சவுக்கம்

பிரான்சிஸ் என்னை அழைத்து வருமாறு ஒரு போலீஸ்காரனை அனுப்பியிருந்தார் .

''தையல் மெஷினில் ஏதாவது கோளாறா ?'' என்று அவனைக் கேட்டேன் . ''அப்படி எதுவும் சொல்லவில்லை '' என வந்தவன் சொன்னான் .அவனுடைய சலனமற்ற முகத்தில் எதையும் என்னால் படித்தறிய முடியவில்லை .ஒரு வேளை மரணம் தன் கண்முன்னால் நின்று வெறிக்கூத்தாடிச் சென்ற திகைப்பிலிருந்து இப்போது வரை மீளாமல் அவன் பேதலித்துப் போயிருக்கலாம் .ஏதோ ஒரு தூணின் பின்னால் அல்லது மண்மூடைகளுக்குப் பின்னால் அல்லது பொலிஸ் நிலைய வளவினுள் நின்ற முறுக்கேறிய பெரிய மரங்களில் ஒன்றின் பின்னால் அல்லது கழிப்பறைக்குள் மறைந்து நின்று தன்னைத் தற்காத்துக் கொள்ள கண்டமேனிக்கு சுட்டுத் தள்ளியிருக்கலாம் . எல்லா ஓசைகளும் ,புழுதியும் அடங்கிய பின் ஆமையின் தலை போல் எட்டிப் பார்த்து வெளியே வந்திருக்கலாம் .

எவருமே எதிர்பார்க்கவில்லைதான் .ரத்தம் சொட்டிக் கொண்டிருக்கும் கடைவாய்ப் பற்களுடனும் , நர மாமிச நெடியுடனும் அக்கம் பக்கமெல்லாம் அலைந்து கொண்டிருந்த அந்தப் பேய் எங்கள் பக்கத்துக் கதவையும் தட்டிப் பார்த்து விட்டது .

ஒரு வாரத்துக்கு முன்னால் அம்புலன்ஸில் திடீரென வந்திறங்கியவர்கள் அவன் குடியிருந்த வீட்டுக்குப் பக்கத்திலிருந்த பொலிஸ் நிலையத்தை சுற்றி வளைத்து துப்பாக்கிகளாலும் ,கைக்குண்டுகளாலும் சரமாரியாக தாக்குதல் நடத்தினார்கள் என அவன் கேள்விப் பட்ட போது முதலில் அதிர்ச்சியடைந்தான் .அந்தத் தாக்குதல் நடந்த அன்றைய மாலை அவன் தன் வாடகை வீட்டில் இருக்கவில்லை .தொடர்ச்சியாக அமைந்த மூன்று நாள் விடுமுறை காலத்தைக் கழிக்க ஊருக்குக் கிளம்பியிருந்தான் . பயணப் பையைத் தோளில் தொங்க விட்ட வாறு , வாகனத்தை எதிர்பார்த்த படி அன்று காலை வீதியில் நிற்கையில் நீலநிற பொலிஸ் ஜீப் அவனைக் கடந்து சென்றது . முன்னால் உட்கார்ந்திருந்த பிரான்சிஸ் அவனைப் பார்த்து லேசான புன்முறுவலுடன் கையசைத்து சென்றார் .பதிலுக்கு அவனும் கையசைத்ததை ஜீப்பின் பக்கவாட்டுக் கண்ணாடி மூலமாவது பிரான்சிஸ் பார்த்திருக்கக் கூடும் .வேகம் குறைந்து ,சவுக்கு மரத் தோப்புக்கு முன்னாலிருந்த பொலிஸ் நிலையத்துக்குள் ஜீப் சென்று மறைவதை அவன் பார்த்த படி நின்றான் .

ஒரே நாள் காலைக்கும் மாலைக்கும் நடுவில்தான் எவ்வளவு நிறமாற்றங்கள் ! அன்றைய காலைவானம் எவ்வளவு நிர்மலமாக அப்பழுக்கற்ற நீல வர்ணத்துடன் இருந்தது .மரம், செடி,கொடிகள் எவ்வளவு மதாளிப்புடன் பச்சையாக இருந்தன .எல்லாவற்றையும் புரட்டிப் போட ஒரு நொடி போதும் போலும் .

அவன் விடுமுறை கழிந்து திரும்பி வந்த போது பக்கத்திலிருந்தவர்கள் கதை கதையாக சொன்னார்கள் .ஆளரவம் குறைந்த அந்த நெடுஞ்சாலையில் வாகனங்கள் அலறிய படி தாறுமாறாக ஓடியது பற்றி ,பொலிஸ் நிலையத்தின் எதிரே இருந்த சவுக்கு மரத் தோப்புக்குள்ளிருந்து வெளியேறிய கால்நடைகள் மருண்டு எல்லாத் திசைகளிலும் ஓடியமை பற்றி ,அக்கினி மழை போல் விடாது பொழிந்த வேட்டோசைகள் பற்றி ,காற்றோடு கலந்து வந்த கந்தக வாசனை குறித்து , ஆகாயமெங்கும் அலைந்து கொண்டிருந்த கரும்புகைப் பூதங்கள் குறித்து , அதிர்ந்து குலுங்கிய கட்டிடங்கள் குறித்து ,ஜன்னல் கண்ணாடிகள் நொறுங்கித் துகள்களாக வீழ்ந்தது பற்றி , கொச்சிப் பழங்கள் போல் கூரை ஓடுகளை உரசிச் சென்ற சன்னங்கள் பற்றி ,மரக்கிளைகளிலிருந்து விர்ரென்று கிளம்பிய பறவைகளின் அபயக்குரல் பற்றி , குளம்படி பிசகிய வெண்ணிறப் பசு போல ஏராளமான குண்டுப் பொத்தல்களுடன் ஓர் அம்புலன்ஸ் வண்டி நெடுஞ்சாலை வழியாகத் திக்கிழந்து திசையிழந்து ஒரு மின் கம்பத்துடன் முட்டி மோதிக் கவிழ்ந்ததை , அதன் நீலச் சுழல் விளக்கு ஓயாமல் ஒலியெழுப்பி இயங்கிக் கொண்டிருந்ததை , அதனுள் இருந்து வெளியே வீழ்ந்தவர்களின் ஆறு விழிகளும் வானத்தை வெறித்துப் பார்த்தபடி நிலை குத்திட்டு நின்றதை ,கை நழுவிய குடங்கள் போலான அவர்களின் உடலிலிருந்து வீதியெங்கும் பரவிய இரத்தம் சூடு தணிய முன் உறைந்து போனதை அச்சம் அகலாத விழிகளுடன் அக்கம் பக்கம் பார்த்த படி கதை கதையாக என்னிடம் சொன்னார்கள் .

''நீங்கள் போங்கள் .உடுப்பை மாற்றிக் கொண்டு வருகிறேன் '' என நான் கூறியதும் பிரான்சிஸ் அனுப்பிய பொலிஸ்காரன் சென்று விட்டான் .

நடந்து செல்லும் தூரத்திலேயே பொலிஸ்நிலையம் இருந்தது .நடுவில் நான்கைந்து அரசாங்க அலுவலகங்கள் .வீதியால் போவோர் வருவோரை எப்போதும் புன்னகையுடன் பார்த்துக் கொண்டிருக்கும் ஒரு வழிப் பிள்ளையார் . அடுத்ததாக ஒரு பெந்தகோஸ்த சபை .அங்கிருந்த சகோதரர் சாந்தநேசன் பேய்களை ஓட்டுவதில் வல்லவர் எனப் பலரும் கூறியதால் ,அவரை வீதியில் எதிர் கொள்ள நேரும் போதெல்லாம் நான் மறுபக்கத்துக்கு நகர்ந்து விடுவதுண்டு .பெந்தகோஸ்த சபையிலிருந்து முன்னரெல்லாம் பரவசநிலையுடன் கூடிய கூக்குரல்களும் ,கோஷங்களும் கேட்ட படியிருக்கும் .ஆனால் கடந்த வார அசம்பாவிதத்துக்குப் பிறகு அந்த வீடு மிகவும் அமைதியடைந்து விட்டது .

நான் நேரே பொலிஸ்நிலைய வளாகத்திலிருந்த பிரான்சிஸின் விடுதிக்கு சென்று அழைப்பு மணியை அழுத்தி விட்டுக் காத்திருந்தேன் . தையல் இயந்திரத்தின் ஷட்டில் ,அல்லது கேரியரில் நூல் சிக்கிக் கொண்டிருக்கலாம் .அல்லது இயந்திரம் இயங்கும் முறையில் பிசகு ஏதாவது இருக்கலாம் .அப்படி ஏதும் இருந்தால் ஊசிகள் உடைந்து கொண்டேயிருக்கும் .அல்லது கால்மிதி பாகத்தில் லொட லொடவென்ற சத்தம் கேட்ட படி இருக்கலாம் .இவையெல்லாம் அடிக்கடி வரக்கூடிய கோளாறுகள்தான் . மிஸிஸ் .பிரான்சிஸுக்கு தையல் இயந்திரம் என்பது கிட்டத்தட்ட தனது இன்னொரு குழந்தையைப் போல. விடுதியின் கதவைத் திறந்து கொண்டு மிஸிஸ்.பிரான்சிஸ் வெளியே வந்தாள்.

''சேர் வரச் சொல்லி தகவல் அனுப்பியிருந்தார் .மெஷினில் ஏதாவது கோளாறா ?'' என்று புன்னகையுடன் கேட்டேன் .அவளுடைய முகத்தில் தென்படும் வழமையான மலர்ச்சி மறைந்து போயிருந்தது .

குழப்பம் நிறைந்த முகத்துடன் ''இல்லையே ...'' என்றாள் . கதவருகே நின்ற என்னை நோக்கி ''அங்கிள் '' என்று அழைத்த படி பிரான்சிஸின் சின்ன மகள் ஓடி வந்தாள் .இன்று அவளுக்கு சொக்லேட் வாங்கி வரவில்லையே என்பது அப்போதுதான் என்னை உறுத்தியது .மிஸிஸ் .பிரான்சிஸ் தன் மகளின் கையை இறுகப் பற்றி தடுத்து நிறுத்தி விட்டாள் .குழந்தையின் கையில் யானைப் பொம்மை இருந்தது .வழக்கம் போல் அந்த பொம்மையின் சாவியை முடுக்கி ,அது பிளிறிக் கொண்டு நடப்பதை நான் காண்பிப்பேன் எனக் குழந்தை எதிர் பார்த்திருக்கக் கூடும் .கை காலை உதறிய படி என்னிடம் வர அந்தப் பிள்ளை திமிறிக் கொண்டிருப்பது மனதுக்கு கஷ்டத்தைத் தந்தது .

''ஐயா ஸ்டேஷனில் இருப்பார் .அங்கு போய் என்னவென்று விசாரியுங்கள் '' நான் பிள்ளையை நோக்கிக் கையசைத்து விட்டு பொலிஸ் நிலையத்தை நோக்கி நடந்தேன் .முன் புற சுவர் முழுக்க நூற்றுக்கணக்கான கண்கள் முளைத்தது போல் தோட்டாக்களின் துளைகள் .பட்டை உரிந்த மரங்களைப் போல் அங்கிருந்த தூண்களின் மேற்பூச்சுகள் கழன்று போயிருந்தன .கூரையில் கரி படிந்து போயிருந்தது .

பிரான்சிஸ் தனக்குரிய அறையில் ,சுழல் நாற்காலியில் அமர்ந்திருந்தார் .நான் மாலை வணக்கத்தைத் தெரிவித்துக் கொண்டு உள்ளே நுழைந்தேன் .அவர் கடலையைக் கொறித்த படி என்னை நிமிர்ந்து பார்த்தார் .கண்வழியே என்னுள்ளத்தின் அடியாழம் வரை ஊடுருவ முனைகின்ற ஒரு பார்வை அது .தேவாலயத்தின் படிக்கட்டுகளில் எதிரும் புதிருமாக சந்திக்க நேர்கின்ற போது ரோமம் நிறைந்த தன் கையை நீட்டி ,என் கையுடன் சேர்த்துக் குலுக்கிக் கொள்கின்ற அந்த பிரான்சிஸ் அல்ல இவர் .அந்த சிநேக பாவம் எங்கோ ஒரு புதைகுழிக்குள் போய் மறைந்து விட்டது போல் தோன்றியது . தான் நிறைந்திருக்கும் ஒரு பாத்திரத்தின் வடிவத்தை திரவம் பெற்று விடுவதைப் போல அவருடைய மனதின் வன்மத்தை அந்த முகத்தில் அப்போது கண்டேன் .

அவர் என்னை உட்காரச் சொல்லவில்லை .

''ஊர் போய் வந்தாயிற்றா ?'' என்று என் கண்களைக் கூர்மையாகப் பார்த்தவாறே கேட்டார் .

''ஆம் '' என்றேன் .

''நல்லது .முன் விறாந்தையில் இருக்கும் அந்த பெஞ்சில் போய் உட்கார் ..பிறகு கூப்பிடுகிறேன் .'' என்றார் .தொடர்ந்து அவருடன் பேச எனக்கு தைரியம் இருக்கவில்லை .தளர்ந்த நடையுடன் பெஞ்சில் வந்து உட்கார்ந்தேன் .

வீதி வழியே இடமும் வலமுமாக செல்லும் வாகனங்களைப் பார்த்துக் கொண்டிருந்தேன் .என்னை ஒரு ஜீவனாகவே கருதாமல் குறுக்கும் நெடுக்குமாக ஓட்டமும் நடையுமாகத் திரிந்த காக்கிச் சீருடை காவலர்களின் முகங்களை ஒரு பசுக் கன்றின் தாகத்துடன் மாறி மாறிப் பரிதாபத்துடன் பார்த்தேன் .மாலையானதும் தத்தம் அலுவலக சாவிகளை ஒப்படைக்க வந்த அதிகாரிகளை ஏக்கத்துடன் பார்த்தேன் .என் முன்னால் நின்ற கொன்றை மரத்தின் கிளைகளில் நெடுநேரமாக இரண்டு செண்பகங்கள் தத்தித் தாவி விளையாடிக் கொண்டிருப்பதைப் பார்த்தேன் . பெந்தகோஸ்து சபையின் வெண்ணிற ஆடை அணிந்த மனிதர்கள் கடைசி பஸ் பிடிக்க விரைந்து செல்வதைக் கண்டேன் .வெறுமையாகிப் போன அரசாங்க அலுவலகங்களின் திக்கில் 'கூடடையச்' செல்லும் புறாக்களின் வரிசையை வானத்தில் பார்த்தேன் .

வெளியே ஒளி மங்கிக் கொண்டிருந்த அதே வேளையில் மதகை உடைத்து உட்புகும் நீர்ப்பெருக்கு போல் என் மனமெங்கும் துயரத்தின் இருளும் , பயங்கரத்தின் திகிலும் குடியேறிக் கொண்டிருந்தன .

திடீரென என் பெஞ்ச் அருகே பிரான்சிஸ் வந்து நின்றார் .நான் எழுந்து நின்றேன் .

''குளவிக் கூட்டுக்கு கல்லெறிந்தால் என்ன நடக்கும் என்று பார்த்தாய்தானே ?''

''சேர் ,நீங்கள் எதை மனதில் வைத்துக் கொண்டு பேசுகிறீர்கள் ,இப்படியெல்லாம் நடத்துகிறீர்கள் என இந்த நிமிஷம் வரை எனக்கு எதுவும் புரியவில்லை ...''

''ஓஹோ ...அது புரியாமல்தான் அன்று காலையிலேயே ஊருக்குக் கிளம்பினாயாக்கும் ....''

பிரான்சிஸ் போடும் முடிச்சு இப்போது எனக்குப் புரியத் தொடங்கியது .ஆனால் அதை எப்படி அவிழ்ப்பது என்று தெரியவில்லை .

''சத்தியமாக எனக்கு எதுவும் தெரியாது '' என்றேன் .

'' எல்லோருமே அப்படித்தான் ஆரம்பத்தில் சொல்லுகிறார்கள் .அதை எப்படிக் கண்டு பிடிப்பது என்று எனக்குத் தெரியும் . ஆனால் அதை நான் செய்யப் போவதில்லை .இவ்வளவு நாளும் நெருக்கமாகப் பழகிய ஒருவன் மீது கை வைக்க என்னால் முடியவில்லை .அதனால்தான் உன்னோடு இவ்வளவு அமைதியாகப் ,பொறுமையாகப் பேசிக் கொண்டிருக்கிறேன் .ஆனால் நாளைக்கு உன்னை விசாரிக்க வரும் பியசிறி நிச்சயமாக என்னைப் போல் இருக்க மாட்டான் .''

பிரான்சிஸ் தன் விடுதியை நோக்கிப் போவது தெரிந்தது .நான் கைது செய்யப் பட்டிருக்கிறேன் என்ற உண்மையை உணர எனக்கு இவ்வளவு நேரம் எடுத்திருக்கிறது .

நான் அப்படியே ஸ்தம்பித்துப் போயிருந்தேன் .

பொலிஸ் நிலைய விளக்குகளை எல்லாம் அணைத்து விட்டார்கள் .மாரிகாலத் தவளைகளின் சத்தம் போல் வயர்லெஸ் சாதனங்களிலிருந்து நொடிக்கொரு தரம் கட்டைக் குரல்கள் ஒலித்துக் கொண்டிருந்தன .வீதியை நான் வெறித்துக் கொண்டிருந்தேன் .வீதியில் வாகன நடமாட்டம் நின்று வெகுநேரமாகியிருந்தது .அந்த வீதியும் எனக்கு எட்டாத தூரத்தை நோக்கி நகர்ந்து செல்லத் தொடங்கி விட்டதைப் போலிருந்தது .வானில் தலை முட்டும் எலும்புக் கூடுகள் போல சவுக்கு மரங்கள் இருட்டில் தோன்றின .

பெஞ்சில் உட்கார்ந்திருந்த என்னருகே ஒரு பொலிஸ்காரன் வந்து ''எழும்பி உள்ளே போ !'' என்றான் .

நான் குழப்பத்துடன் அவனைப் பார்த்தேன் .

''மிஸ்டர் பிரான்சிஸ் சொன்னாரா ?'' என்று கேட்டேன் .

''ஆம் ...அவர்தான் சொன்னார் ...மறுபடியும் அவர்கள் தாக்க வரமாட்டார்கள் என்று எப்படிச் சொல்ல முடியும் ?அந்தத் தாக்குதலில் உன்னைப் போன்ற அப்பாவிகள் மாட்டி விடக் கூடாதல்லவா ?''

'உன்னைப் போன்ற அப்பாவிகள் ' எனக் கூறும் போது அந்த வார்த்தைகளுக்கு அழுத்தம் கொடுத்து ,பற்களை கடித்து அவன் என்னை முறைத்துப் பார்ப்பது தெரிந்தது .நான் பயத்துடன் அவனைப் பின் தொடர்ந்தேன் .அவன் கூட்டின் கதவைத் திறந்து விட்டான் .உடலை வளைத்து ,குனிந்து நான் உள்ளே நுழைந்ததும் கதவு சாத்தப் பட்டு ,வெளிப்புறமாகப் பூட்டுப் போடப் பட்டது .

அந்தக் கூட்டின் இருட்டுக்கும் ,மூத்திர நெடிக்கும் பழக்கப் பட எனக்கு சில நிமிடங்கள் எடுத்தன .அந்தக் கூட்டின் ஒரு மூலையில் சுவரில் சாய்ந்த படி தலையைக் குனிந்த வாறு ஒருவன் உட்கார்ந்திருந்தான் .அவனிடம் எனக்கு எதுவும் பேசத் தோன்றவில்லை .என் கண்களில் நீர் கோர்த்திருந்தது .

என் வாழ்க்கையில் மட்டும் விதியின் வரிகள் ஏன் இவ்வாறெல்லாம் புதிர்த் தன்மையுடன் எழுதப் பட்டிருக்கின்றன என்ற கேள்வியை என்னை நோக்கி நானே பல தடவைகள் கேட்டுக் கொண்டிருந்தேன் .இது நான் பழைய பாட்டுகளைக் கேட்ட படி தூங்குவதற்கு ஆயத்தமாகின்ற இரவு நேரம் .வாசலில் மல்லிகைப்பூக்கள் மணத்துக் கொண்டேயிருக்கும் .படுக்கும் போது வழக்கமாக என் கால்களுக்கும் ஒரு தலையணையை வைத்துக் கொள்ளுவேன் . ஆனால் இன்றைய இரவில் நான் சற்றும் எதிர்பாராத இடத்துக்கு வந்து சேர்ந்திருக்கிறேன் .இனி மறுபடியும் என் பழைய இரவுகளுக்குப் போய்ச் சேர்வேன் என்பதற்கு எந்த உத்தரவாதமுமில்லை .உயிருடன் இருப்பேன் என்பதற்கும்தான் .எனது குற்றமும் ,அதற்கான தண்டனையும் இறுக மூடப் பட்ட ஏதோ ஒரு மாயசீசாவுக்குள்ளோ அல்லது இந்தக் கட்டிடத்தின் முன் புறத்தில் தடுப்பரணாக அடுக்கப் பட்டிருக்கும் மண் மூட்டைகளுக்குள்ளோ அல்லது எதிரேயுள்ள சவுக்கு மரங்கள் உதிர்த்த சருகுப் படைகளின் கீழோ ஒளித்துக் கொண்டிருக்கலாம் .

பொலிஸ் நிலையத்தின் முன்புறம் நிற்கும் ஜீப் வண்டிகள் அடுத்த நாள் வேட்டைக்குப் போக முன் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கும் ராட்சஸ விலங்குகள் போல தெரிகின்றன . ஒரு போலீஸ்காரன் புகைத்துக் கொண்டிருக்கிறான் .அவனுடைய சிகரெட் முனையின் சிவப்புக் கண் ஒளிர்வதும் மறைவதுமாக இருக்கிறது .இந்த இரவு கடக்க முடியாத ஓர் ஆறு போலவும் திறக்க முடியாத ஒரு காடு போலவும் என் முன்னே விரிந்து கிடந்தது .கரை என்பது ஒரு சிறு கோடாகி கண்களிலிருந்து நழுவிக் கொண்டிருந்தது . முடிவற்ற தொடுவானம் நோக்கி மூர்க்கமான காற்று என் படகை உந்தித் தள்ளிச் சென்று கொண்டிருந்தது .

என் எதிர்ப்புற மூலையிலிருந்தவன் என்னை நோக்கி ஏதோ கேட்பது போலிருந்தது .அது கனவின் வாசகமோ என்றுதான் முதலில் நினைத்தேன் . இரண்டாவது தடவையாகவும் அதை அவன் கேட்ட போது முழு விழிப்பு நிலைக்கு நான் வந்து விட்டேன் .

''உங்களை ஏன் இங்கு கொண்டு வந்திருக்கிறார்கள் ?''

''சந்தேகம் ...ஆனால் நான் எந்தக் குற்றமும் செய்யவில்லை ...விடுமுறைக்கு ஊருக்குப் போனதைத் தவிர ..'' என்றேன்

''ஓ ...அப்படியா ?''

''உங்களை ஏன் இங்கு கொண்டு வந்து வைத்திருக்கிறார்கள் '' என்று அவனிடம் மெதுவாகக் கேட்டேன் .

அவனும் மிகவும் தணிவான குரலில் சொன்னான் '' கண்ணகையம்மன் கோயிலடியில் அரசியல் வகுப்பு எடுத்துக் கொண்டிருந்தேன் .யாரோ தகவல் கொடுத்திருக்க வேண்டும் .தப்புவதற்காக எல்லோரும் ஓடினோம் .ஆனால் என்னை மாத்திரம் குறி வைத்து துரத்திப் பிடித்து விட்டார்கள் ....''

''உங்களுடைய பெயர் ?''

''பார்த்திபன் ''

நான் அதற்குப் பிறகு அவனுடன் பேச அஞ்சினேன் .யாராவது ஒட்டுக் கேட்கலாம் .அல்லது இந்த இருட்டு நிறைந்த கூட்டுக்குள் ஒட்டுக் கேட்கும் சாதனங்களைப் பொருத்தியிருக்கலாம் .அல்லது பார்த்திபன் என்ற பெயருடன் அறிமுகமாகியிருக்கும் இவனே கூட என்னை ஆழம் பார்க்க அனுப்பப் பட்டிருக்கும் ஓர் உளவாளியாக இருக்கலாம் .

நுளம்பு காதுகளைச் சுற்றிக் கிணுகிணுத்துக் கொண்டிருந்தன .வியர்த்துத் தள்ளியது .தாகமாக இருந்தது .அடிவயிறு கலங்கிக் கொண்டிருந்தது .நேரத்தை நகர விடாமல் ஒரு பெரிய பாறாங்கல் மறித்துக் கொண்டிருப்பதாக நினைத்துக் கொண்டேன் .அதை ஆமோதிப்பது போல் பல்லியொன்று மூன்று தடவைகள் சத்தம் எழுப்பியது .

திடீரென எங்கள் கூட்டின் பூட்டு திறபடும் ஓசை கேட்டது .உட்கார்ந்த நிலையில் இருந்த எனக்கு நான்கு கால்கள்தான் முதலில் வெளியே தெரிந்தன .

''வெளியே வா !'' என்றார்கள் .

எழும்புவதற்கு ஆயத்தமான என்னை நோக்கி ''நீ இல்லை ...அவன் ..'' என்றார்கள் .

பார்த்திபன் எழுந்தான் .வெளியேறிய அவனை அழைத்துக் கொண்டு அவர்கள் சென்றார்கள் .கெந்திக் கெந்தி சென்று கொண்டிருந்த அவன் ஒரு தடவை என்னைத் திரும்பிப் பார்ப்பது அந்த இருட்டிலும் மங்கலான ரூபத்தில் தெரிந்தது .

அவனை அவர்கள் அழைத்துச் சென்ற 10 நிமிடங்களுக்குள் சவுக்கு மரத் தோப்புப் பக்கமிருந்து துப்பாக்கி வேட்டுச் சத்தம் ஒன்று கேட்டது .

அதைத் தொடர்ந்து காகங்கள் ஒருமித்த குரலில் கரையும் ஓசை கேட்டது .அவை கரைந்த படியே பறந்திருக்க வேண்டும் .அவை எழுப்பிய பேரோசை மெல்ல மெல்ல தூரம் நோக்கி நகர்ந்து ,மங்கிக் கொண்டிருந்தது . நான் கண்களை மூடாமல் அச்சத்துடன் விழித்த படியிருந்தேன் .

பார்த்திபன் மறுபடியும் வரவேயில்லை.ஆனால் பியசிறி நாளை வருவான் .

[16.06.2016]

 பதிவேற்றம் - ஜூலை 2010
© பதிப்புரிமை உமா வரதராஜன் - 2010
Designed By : HLJ Solutions