழியைக் கற்கவும், அம்மொழியில் வெளியான படைப்புக்களை மொழிபெயர்க்கவும் சிரத்தை எடுத்ததற்கான காரணங்கள் இவையாக இருக்கலாம்.

ஆனந்தனை ஒரு காலத்தில் பாதித்த மாக்ஸீய தத்துவசார்பு கொண்ட எழுத்தாளர்கள் கேரளாவில் அதிகளவில் இருந்தார்கள். அத்தகைய இயல்பு கொண்ட தகழி, கேசவதேவ், பொன்குன்னம் வர்க்கி போன்றோர் மீது ஆனந்தன் பிரேமை கொண்டவனாக இருந்திருக்கலாம்.

இன்னொரு காரணமாக மட்டக்களப்புக்கும், மலையாள மண்ணுக்கும் இடையே காணப்படும் நிலக்காட்சி, பேச்சு மொழி, உடை, உணவு முறை சார்ந்த ஒற்றுமைகளைச் சொல்லலாம். எல்லாவற்றுக்கும் மேலாக அந்த அரபிக் கடலோரத்து மலையாளக் கரைசார்ந்த வசீகரமான பிம்பங்கள்.

கடல், களப்புக்கள், குளிர் கொண்ட இரவின் காற்று, மீன்பிடிக் கிராமங்கள், படகுகள், உப்பங்கழிகள், கேரள சுந்தரிகள் அவர் மனதில் படைப்புகளை மொழிபெயர்க்கும் எழுச்சியை அளித்திருக்கலாம்.

ஒரு தடவை நான் தழிழ் நாட்டுக்கு சென்ற போது தனக்காக வாங்கிவரும்படி அவர் கேட்டுக் கொண்ட ஒரே ஒரு பொருள் ஸலீல் சௌத்ரியின் இசையில் வெளியான செம்மீன் திரைப்படப் பாடல்கள் அடங்கிய ஒலிநாடா.

கலாநிதி நுஃமான் அவர்கள் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழத்தில் இருந்த காலத்தில் ஆனந்தன் அவரிடம் கேட்டுப் பெற்றது தமிழ் அர்த்தம் கொண்ட மலையாள அகராதி ஒன்று.

வேற்றுமொழிப் படைப்பொன்றைத் தனது மொழிக்கு இடம் பெயர்ப்பது என்பது இலகுவான காரியமல்ல. அது அகராதியை மாத்திரம் மையமாகக் கொண்ட ஒன்றல்ல. மூல ஆசிரியரின் மனக்கோலங்களை அப்படியே ஆத்மார்த்தமாக மொழிமாற்றம் செய்ய வேண்டிய கடினமான பணி வெறும் புள்ளிகள் கோலங்களாகா.

trans – Creation ஆக – ஒரு மாற்றுப்படைப்பாக அதனைச் சொல்லும் படி இருக்க வேண்டும்.

ஆனந்தன் மொழிபெயர்ப்பதற்காகத் தேர்வு செய்த கதைகள் பெரும்பாலும் சிக்கல்கள் அற்றவை. சற்று நேரடியான பாணியில் சொல்லப்பட்டவை, இந்த தொகுப்பில் உள்ள 10 கதைகளில் ஒன்றே ஒன்றைத் தவிர ஏனையவை எல்லாம் மலையாளிகளின் அசல் படைப்புகள். 'அலிபாபாவின் மரணம்' என்ற நூலில் தலைப்புக் கதை மாத்திரமே பஞ்சாபியில் இருந்து மலையாளத்துக்கு வந்திருக்கிறது.

எனக்கு இதில் வியப்பூட்டிய அம்சம், மலையாளத்தின் மிக முக்கியமான இலக்கிய ஆளமைகள் எவரையுமே இந்த தொகுப்பில் காண கிடைக்க வில்லை.

1930 – 1947 கால கட்டத்து சோஷலிஸ யதார்த்த வாதம், மார்க்ஸீய பார்வையூடாக உருவான கேசவதேவ், தகழி, பொன்குன்னம் வர்க்கி போன்றவர்களையோ, அதை அடுத்த 1950 கால கட்டத்தில் சமூகத்தில் தனி மனிதனின் நிலைப்பாடு பற்றி பேசத் தொடங்கிய வைக்கம் முகமது பஷீர், காரூர், உறுபு, நாகவள்ளி, லலிதாம்பிகா, அந்தர்ஜனம் போன்றவர்களையோ அல்லது மனோரதியக் கற்பனைகளுடன் கனவுலகத்தை சிருஷ்டித்த பொற்றெக்காடு போன்ற எழுத்தாளரையோ அல்லது அதன் பின் தோன்றிய மலையாளத்தின் முக்கிய எழுத்தாளர்களான பாரப்புரத்து, மலையாற்றூர் இராமகிருஷ்ணன், ஸீ. ராதாகிருஷ்ணன், உன்னிகிருஷ்ணன் புத்தூர் போன்றோர்களையோ அதன் பின் மலையாள இலக்கியத்தில் முக்கிய பங்காற்றிய எம்.டீ.வாசுதேவன் நாயரையோ, மாதவிக் குட்டியையோ அல்லது இலக்கிய இயக்கங்களுடன் சம்பந்தப்படாமல் மலையாளக் கதைகளுக்கு வளம் சேர்த்த என்.பீ.முஹம்மது, எம். கோவிந்தன், பட்டத்து விள கருணாகரன், ஜெயதேவன், துளசி போன்றோரையோ அல்லது 1960க்குப் பின் தோன்றிய நவீன கதை சொல்லிகளான எம்.பீ. நாரயணபிள்ளையையோ, ஓ.வி.விஜயனையோ, பூனத்துள் குஞ்ஞப்துள்ளாவையோ, எம். சுகமாரனையோ, காக்கநாடனையோ, ஸக்காரியாவையோ, ஈ. ஹரிக்குமாரையோ, அசமநூர் ஹரிஹரனையோ ஆனந்தனின் இந்த மொழி பெயர்ப்புக் கதைகளின் தொகுப்பில் காணக்கிடைக்கவில்லை.

இதன் காரணம் இந்த படைப்புககளை மொழி பெயர்ப்பதில் அவர் சந்தித்த சவாலா? அல்லது தனது கைகளுக்கு எட்டியவற்றுள் மாத்திரம் தன் எல்லையை ஆனந்தன் நிர்ணயித்து கொண்டாரா என்பவை இன்றைக்கு பதில் அறிய முடியாத கேள்விகளாகும்.

03

அவர் தேர்வு செய்த பெரும்பாலான கதைகளில் ஓர் அங்கதச்சுவை நிறைந்திருக்கின்றது. 'அலிபாபாவின் மரணத்திலும்', 'விடுதலையிலும்' 'ராதாகிருஷ்ணனின் சுயதுக்கங்களிலும்' அது வெளிப்படுகின்றது.

'முப்பது வெள்ளிக் காசுகளில்' வருபவர்கள் வாழ்தலுக்காக திருடலாமா என ஒரு கணம் மனம் தடுமாறிப் பின் மீள்பவர்களாக இருக்கின்றார்கள்.

'நசேரத்தில் ஒரு பொம்மை' நிகழ்காலத்துக்கும், கடந்த புராதன காலத்துக்கும் இடையே மாயப்பாலம் ஒன்றை நிர்மாணிக்க முயல்கின்றது. புதைபொருள் ஆய்வாளன் ஒருவனின் பார்வையில் சொல்லப்படும் இந்தக் கதை இறைவனின் இருப்பை உறுதி செய்யப் பார்க்கின்றது.

ஓர் அபத்த நாடகம் போல ' ஒரு மனோதத்துவப் பிரச்சினை' அமைகின்றது. இறந்தவர்களாகக் கருதப்படுமம் மூவர் ஆளுக்காள் உரையாடுகின்றனர். மனோதத்துவ வைத்தியர் ஒருவருக்கும் அவரிடம் வந்ததாகக் கருதப்படும் இரண்டு மன நோயாளிகளுக்குமிடையே நிகழும் உரையாடல் இறுதியில் ஏதுமற்ற ஒன்றாகி சூனிய வெளியில் முடிந்து போகின்றது.

'கப்பல் விபத்து' கதை காகிதக் கப்பல் விடும் ஒரு சிறுவனின் மனநிலையை சிறப்பாக, சுருக்கமாக விபரித்து வாசகனைப் பதைபதைப்புக்குள்ளாக்கி அதிர்ச்சியுடனும், துயரத்துடனும் நிறைவு பெறுகின்றது மழை விபரிப்பு கதையின் மிகசிறப்பான அம்சம். உதாரணம் 'துளிக்கு ஒரு குடம் என்பது போல தும்பிக்கை அளவில் மழைத் தாரைகள்' என்ற வரிகள்.

பெண் விடுதலையானது ஆண்களின் கண்களால் எவ்விதம் பார்க்கப்படும் என்பதை விடுதலை கதை பரிகாசத்துடன், கள யதார்த்தத்துடன் கூறுகின்றது.

வழியில் எதிர்ப்; பட்ட ஒருவன் வீதி ஒன்றின் பெயரைச் சொல்லி அது எங்கிருக்கின்றது என விசாரித்து, பதில் அற்ற நிலையில் அங்கிருந்து சென்று விடுகின்றான. அந்தக் குறிபிட்ட வீதியைத் தேடி அலைக்கழிவது இப்போது பதில் தெரியாதவனின் வேலையாகிவிடுகிறது. இத்தகைய நுட்பமான சிக்கலை ' ராதாகிருஷ்ணனின் சுய துக்கங்கள்' சொல்லி செல்கின்றது.

உறவுகளால் மென்மேலும் ஏமாற்றப்பட்டு ஏதுமற்று, எவருமற்று ஸ்த்திரிக்கைப் நடைவண்டியைத் தள்ளிக் கொண்டு 'ஸ்த்திரிக்கை' கதையில் வருபவன் வீதியில் சென்று மறைகின்றான்.

'திரியும், தீபமும்' கதையில் சத்தியத்தைத் தேடிப் போன சித்தாhத்;தனைப் போல சுக போகங்களைத் துறந்து வலது குறைந்த சிறாரின் விடுதியைப் பராமரிக்கும் பணியில் சுகங்காணும் மிருணாளினிக்கு அந்த வாழ்வும் துரதிருஷ்ட வசமாக நிலைப்பதில்லை. விருப்பத்துக்கு மாறான ஒரு சிறைக்குள் அவள் அடைபட வேண்டியுள்ளது.

'அலிபாபாவின் மரணத'தில் பிறரது ஊழல் நடவடிக்கைகளுக்குள் தன்னை அறியாமல் பொருந்திக் கொண்ட ஒருவன், மனசாட்சி உறுத்தலால் மேல் மாடியிலிருந்து குதித்துத் தற்கொலை செய்து கொள்கின்றான். ஆனால் ஊழலின் காரணகர்தாக்களான சமூகத்தின் உயர்தரப் பிரஜைகள் அந்த மரணத்துக்கான காரணத்தைத் திசை மாற்றி ஒருவரை ஒருவர் காப்பாற்றி கொள்கின்றனர்.

இந்தத் தொகுப்பின் மிக சிறப்பான கதை சினிமா. அந்த கதையில் வெளிப்படும் அன்பின் சுரப்புத்தான் என்ன மகத்துவமானது. புத்தி குறைந்த ஒரு பையன், அவன் மீது அன்பை சொரியும் அம்மாவும், அக்காவும். ஒரு நாள் அவனை படுக்கவைத்து விட்டு அவனுக்கு தெரியாமல் சினிமாவுக்கு இரண்டாம் ஆட்டம் போகலாம் என அவர்கள் திட்டம் போடுகின்றார்கள.; அவன் தூங்கும் பாவனையில் கண்களை மூடிக் கொண்டு படுகைக்யில் கிடக்கின்றான். ' பாவம், அவர்கள் போய்தான் வரட்டுமே' என்பது அவனுடைய எண்ணம். ஆனால் அம்மாவுக்கோ இறுதி நேரத்தில் மனம் மாறி விடுகின்றது. மகளிடம் கூறுகின்றாள் 'வேண்டாம் மகளே, இவன் ராத்திரியேதும் பயங்கரக் கனவுகள் கண்டு எழுந்து விட்டால்.....? பாவம், இவன் சுகம் இல்லாத பிள்ளை அல்லவா?' சினிமா பார்க்கும் ஆசை கலைந்து போனதில் ஆரம்பத்தில் ஏமாற்றம் அடைந்த அக்கா சிறிது நேரம் விம்முகின்றாள். ஆனால் அது சிறிது நேரந்தான். பௌடர் வாசனை கொண்ட ஒரு முகம் தன்னுடைய கன்னத்தில் பரிவுடன் முத்தமிடுவதை தம்பி உணர்கின்றான் அது வேறு யாருமல்ல. அவனுடைய அன்புக்குரிய அக்கா

இந்த கதை ஒன்றுக்காகவே இந்த தொகுப்பினைப் போற்றலாம் - கூடவே இத்தொகுப்பை வெளிக் கொணர்ந்த நண்பர் த. மலர்ச்செல்வனையும்.


பதிவேற்றம் - ஜூலை 2010
© பதிப்புரிமை உமா வரதராஜன் - 2010
Designed By : HLJ Solutions