'என் ஜன்னல்களை ஒவ்வொன்றாக சாத்திக்கொண்டே வருகிறேன்!'

- உமா வரதராஜன் -

உமா வரதராஜன் ஈழத்து நவீன சிறுகதைப் பரப்பில் காத்திரமான ஆளுமை - ஈழத்து நவீன தமிழ்ச் சிறுகதையின் முகமும் முகவரியும் இவரிடமுள்ளது. தேடல் மிக்க வாசிப்பாளர். ஆளுமைமிக்க படைப்பாளி. இவரின் 'உள்மன யாத்திரை' சிறுகதைத் தொகுதி தமிழில் மிகக் குறிப்பிடத்தக்கது.

மிகவும் குறைவாகவே எழுதிவரும் இவர் தமிழில் பன்முகப் பாங்கான ஆளுமையைக் கொண்டிருப்பவர். சினிமா மீதான இவரின் தீவிர ஈடுபாடு அக்கறைக்குரியது. குறிப்பிடத்தக்க பத்தி எழுத்தாளர். சினிமா விமர்சகர், 'வியூகம்' சிற்றிதழின் ஆசிரியர்.

இவரது 'அரசனின் வருகை' சிறுகதை ஈழத்தில் 90களில் நிலவிய அரசியல் போக்கின் கலைப்பதிவும் படைப்பாளியின் எதிர்க்குரலுமாகும். இவரது சிறுகதைகள் அதிக கவனத்தைப் பெற்றவை!

 • உங்களுக்குள் ஒரு படைப்பாளி உருவெடுத்த காலத்தை சொல்லுங்கள்?

முதலில் என்னை ஒரு வாசகனாகவும், ரசிகனாகவும் அடையாளம் காண்கிறேன். பிறகுதான் இந்தப் படைப்பாளி என்பவன். என்னுடைய தந்தை இசை ரசிகர். பலதரப்பட்ட புத்தகங்களின் வாசகர். அவருடைய புத்தக அலுமாரியில் இருந்து புத்தகங்களை எடுத்துப் படிப்பதை சின்ன வயதிலேயே தொடங்கிவிட்டேன். மு.வரதராசன், கல்கி, அகிலன், பெரியசாமிதூரன், கு.இராஜவேலு, ரா.பி.சேதுபிள்ளை, வையாபுரிப்பிள்ளை, புதுமைப்பித்தன், ... இப்படிப் பலதரப்பட்ட எழுத்தாளர்களின் புத்தகங்கள் அங்கே இருந்தன. எளிதில் புரியக் கூடிய புத்தகங்களை படித்துத் தள்ளினேன். இவை தவிர விகடன், குமுதம், அம்புலிமாமா, கண்ணன், பொம்மை இப்படிப் பலவகை சஞ்சிகைகளை என் தந்தை தருவிப்பார். இந்தப் பலதரப்பட்ட வாசிப்பு இன்று வரை தொடர்கிறது. எவ்வளவு நாட்களுக்கு மற்றவர்களையே வாசித்துக் கொண்டிருப்பது என்ற மனநிலையில் எழுதத் தொடங்கினேன் என்று சொல்லலாம்.

பாடசாலையில் கட்டுரைகள் எழுதினேன். தமிழ் நன்றாக எழுதுகிறான் என்ற கவனத்தை பாடசாலை ஆசிரியர்களிடமிருந்து பெறத் தொடங்கினேன். அந்நேரம் வெளிவந்த ஜெயகாந்தனின் 'சில நேரங்களில் சில மனிதர்கள்' நாவலுக்கு விமர்சனங்கள் வரவேற்கப்படுவதாக தீபம் பார்த்தசாரதி அறிவித்திருந்தார். நானும் துணிந்து என்னுடைய பார்வை, ரசனைக்கேற்ப ஒரு கட்டுரை எழுதி நா.பார்த்தசாரதிக்கு அனுப்பி வைத்தேன். அடுத்த மாதம் வெளிவந்த தீபத்தில் அக்கட்டுரை பிரசுரமாகியிருந்தது. அன்று சிறகுகள் முளைத்துப் பறந்து கொண்டிருந்தேன்.

 

 • உங்கள் இளமைக் காலம் எப்படி இருந்தது?

ஏற்றமும், இறக்கமும், தத்தளிப்பும், அலைக்கழிவும், ஏமாற்றமும் கொண்ட காலம் அது. நான் தந்தையின் அரவணைப்பில் வளர்ந்தவன். தாயாரை விட தந்தையின் மீது அதிக ஈர்ப்பு கொண்டவன். என்னுடைய சொந்த ஊரான கல்முனையிலேயே ஐந்தாம் வகுப்பு வரை கல்வி பயின்றேன். நான் அயலூரில் கல்வி கற்க வேண்டும் என்ற விபரீதமான ஆசை என் தந்தைக்கு ஏற்பட்டது. கல்லடி சிவானந்தா வித்தியாலயத்தில் கொண்டு போய்ச் சேர்த்தார். விடுதி வாழ்க்கை எனக்கு பயங்கர அனுபவமாக இருந்தது. அந்த வாழ்க்கை எனக்கு ஒத்துவரவில்லை. அதிகாலை 4 மணிக்கு எழுந்து வரிசையாக கிணற்றடி நோக்கி குளிக்கச் செல்வது, இறை வழிபாடு, படிப்பது போல் பாசாங்கு செய்வது, ஒரு கும்பலாக இருந்து உணவு உட்கொள்வது, இடியாப்பத்துக்கு ஊற்றிய சொதியில் ஒரு தடவை பீடித்துண்டொன்றும் மிதந்து வந்தது. அங்கிருந்து பாடசாலைக்குச் சென்றால், சமஸ்கிருத வகுப்பு இருந்தது. எப்படி இந்த மறியலில் இருந்து தப்பி ஓடுவது என்பதே அன்றைய சிந்தனையாக இருந்தது. படிப்பு ஓடவில்லை. எனது உடுப்புகள், புத்தகங்கள், வாளி என்பவற்றையெல்லாம் விடுதியிலேயே விட்டுவிட்டு ஒரு நாள் சொல்லிக் கொள்ளாமல் ஊருக்கு கிளம்பிவிட்டேன். என்னைக் கண்டவுடன் தந்தையாருக்கு அதிர்ச்சி ஏற்பட்டிருக்க வேண்டும். விடுதி வாழ்க்கைதான் எனக்குப் பிடிக்கவில்லை என எண்ணி மட்டக்களப்பிலுள்ள தன் நெருங்கிய நண்பரொருவரின் வீட்டில் என்னைக் கொண்டு போய் விட்டார். ஆனால், எனக்கு எனது வீட்டுக் கூரையைப் போல் சந்தோஷமளிக்கும் விஷயம் உலகத்தில் ஒன்றுமேயில்லை. பாடசாலைக்கு வெளிக்கிட்டு செல்வது போல் போக்குக்காட்டி விட்டு, வெளிச்ச வீட்டுப்பக்கம் செல்லும் பஸ்ஸில் ஏறிவிடுவேன். திருமால் என்ற சக மாணவனும் சேர்ந்து கொள்வான். இப்படி இரண்டு மாதங்கள் அலைக் கழிந்திருக்கிறேன். அக்காலத்தில் படிப்பை விட மட்டக்களப்பில் என்னை ஈர்த்த பல விஷயங்கள் இருக்கின்றன. மட்டக்களப்பு நகரின் வாவிக் கரையோரமாக மாலை நேரத்தில் முளைக்கும் நொறுக்குத் தீனிக்கடைகள், இரவில் ஆற்றுப் பரப்பில் ஆங்காங்கே ஒளிர்ந்து கொண்டிருக்கும் வெளிச்சப் பொட்டுகள், அங்கே இருக்கும் சினிமா அரங்குகள், ஜெய்சங்கர், ரவிச்சந்திரனின் பெரும்பாலான படங்களைப் பார்த்த காலமிது. படம் பார்ப்பது என் வாழ்வின் முக்கிய அம்சமாகிப் போனது இவ்வாறுதான். இந்த வாழ்க்கையும் ஒரு நாள் வீட்டுக்குத் தெரியவந்தது. எனது தந்தை வீதியிலேயே வைத்து அடித்தார். வீதியிலிருந்து பஸ் நிலையம் வரை அவரது கையைப் பிடித்து அழுது இழுபட்டவாறு சென்றேன். தெருவில் எல்லோரும் வேடிக்கை பார்த்தார்கள். அன்றிலிருந்து அவருக்கும் எனக்குமான நல்லுறவு முறிந்து விட்டது என்றே சொல்ல வேண்டும். என்னை அவர் அதிகமாக கவனத்தில் கொள்வதில்லை.

உள்ள10ரில் கார்மேல் பாத்திமாக் கல்லூரியில் எனது கல்வியை தொடரவேண்டி ஏற்பட்டது. கிறிஸ்தவ பாதிரிமாரின் பள்ளி அது. ஆறாம் வகுப்பில் அங்கு சேர்ந்தேன். எனது தந்தை தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு செட்டியார். அவர் திடீரென எங்களை எல்லாம் விட்டுவிட்டு தமிழ்நாட்டுக்குச் சென்றுவிட்டார். நாங்கள் வானத்திலிருந்து பூமியில் வீழ்ந்ததைப் போல் இருந்தது. கஷ்டங்களையெல்லாம் காட்டிக்கொள்ளாமல் என்னை ஆளாக்கிய தாயின் பெருமையை மெல்ல மெல்லப் புரிந்து கொண்டேன். எனது பாடசாலை வாழ்வின் இறுதிக் கட்டம் மிகவும் சந்தோஷமானது. என் வாழ்க்கையில் மறக்க முடியாத காலமது. முதல் காதலில் விழுந்து பின் அந்த தோல்வியில் துவண்டு பின்னர் இன்னொரு காதலில் இறங்கி அதுவும் கை கூடாமல் ஒரு குருடனைப் போல் நடந்து கொண்டிருந்தேன். முதல் காதலின் போது அந்தப் பெண்ணின் தாயார் என்னை நோக்கித் திட்டிய வசவுகள் இன்னும் காதுகளில் ஒலித்துக் கொண்டிருக்கின்றன. இன்று வரை ஏதாவதொரு பெண்ணின் தாயார் திட்டுவது தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

பிற்காலத்தில் எனது எழுத்தில் தெரிந்த துணிச்சல்கள், கட்டுப்பாடுகளை மீறுகின்ற மனோபாவம், அலட்சிய மனப்பான்மை இவற்றையெல்லாம் என்னுள் கொண்டு சேர்த்தது இந்தக் காலம் தான். பள்ளி நாட்களில் நானும் எனது நண்பர்களும் தண்ணியடித்தோம், சிகரெட் பிடித்தோம். அடிதடி கலாட்டாவில் இறங்குவோம். என் குடும்பத்தில் இவையெல்லாம் செய்த முதல் ஆள் நான் என்று எல்லோரும் நொந்து கொள்வார்கள். எப்படியோ ஒரு வன்முறை என்னுள் குடியேறியிருந்தது. யாருடைய முகத்திலாவது குத்த வேண்டுமென்று அலைந்து கொண்டிருந்தேன். பெண்கள் விடுதிகளுக்கு இருப்பது போன்ற உயர்ந்த மதில்களுக்கு நடுவேயிருந்த ஒரு வீட்டில் நான் கட்டுப் பெட்டித்தனமாக சிறு பராயத்தில் வளர்க்கப்பட்டவன். அங்கிருந்த என்னை நான் கொஞ்சம் கொஞ்சமாக வெளியேற்றிக் கொண்டிருந்தேன். இரவு பத்து மணி வரை நானும் நண்பர்களும் வீதியில் இருப்போம்.

பாடசாலை பரீட்சை எழுதிவிட்டு வீட்டிலிருந்த போது எனது அயற்கிராமமான மருதமுனை நூல் நிலையத்தைப் பயன்படுத்தினேன். சிவப்பிலான தடினமான அட்டை போட்ட ஏராளமான புத்தகங்கள் அங்கேயிருந்தன. சாண்டில்யனில் தொடங்கினேன். பின்னர், தமிழ்வாணன், அதன் பின் ஜெகசிற்பியன், எல்லார்வி, மகரிஷி, நா.பார்த்தசாரதி, ஜெயகாந்தன் இப்படிப்பலர். அந்த நாட்களில் நான் படித்த இரண்டு புத்தகங்கள் என்னை வெகுவாக கவர்ந்தன. ஒன்று எம்.வி. வெங்கட்ராமனின் வேள்வித் தீ. மற்றது ந. சுப்பிரமணியத்தின் வேரும் விழுதும் இப்படியெல்லாம் தமிழில் எழுத்துவகை இருக்கிறதே என ஆச்சரியப்பட்டேன். இலங்கை எழுத்தாளர்களிலே இளங்கீரனின் 'நீதியே நீ கேள்', யோ. பெனடிக்ற்பாலனின் 'சொந்தக்காரன்' ஆகியவற்றையும் அப்போதே படித்தேன்.


 • ஒரு தனி மனிதன் தொடர்பாகவும் - நமது சமூகக் கட்டமைப்பு தொடர்பாகவும் உங்கள் முரண்பட்ட மனோநிலையின் வெளிப்பாடுகள் உங்கள் படைப்புக்களில் பட்டுப்பட்டு தெறித்துக்கொண்டிருக்கின்றன. பொருந்திவரா சூழல்தான் உங்களை மேலும் படைப்பாளி ஆக்கியதா?

எனது தகப்பனார் மிகவும் செல்வத்தில் இருந்தவர். அவர் எங்களையெல்லாம் விட்டுவிட்டுத் திடீரென வெளியேறியபோது பல உண்மைகளை நிதர்சனமாக சந்திக்க வேண்டியேற்பட்டது. உறவின், நட்பின் போலித்தனங்களை எல்லாம். ஒவ்வொருவராக ஒளிந்துமறையத் தொடங்கினார்கள். இந்த வெறுமையான சூழலில் இளம்பராயத்தில் என் மனதில் ஆழமாகப் பதிந்துபோன பல வடுக்கள் இருக்கின்றன. இங்கே இவற்றை ஒவ்வொன்றாக விபரிக்கத் தேவையில்லை. ஆனால், என் கதைகள் அவற்றைச் சொல்ல முயல்கின்றன. என்று நினைக்கின்றேன். பெரும்பாலான மனிதர்களை நான் தந்திரம் நிறைந்த பிராணிகளாகத்தான் காண்கிறேன். அவர்களிடமிருந்து தள்ளியிருக்கவும், கிண்டல் பண்ணவுமே விரும்புகிறேன். மனம் வெம்பிய நிலையில் நான் தேர்ந்தெடுத்த ஓர் ஆயுதம் இந்த எழுத்து.

 

 • உங்கள் வாழ்க்கையில் படைப்பனுபவம் சார்ந்து – உங்கள் எழுத்துக்கும் வாழ்வுக்குமான தொடர்பும் முரணும் என்ன?

நான் இட்டுக்கட்டி எதையும் எழுதவில்லை. என் வாழ்க்கைக்கும் எழுத்துக்கும் இடையே உள்ள தொடர்பைப் பலரும் அறிவார்கள். அனேகமாக என் அனுபவங்கள் தான் என்னுடைய கதைகள். 'தொலைவில் தெரியும் ஒற்றை நட்சத்திரத்தில்' தொடங்கி வெருட்டி வரை இதைக் காணலாம். இது நீங்கள் கேட்கும் தொடர்பு ஆகும். முரணென்று சொன்னால் நான் கிண்டல் பண்ணிய மனிதர்களுடனேயே கை குலுக்கிப் புன்னகைத்துக் கொள்ள நேர்வதைச் சொல்லலாம்;. வயது போகப்போக பழைய போர்க்குணங்கள், கலகக்காரன் மனநிலை படிப்படியாக குறைந்து வருவதை உணர்கிறேன். இது நான் சம்பந்தப்பட்டுள்ள தொழிலின் தன்மையாலும் வந்திருக்கக்கூடும். வாடிக்கையாளர்களை தக்கவைப்பதற்கான உத்திகளில் புன்னகை பூப்பதும் ஒன்று. எனவே, புன்னகை செய்வதால் ஒன்றும் குறைந்துவிடப்போவதில்லை.


 • உங்கள் கதைகளில் அதிக கிண்டல், அங்கதத்தொனி காணப்படுகிறது. இதற்கு ஏதாவது விசேட காரணங்கள் உண்டா? அல்லது அதுவும் தமிழ்ப்படைப்பின் தொடர்ச்சிதானா, புதுமைப் பித்தன், சுந்தரராமசாமி எழுத்து வகையறாக்களா?

கதையை முரட்டுத் தனமான தொனியில் சொல்வதை விட, நையாண்டியுடன் சொன்னால் அதிகமான பிரதிபலிப்பும், எதிர்வினையும் இருக்கும் என்பது என் நம்பிக்கை. புதுமைப்பித்தன், சுந்தரராமசாமி, எழுத்துக்களில் தென்பட்ட இந்த அம்சத்தை ஆவலுடன் படித்தவன் நான். சுஜாதா, அம்பை, சார்வாகன், கிருஷ்ணன் நம்பி போன்றோரின் கதைகளிலும் இந்த அம்சம் சிறப்பாக இருக்கும். சின்ன வயதில் நடிகர் சோவின் கிண்டல்களுக்கு நான் ரசிகன். தனிப்பட்ட முறையிலும் நான் கிண்டலாக பேசுபவன் என்பது எனக்கு நெருக்கமானவர்களுக்கு தெரியும். அது என் எழுத்துக்களிலும் எப்படியோ வந்துவிடுகிறது. புதுமைப்பித்தன், சுந்தரராமசாமி எழுத்து வகையறாக்களின் தொடர்ச்சிதான் இது என்று சொல்லிக்கொள்வதில் நான் வெட்கப்பட ஒன்றுமில்லை.

 

 • சற்று முந்தியும் - சமகாலத்திலும் தமிழ் சிறுகதை எழுத்தாளர்களுள் உங்களுக்கு நம்பிக்கையூட்டும் படைப்பாளிகள் பற்றி .....

அனேகமான சிறுகதைகளைப் படித்தவன் என்ற வகையில் நான் சொல்லக்கூடியது இதுதான். இலக்கிய அனுபவம் என்பது மனதின் உணர்வுகளைத்தட்டி எழுச்சியுறச் செய்ய வேண்டிய ஒன்று, எனது அபிப்பிராயத்தில் நான் மிகவும் உயர்வாக மதிப்பிடும் ஓர் எழுத்தாளர் அசோகமித்திரன். எழுதத் தொடங்கியதிலிருந்து இன்று வரை அவருடைய எழுத்துகள் சோடைபோனதில்லை. சுந்தரராமசாமியின் பல சிறுகதைகள் இன்றும் ரசித்துப் படிக்கக்; கூடியனவாக இருக்கின்றன.

அதன் பின்னர் வண்ணநிலவன், வண்ணதாசன், இந்த இரண்டு பேரின் வருகை. ஆரம்பத்தில் இந்த இரண்டுபேரும் நல்ல படைப்பாளிகள். ஆனால், காலப்போக்கில் வண்ணதாசன் படைப்புக்கள் ரசிப்புகளின் சொற்கோலமாக குறுகிப் போய்விட்டது. வண்ணநிலவனால் இன்றும் சிறப்பாக எழுத முடிகின்றது. நான் ரசித்துப் படித்த பிற எழுத்தாளர்கள் பிரபஞ்சன், ஆதவன், மாதவன், நாஞ்சில்நாடன், பாவண்ணன் போன்றோர். இவர்களுள் பிரபஞ்சன், பாவண்ணன் நிறைய எழுதியதால் நிதானமிழந்து போனார்கள் என்பது என் அபிப்பிராயம். கோணங்கி இன்னொரு புதிய வருகை. அவருடைய மதினிமார்கள் கதையிலும், கொல்லனின் ஆறு பெண் மக்களிலும் தமிழின் மிகச் சிறப்பான சிறுகதைகள் இருக்கின்றன. ஜெயமோகனும் ஒரு சிறப்பான படைப்பாளி. 'கிளிக்காலம்', 'நிழலாட்டம்', 'காலை' போன்ற பல நல்ல கதைகளை எழுதிய ஜெயமோகன் சிலவேளைகளில் ஏன் சொற்சிலம்பமாட முயல்கிறார் என விளங்கவில்லை. அதிமேதாவி வேஷத்தை அவர் துறந்துவிட்டால் செழுமையான படைப்புக்கள் அவரிடமிருந்து கிடைக்கலாம். இவர்களைத்தவிர தமிழ்ச்செல்வன், குமாரசெல்வா, கோபிகிருஷ்ணன், 'முன்பு ஒரு காலத்தில் நூற்றியெட்டுக்கிளிகள் இருந்தன' எழுதிய ரமேஷ், எஸ். ராமகிருஷ்ணன், இவர்களெல்லாம்; இப்போது நினைவுக்கு வரும் பெயர்கள்.

இலங்கைச் சூழலில் ஆரம்பத்தில் நான் ரசித்துப்படித்த எழுத்தாளர்கள் என செங்கை ஆழியான், செ.யோகநாதன், வ.அ. ஆகியோரைச் சொல்லலாம். பின்னாட்களில் சண்முகம்சிவலிங்கம், அ.யேசுராசா, குப்பிழான், ஐ. சண்முகம், சாந்தன், சட்டநாதன் ஆகியோர் என்னை ஈர்த்தார்கள். உண்மையையைச் சொல்லப்போனால் இன்றைக்கு ஒரு தேக்கம் நிலவுகிறது. ரஞ்சகுமார், மு.பொ., கவியுவன், ஓட்டமாவடி அறபாத், எஸ்.எல்.எம். ஹனிபா, எம்.ஐ.எம். ரஊப், நஸீருத்தீன், நௌஸாத் போன்றோரின் படைப்புகள் விசேசமான கவனிப்புக்குரியவை என்ற போதிலும் இவர்களெல்லாரும் சுறுசுறுப்பாக இயங்கவில்லை என்பதுதான் உண்மை.

 

 • குறைவாக எழுதி அதிக கவனம், பெறுவது அதிகமாக எழுதி குறைவாக கவனம் பெறுவது எழுத்தாளர்களின் ஆளுமை வெளிப்பாடா?

சில பேர் ஏராளமாக எழுதுகிறார்கள். ஜனரஞ்சகமான எழுத்து என்று எடுத்துக் கொண்டால் பாலகுமார், சிவசங்கரி, இந்துமதி, மேத்தா, வைரமுத்து, சுஜாதா இவர்களெல்லாரும் அதிகமாக எழுதுபவர்கள். தீவிரமான எழுத்து வகையில் சு. சமுத்திரம், நீலபத்மநாபன் பிரபஞ்சன், அசோகமித்திரன், செ. யோகநாதன், செங்கை அழியான், சோலைக்கிளி போன்றோர் மிகவும் சுறுசுறுப்பாக இயங்குபவர்கள் தான். இவர்கள் அதிகமாக எழுதுபவர்கள் என்ற ஒரே காரணத்துக்காக மோசமான எழுத்தாளர்கள் என்று சொல்லலாமா? இவர்களின் சிறந்த படைப்புகளை நான் படித்திருக்கிறேன். மௌனி, சுந்தரராமசாமி, சார்வாகன், அம்பை, இலங்கையில் நுஃமான், சண்முகம் சிவலிங்கம், ரஞ்சகுமார் போன்று மிகக்குறைவாக எழுதி வாசகர்களின் கவனத்தை ஈர்த்த எழுத்தாளர்களும் இருக்கிறார்கள். குறைவாக எழுதுவதால் தான் அவர்கள் தரத்தைப் பேணுகிறார்கள் என்பது அபத்தமான ஒரு கருத்தாகும். சட்டியில் உள்ளது அகப்பையில் வரும். குறைவாக எழுதியதை ஒரு பெருமையாக கருதுபவர்கள் நிறைய எழுத நேர்ந்தால் அவர்களின் போதாமை அம்பலப்படவும் கூடும். ஆனால், முக்கியமான ஒன்று ஒருவன் தன்னை சிறந்த கவிஞன் என நிரூபிக்க பத்தாயிரம் கவிதைகள் எழுதத்தேவையில்லை. அவனுடைய பத்து வரிகள் போதுமானவை. எம்.பி சீனிவாசன், ஆர். பார்த்தசாரதி எல்லாமாக எத்தனை சினிமாப் பாடல்களுக்கு இசை அமைத்து இருப்பார்கள். ஆகக்கூடியது 20 பாடல்கள் எனலாம். அவர்களை நாம் மறந்துவிட்டோமா? கலைஞனின் ஆளுமைக்கும் எண்ணிக்கைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

 

 • உங்கள் உள்மன யாத்திரை தொகுப்பில் 13 சிறுகதைகள் உள்ளன. 1986ல், வெளிவந்த தொகுதி இது. அத்தொகுதிக்குப்பின் நீங்கள் தீவிரமாக சிறுகதை படைப்பில் ஈடுபடவில்லை என்ற கருத்து இருக்கிறதே?

நான் எழுதாமல் இருப்பதற்கான காரணத்தை யோசிக்கிறேன். ஒரு படைப்பாளிக்கான பொங்கும் மனநிலையை கடந்த சில வருடங்களாக இழந்துவிட்டேன். என்னுடைய இந்த உலகம் சற்று மாற்றமடைந்துவிட்டது. முகம், உயர போன்ற கதைகளை எல்லாம் எழுதும்போது இருந்த அந்த இளைஞன்; இன்று உறங்கிக்கொண்டிருக்கிறான். இவன் இன்னொருவன். எவர் எவரை அவன் பரிகாசித்தானோ அவர்களுடன் எல்லாம் இவன் கைகுலுக்கிக் கொண்டிருக்கின்றான், நடனமாடுகிறான். எஜமான் தரும் இலக்குகளை அடையப்பேயாய் அலைகிறான். தவிரவும் இவன், கூனனாக, குருடனாக, செவிடனாக வாழப் பழகிவிட்டான். இந்தக் கொடூரமான, அவலமான போர்ச்சூழலில் அவன் எதை எழுத வேண்டும்? சுத்திகரிக்கப்பட்ட கதைகளையா? தீவிரமான சிறுகதைப்படைப்பில் ஏன் ஈடுபடவில்லை என்று இவனை ஏன் கேட்கிறீர்கள். இவனைக் கொல்லப்பார்க்கிறீர்களா?

 

 • ஈழத்து தமிழ் சிறுகதையைப் பொறுத்தவரை இலங்கையர்கோன், சம்பந்தன், வைத்திலிங்கம் போன்றவர்கள் தொடக்கம், இன்றைய தமிழ்ச் சிறுகதைப் படைப்பாளிகள் வரை பல்வேறு தலைமுறைகள் இருக்கின்றன. இவர்களுள் உங்களைப் பாதித்த முக்கியமானவர்கள் யார்?

பல்வேறு கட்டங்களில், பல்வேறு படைப்பாளிகளால் ஈர்க்கப்பட்டிருக்கின்றேன். மு.த வின் கோட்டையை படித்துவிட்டு, பலநாட்கள் வியப்பில் இருந்தேன். சண்முகம் சிவலிங்கம் அவர்களுடன் நான் நெருங்கிப் பழகியவன். அவருடைய படைப்புகளின் ஒளிவுமறைவற்ற தன்மை என்னை மிகவும் ஈர்த்தது. முக்கியமாக காட்டுப்பூச்சி. ஒழுக்கத்தை முதன்மைப்படுத்திய பலரும் அந்தக் கதையை என்னிடம் கண்டித்திருக்கிறார்கள். என்னுடைய வியூகம் சஞ்சிகையில் அந்தக்கதை பிரசுரிக்கப்பட்டிருந்தது. இப்படியெல்லாம் ஆபாசமாக எழுதலாமா என்பது அவர்களின் குற்றச்சாட்டு. எழுத்தாளனுக்கு விதிக்கப்பட்டிருக்கும் சாபங்களில் இதுவும் ஒன்று. எழுத்தாளனுக்கு கட்டுப்பாடு எதனையும் விதிப்பது அவ்வளவு பொருத்தமானதல்ல. அந்த வகையில் அவர் துணிச்சலாக தன்படைப்புகளை முன்வைத்துள்ளார் என்பது என் அபிப்பிராயம். ஒரு விஷயத்தை தெளிவாக விளங்கியவன் தான் தெளிவாக விளக்கவும் முடியும். இந்த விஷயத்தில் எனக்கு முன்மாதிரி எம்.ஏ. நுஃமான் அவருடைய 'சதுப்புநிலம்', 'பன்காரிகள்' எல்லாம் எவ்வளவு இனிமையான கதைகள்.


 • இன்று இலக்கியத்திலும், கதையிலும் ஆபாசமென்கிறார்கள். இதனை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்.

ஆபாசம் என்பதெல்லாம் அவரவர் கண்ணோட்டம் தான். ஒரு காலத்தில் சம்மதமா நானும் கூட வர சம்மதமா, என்று பாடியதற்காக ஆபாசம் என்று சொல்லி நீதிபதி தண்டனை வழங்கினார். இன்னொரு காலத்தில் சிவாஜியும், பத்மினியும் அல்லது எம்.ஜி.ஆரும் - சரோஜாதேவியும் அந்தக் கனமான உடம்போடு உருண்டு புரண்டு புற்களை நாசம் பண்ணினார்கள். அதை ஆபாசம் என்றோம். இன்று நாயகிகளுக்கு முத்தமிட்டே தீருவது என்ற பிடிவாதத்தில் கமலஹாசன் அலைகிறார். வெளிநாடுகளுக்கு போகாத தருணங்களில் எல்லாம் எமது சினிமாக்காரர்களின் கமரா குளியல் அறைகளையும், படுக்கை அறையையுமே அதிகமாக சுற்றிவருகின்றன. நான் சொல்வது என்னவென்றால், ஆபாசம் என்றால் என்ன? அதன் வரையறை என்ன? ஆபாசத்திற்கு முந்திய அந்த எல்லைக்கோடு எது? காலா காலமாக நாம் கொண்டுள்ள கண்மூடித்தனமான வழமைகளால் எந்த மறு விசாரிப்பும் இன்றி சமூகம் சில விஷயங்களை ஆபாசம் என்று சுட்டிக்காட்டுகிறது. அவற்றை நாமும் நம்பி பரண்களில் இருக்கும் பழைய சாமான்களைப்போல – ஏற்றி பாதுகாக்கின்றோம். சமூகத்திற்கும் நமக்குமுள்ள ஒப்பந்தத்தினால், நாம் சில விஷயங்களைச் சொல்லத்தயங்குகிறோம், கூச்சப்படுகிறோம். இவற்றை வெளிப்படையாக ஒருவன் பேசமுற்படும்போது பிரச்சினைகள் எழுகின்றன.

தமிழ்ச்சூழலில் பேச முடியாத விடயங்களைப் பேசுவது, எழுதுவது பாலியல் குறித்து எழுதுவதற்கான தயக்கத்தை உடைத்தெறிவது, என்ற போக்கு தற்போது தமிழ்நாட்டில் உக்கிரமாவுள்ளது. ஆனால் அவையெல்லாம் உண்மை ஒளியும், கலைவீச்சும், செய்நேர்த்தியும், ஒருங்கே அமைந்த படைப்புக்களா என்பதே முக்கியமான வினா. தனக்குப் பிடித்த பெண்கள் எல்லோருடனும் கனவில் புணரும் கற்பனாவஸ்தையில் சாருநிவேதிதா ஈடுபடுகிறார். தமிழ் நாட்டில் அரசியல்வாதிகள், சினிமா நடிகர்கள் மட்டுமல்லாமல், சாருநிவேதிதா போன்றவர்களின் தேவையும் பரபரப்பான ஒரு விளம்பரம். இது ஓர் அதிர்ச்சி வைத்தியம் என்ற பிரகடனத்துடன் அத்தனை யோனிகளையும் கிழிக்கப் புறப்பட்டுவிடுகிறார்கள். இவர்களின் இன்றைய தலையாயப் பிரச்சினை யோனிகளும், குறிகளும், முலைகளும் தான் என்பது என்னை புல்லரிக்க வைக்கிறது.


 • மேற்கு நாட்டு இஸங்களின் அடிப்படையில் படைப்புகளைத் தருகிறோம். இக்கோட்பாடுகளெல்லாம் உங்களுக்கு விளங்காது என்று எழுதுபவர்கள் பற்றி......

சரியாக சமீபாடடையாத கோளாறால் அவர்கள் வாந்தியெடுக்கிறார்கள் என்பது தான் உண்மை. சொந்த மண்ணையும், அந்த மண்ணின் வேர்களையும், கணக்கில் எடுக்காத எந்த இஸங்;களினாலும் இலக்கியத்துக்கு ஆகப்போவது எதுவுமே இல்லை. கடலில் எப்போதாவது ராட்சஸ அலைகள் எழும் அல்லவா? இலக்கியக் கடலிலும் அவ்வாறு தான். இந்த அலைகளில் அள்ளுண்டுபோனவர்கள் பின்னர் காணாமலே போயிருக்கிறார்கள். கோணங்கியைப் பாருங்கள், பிரம்மராஜனைப் பாருங்கள், தமிழவனைப் பாருங்கள் இவர்களுக்கெல்லாம் என்ன நடந்தது? முதல் டெக்னிக் கலர் படம், முதல் ஈஸ்ட்மன் கலர் படம், முதல் கோவா கலர் படம் என்பது போல முதல் க்யூபிஸ நாவல் என்ற லேபலுடன் அண்மையில் எம்.ஜி. சுரேஷின் 'அட்லாண்டிஸ் மனிதன் மற்றும் சிலருடன்' வெளிவந்திருந்தது. லேபலுக்காக நாவலா? நாவலுக்காக லேபலா?


 • சமகால ஈழத்துத் தமிழ் சிறுகதை சூழல் பற்றி ......?

இலங்கையில் இன்றைய இலக்கிய வெளிப்பாடுகளில் போர்ச்சூழல் மிகவும் முக்கியமான ஒன்றாக இருக்கிறது. இன்றைய நமது நிலையில் வெறும் களிப்பூட்டும் கதைகளுக்கு எவ்வித மதிப்பும் இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால், இந்தப் போர்ச்சூழலின் பக்கவிளைவாக இங்கே பெருகியிருக்கும் பல உப தொழில்களைப் போன்று இந்த இலக்கியமும் ஆகிவிடக்கூடாது. பக்கச்சார்பற்று, நிதானத்துடன் நமது இன்றைய நிலையை ஆராயும் படைப்புக்கள் வெளிவர வேண்டும். அந்த வகையில் சரிநிகர் முக்கியமான பணியாற்றியிருக்கிறது.

இத்தகைய நிதானமான எழுத்துக்கு மு.பொ., சிறீதரன், ரஞ்சகுமார், கவியுவன், ஓட்டமாவடி அறபாத் போன்றோரை உதாரணமாகச் சொல்லலாம். போர்ச்சூழலின் துன்பங்களைப் பெருவாரியான வாசகர்களுக்கு செங்கை ஆழியான். செ.யோகநாதன் போன்றோர் எடுத்துச் செல்கின்றனர். எஸ்.எல்.எம். ஹனீபா, 'மருமக்கள் தாயகம்' என்ற சிறந்த கதையொன்றை எழுதியவர். புலம்பெயர்ந்து எழுதினாலும் கூட, சக்கரவர்த்தியின் கதைகள் இந்தச் சூழலுக்குரியவை. அவருடைய கதைகள் கடுமையான விமர்சனங்களை முன்வைக்கின்றன.

92ம் ஆண்டளவில் மிகவும் மட்டமான தாள்களில் கவர்ச்சியற்ற வடிவத்தில் திருகோணமலையிலிருந்து நிவேதம் என்றொரு சிறுகதைத் தொகுதி வெளிவந்தது. ஆனால், அந்தத் தொகுதியில் க. கோணேஸ்வரன், ஏ.கே. புஸ்பராசா, ரிஷிப்ரஞ்ஞன், பிரம்மன், தேஷ்விலோமன் போன்றவர்களின் சிறப்பான எழுத்துகள் இருந்தன. இவர்களைப்பற்றி ஏன் யாரும் பேசாமல் போய்விட்டார்கள். ரஊப் இன்னொரு திறமைசாலி, அவர் ஏன் கவனிக்கப்படவில்லை? நமது விமர்சகர்களின் அடிநாக்கில் கீறல்கள் விழுந்த சில இசைத் தட்டுகள் இருக்கின்றன. டானியல், டொமினிக்ஜீவா, எஸ்.பொ., வ.அ. என்றொரு காலத்தில் அவை ஒலித்தன. பின்னர் செ. யோகநாதன், பெனடிக்ற்பாலன், தெளிவத்தை ஜோசப் என்று ஒலித்தன. இப்போது ரஞ்சகுமார், உமாவரதராஜன், கவியுவன் என்று ஒலிக்கின்றது. இந்த இசைத்தட்டுகளை அகற்றிவிட்டு புதியவர்களின் எழுத்துக்களை தேடிப்படிப்பது விமர்சகர்களின் கடமை.


 • ஈழத்து தமிழ் சிறுகதைகளுக்கும், தமிழக சிறுகதைகளுக்குமிடையிலான பண்பு ரீதியான வேறுபாடுகள் எவை?

அழகியல் ரீதியாக ஈழத்து சிறுகதைகள் மிகவும் வறுமையானவை என்பதை நான் பகிரங்கமாக ஒப்புக்கொள்வேன். நமது பெரும்பாலான எழுத்தாளர்கள் சிறுகதையை ஒரு கலையாகக் கொள்ளாமல் தயாரிப்பாக கொள்கிறார்கள். தமிழ் நாட்டில் இந்த வகை எழுத்துகள் இருந்தாலும் கூட முக்கியமானவர்கள் என நாம் சொல்லக்கூடிய எழுத்தாளர்களின் படைப்புகளைப் பாருங்கள். அவர்கள் சற்று உயரத்தில்தான் இருக்கிறார்கள். நமது சிறுகதைகளில் காணப்படும் நீதிக்கதைப் பாணியிலான உரத்ததொனியை உயர்வான கலைத்தரம் என்று சொல்ல முடியாது. நமது எழுத்தாளர்கள் எழுத்தை ஆள்பவர்களாக இல்லை. அவர்களது கொல்லைப் புறத்தில் நிறைய கற்பனைக் குதிரைகள்.


 • சமகால அரசியலில் இன உணர்வு, தமிழ்த்தேசியம் உங்களைப் பாதிக்கவில்லையா?

நிச்சயமாக பாதிக்கிறது. ஏனென்றால் நான் கச்சதீவில் வாழவில்லை. பலவகைகளில் ஒடுக்கப்பட்டிருக்கிறேன் என்பதை முதலில் ஒரு மனிதனாகவும், பின்னர் ஒரு தமிழனாகவும் உணர்கிறேன். நமது அரசியல் சூதாடிகளினால் நமது மக்கள் அலைக்கழிக்கப்படுகிறார்கள், அவமானப்படுத்தப்படுகிறார்கள். சுயமரியாதை உள்ள எந்தக் கலைஞனும் பொறுத்துக் கொள்ள முடியாத அவமதிப்புகள் இவை.

தீவிரமான இன உணர்வு எனக்கு எப்போதும் இருந்ததில்லை. இதற்கு காரணம் எனது அயற்கிராமமான மருதமுனை என்ற முஸ்லிம் கிராமம். என்னுடைய இளமைக்காலம் மருதமுனையுடனும் பின்னிப்பிணைந்தது. என்னுடைய நண்பர்களில் பெரும்பாலானோர் முஸ்லிம்கள். 90 வன்முறையின் போது எனக்கு அபயம் அளித்தது ஒரு முஸ்லிம் தாய். அவரைப்போல் எத்தனை தாய்மார்கள் இங்கு இருப்பார்கள்? இன உணர்வு, தமிழ்த் தேசியம் பற்றி அந்தத்தாய்மார் எவ்விதம் அறியவில்லையோ அதேபோல் நானும் அறியமுற்படவில்லை. பாமரனாகவே இருந்து விட்டுப் போகிறேன்.


 • உங்களுடைய அரசனின் வருகை சிறுகதை இந்தியா டுடே இலக்கிய மலரில் வெளியானது. பரந்துபட்ட தமிழ்ச்சூழலில் அதிக கவனம் பெற்ற கதையாக அது உள்ளது. அதன் அரசியல் வெளிப்பாடும், உங்கள் கதை சொல்லும் பாங்கில் மிகவும் உச்சமான பய்ச்சலாகவும் அக்கதை அமையப் பெற்றது. அது காலத்தின் நெருக்குவாரத்தின் வெளிப்பாடுதானே?

நான் புதுமைப்பித்தனின் நிறைய கதைகளைப் படித்திருக்கிறேன். அந்த மனிதரிடம் எத்தனை விதமான பாணிகள் இருக்கின்றன. அவற்றை எண்ணி நான் வியந்திருக்கிறேன். நான் ஒரே தடத்தில் தான் தொடர்ந்தும் எழுதிக் கொண்டிருக்கிறேனோ என்று எனக்கு ஒரு கட்டத்தில் என் மீதே சலிப்பு ஏற்பட்டது. நீண்ட அவகாசத்தின் பின் நான் அடுத்தடுத்து எழுதிய இரண்டு கதைகள் கள்ளிச் சொட்டு, அரசனின் வருகை ஆகியவை. அரசனின் வருகையை அதைவிட வேறு ஒரு வடிவத்தில் தெளிவாக சொல்லியிருக்க முடியாது என நம்புகிறேன். ஏனெனில் அப்போது நிலவிய உக்கிரமான அரசியல் நிலவரம். காலத்தின் எல்லா நெருக்குவாரங்களுக்கும் கலைஞன் அடிபணியவேண்டுமென்பது அவ்வளவு சரியாகாது. அப்படியிருந்தால், 70களில் நிலவிய முற்போக்கு அலைவீச்சின் போது நான் அக்கினி புஷ்பங்களை சொரிந்திருக்க வேண்டுமே? 90களில் நிலவிய பயங்கரமான அரசியல் சூழலில் அப்பாவியான நான் இந்தக் கொடிய சப்பாத்துகளின் கீழ் நசுக்கப்பட்டேன். அந்தக் கொதிப்புணர்விலேயே அதை எழுதினேன்.


 • ஈழத்துப்படைப்புலகம் தேக்க நிலையில்தான் உள்ளதா?

நிச்சயமாக. நாம் எவ்வளவுதான் கூக்குரல் இட்டாலும் கூட தேங்கிப்போய்த்தான் இருக்கிறோம். வன்னிக்கு அப்பால் இருந்து அமரதாசின் 'இயல்பினை அவாவுதால்' எனும் கவிதைத் தொகுப்பை அண்மையில் படித்தேன். ஆங்காங்கே இத்தகைய சிறப்பான படைப்புகள் வெளிப்பட்டாலும் கூட ஒட்டுமொத்தமாக ஒரு மந்தமான கதியில் தான் இயங்குகிறோம். அறிக்கைகளாலோ, கூக்குரல்களாலோ இந்தத் தேக்கத்தை உடைத்துவிட முடியாது.


 • தமிழ் நாட்டுடன் ஒப்பிடும்போது போர்ச்சூழல், புலம்பெயர்வு ஈழத்து தமிழ் சூழலுக்கு விசேடமான தளத்தை தந்திருகிறதே. இவைகளை எப்படிப் பார்க்கிறீர்கள்?

போர்ச்சூழலில் இருப்பதை ஒரு சிறப்பம்சமாக நான் கருதவில்லை. அது ஒரு துக்ககரமான, துரதிருஷ்டவசமான விஷயம். இங்கே காணப்படும் யுத்தம் வேறு வேறு வடிவங்களில் தமிழ்நாட்டிலும் உள்ளது. கோவைக்குண்டுவெடிப்பும், கலவரங்களும், கீழ்வெண்மணிக்கிராமத்தில் நடந்த கொடூரமும் திருநெல்வேலி தாமிரபரணி ஆற்றங்கரையோரம் நடைபெற்ற அராஜகமும் நமக்குத் தெரியாததா? ஆளும் வர்க்கம் சாதாரண சனங்கள் மீது ஏவிவிடும் யுத்தங்கள் ஒவ்வொரு இடத்திலும் வௌ;வேறு வடிவத்தில் வெளிப்படுகின்றது. எனவே, போர்ச்சூழல் என்பது நமக்கு மாத்திரம் உரிய விசேஷமான களம் என எண்ணத்தேவையில்லை. எல்லா இடங்களிலுமேயே சாதாரண சனங்கள் குருஷேஷ்த்திரத்தில் மடிந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.
வேண்டுமானால் புலம்பெயர்வை ஒருவிஷேசமான நிகழ்வாகச் சொல்லலாம் அவர்கள் சுதந்திரமாக சிந்திப்பதற்கும் எழுதுவதற்கும் இந்த இடப்பெயர்வு உதவுவதாக நம்புகிறேன். கருணாகரமூர்த்தி, கலாமோகன், சக்கரவர்த்தி, அ.ரவி ஆகியோரின் படைப்புகளை படிக்கும்போது நமது இலக்கியப் போக்கில் இன்னொரு பரிணாமமும், பரிமாணமும் புரிகின்றன.


 • ஆனாலும் உலக வரலாற்றில் போர்ச்சூழல் அடக்குமுறை உன்னதமான படைப்புக்களைத் தந்திருக்கிறது தானே ......?

நீங்கள் ரஷ்ய இலக்கியத்தை ஆதாரமாக வைத்துக் கொண்டு இந்தக் கேள்வியை கேட்கிறீர்கள் என்று நினைக்கிறேன். இலங்கைத் தமிழ்ச்சூழலில் அப்படி ஒரு படைப்பும் வரவில்லை. இதற்கான காரணம் நமது படைப்பாளிகள் உள்ளது உள்ளபடி உண்மையை எழுதுவதற்கு பயப்படுகிறார்கள். போர்க்கால இலக்கியம் என்ற வகையில் சுத்திகரிக்கப்பட்ட படைப்புக்களை நமது எழுத்தாளர்கள் தரமுற்படுவார்களேயானால் அவற்றுக்கு உலக வரலாற்றில் எந்த இடமும் கிடைக்கப்போவதில்லை.. துப்பாக்கிகளின் மனச்சாட்சியை வெறும் பூச்சிகளாலும், புழுக்களாலும் உலுக்க முடியும் என்றால் அது எவ்வளவு நன்றாக இருக்கும்.


 • புலம்பெயர்ந்தவர்களில் உங்களைக் கவர்ந்த எழுத்தாளர்கள் வரிசையில் சக்கரவர்த்தியை குறிப்பிட்டீர்கள். அவர் புலம்பெயர்ந்து சென்ற பின் தான் சிறந்த சிறுகதைகளை தர முடிந்திருக்கிறதா?

நிச்சயமாக அப்படித்தான் நான் நினைக்கிறேன். அவர் பாதுகாப்பான ஒரு சூழலில் இருந்து எழுதுகிறார். நமது தமிழ் எழுத்தாளர்களையும் ஒரு பாதுகாப்பான சூழலுக்கு மாற்ற உத்தரவாதமளிப்பீர்களானால் திறந்த மனதுடனான படைப்புகள் மேலும் கிடைக்கலாம். சக்கரவர்த்தி என்னைக் கவர்ந்த எழுத்தாளர் என்பது ஓர் எல்லை வரைக்கும் சரியாகிறது. ஆனால், அவருடைய 'யுத்தமும் அதன் இரண்டாம் பாகமும்', என்ற கதையின் பின்பகுதி தேவையற்ற நீடிப்பு. கலைஞன் என்பவன் பலதரப்பு நியாயங்களையும் விசாரணை செய்ய வேண்டியவன். வன்மமும் திட்டமிடலும், கதையின் நோக்கத்தை சிதைத்துவிடும். ஜெயமோகனின் 'பின்தொடரும் நிழலின் குரலிலும்' நான் உணர்ந்த சங்கதி இதுதான். ஜெயமோகனின் விஷய ஞானம், தேடல், பிரயாசை இவற்றையெல்லாம் மீறி அந்நாவலில் தென்படுவது மார்க்சிஸ்டுகள் மீதான வன்மம், இது அங்கீகரிப்புக்குரிய ஒன்றல்ல. சக்கரவர்த்திக்கும் இது பொருந்தும்.

 

 • சினிமாத்துறை சம்பந்தமாக அவ்வப்போது எழுதிவருகிறீர்கள். அதில் எப்படி ஆர்வம் வந்தது?

பள்ளிப்படிப்பை விட எனக்கு அந்த நாட்களில் பிடித்த விஷயங்கள் மூன்று. கதைப்புத்தகங்கள், சினிமா, பாட்டு. நான் பார்த்த முதலாவது தமிழ்ப்படம் அரசிளங்குமரி என நினைக்கிறேன். என்னுடைய சொந்த ஊருக்கு புதிய திரைப்படங்கள் வர மிகவும் தாமதமாகும். சுடச்சுட பார்ப்பதற்காக 40 கிலோமீற்றர் தூரமுள்ள மட்டக்களப்புக்கு போவேன். ஒரே நாட்களில் இரண்டு படங்களைப் பார்த்துவிட்டுத் திரும்புவேன். பீம்சிங்கின் ஏராளமான படங்களைப் பார்த்த காலம் அது. பாலும்பழமும், பார்த்தால் பசிதீரும், பாக்கியலஷ்மி, ஸ்ரீதரின் தேன்நிலவு, நெஞ்சில் ஓர் ஆலயம்.... பந்துலுவின் கர்ணன் இவற்றையெல்லாம் அப்படித்தான் பார்த்தேன். நான் பார்த்த முதலாவது ஆங்கிலப்படம் ஜோன்வெய்னின் 'ஹட்டாரி'. தமிழைவிட மிகவும் வித்தியாசமாக ஏதோவொன்று ஆங்கில சினிமாவில் இருப்பதாக உணர்ந்தேன். கண்ஸ் ஓப் நெவரோன், ரெட் சன், குட் - பேட் - அக்ளி...... இப்படி நிறைய படங்கள். தமிழில் இப்படியெல்லாம் வித்தியாசமாக நம்பவைக்கும் விதத்தில் எடுக்கமாட்டார்களா என்று நானும் நண்பர்களும் படம் முடிந்து வரும்போது பேசிக்கொள்வோம். ஜிம் ப்றவுன், கிளீன்ட் ஈஸ்ட்வுட், லீ வேன் கிளீவ், சாள்ஸ் ப்றொன்சன்... இவர்களின் விறிசி நான். தமிழில் எம்.ஜி.ஆரின் ரசிகன். இதற்கும் காரணம் இருந்தது. நான் சின்ன வயதில் மிகவும் நோஞ்சான், கூச்ச சுபாவமுள்ளவன். எனவே, இந்த அதிரடி நாயகர்கள் என் சார்பாக சண்டை போடுவதைப் போல ஒரு சந்தோஷம். சினிமா என்ற கலையின் அடிப்படை நுட்பங்களைப் பற்றியெல்லாம் அப்போது எனக்கு எதுவும் தெரியாது. படம் பிடிக்கப்பட்ட நாடகங்கள் என்பதைத் தவிர. அதனால்தான் ஒரு காலத்தில் பாலச்சந்தர் எல்லாம் பெரிய ஆட்களாகத் தோன்றினார்கள். இந்த வகையில் கொழும்பு வாழ்க்கை எனது சினிமா ரசனையில் பெரிய மாற்றத்தைக் கொண்டு வந்தது. சத்தியஜித்ரேயின் பதேர் பஞ்சலி, சாருலதா, மஹாநகர், லெஸ்டரின் பல படங்கள், செக்கோஸ்லவாக்கியா, ஹங்கேரி, யுகோஸ்லாவியா, திரைப்பட விழாக்களில் பார்த்த பல படங்கள்...... சினிமா என்ற கலையை நம்மவர்கள் எவ்வளவு சிறுமைப்படுத்துகிறார்கள் என்பதை எனக்கு கற்றுத் தந்தன. ஆனால் நான் இப்போதும் தமிழ் படங்களை பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன். சில கெட்டபழக்கங்கள் சுடுகாடுவரை தொடரும் போலும்.


 • இன்றைய தமிழ்ச்சினிமா என்ன தளத்தில் நிற்கிறது?

அமெரிக்காவிலும், அவுஸ்திரேலியாவிலும் பாடற்காட்சிகளை படமெடுப்பதில் போய் நிற்கிறது. ஊட்டி, கொடைக்கானல், காஷ்மீரைவிட்டு நமது ஜோடிகள் விமானம் ஏறி இவ்வளவு தூரம் போய் இடுப்புகளை நெளிப்பது முன்னேற்றமில்லையா? சண்டைக் காட்சிகளிலும், பாடல்காட்சிகளிலும் நூற்றுக்கணக்கான துணைநடிகர்கள் தோன்றி உடற்பயிற்சி செய்து நம்மை எல்லாம் மகிழ்விக்கிறார்கள். அவர்கள் சம்பளம் மட்டுமா பெறுகிறார்கள்? உடல் ஆரோக்கியத்தையும் அல்லவா? எத்தனை பத்திரிகைகள் இந்த தமிழ்சினிமாவை நம்பி இயங்குகின்றன. தமிழ்சினிமாவில் உயர் தரமான முயற்சிகளுக்கு வாய்ப்பு கம்மி. ஏனெனில், இங்குள்ள தனிநபர் வழிபாடு. ரஜனி, கமல், பாரதிராஜா, மணிரத்னம், விஜயகாந், சத்தியராஜ், பாக்கியராஜ், வைரமுத்து, இளையராஜா, ரகுமான், பாலச்சந்தர் இப்படிப் பலர் தங்களை சினிமாக்கள், பத்திரிகைகள், காட்சியூடகங்கள் மூலம் பெருப்பித்துக் காட்டுகிறார்கள். இவர்களையெல்லாம் மீறி தமிழ்ச்சினிமா என்னும் கொங்றீட் வனத்தில் புல்முளைப்பது அபூர்வம்.


 • இவைகளையெல்லாம் மீறி தமிழ் சினிமாவில் நல்ல காரியங்கள் நடக்கவே இல்லை. என்கிறீர்களா?

நீங்கள் நல்ல காரியங்கள் எனச் சொல்லப்போகும் அத்தனை படங்களையும் அனேகமாக நான் பார்த்திருக்கிறேன். கடைசியாக நடந்த நல்ல காரியம் சேது என்று சொல்லப்போகிறீர்கள். கடந்துமுடிந்த நல்ல காரியங்களாக யாருக்காக அழுதான், உன்னைப்போல் ஒருவன், தாகம், திக்கற்ற பார்வதி, குடிசை, அவள் அப்படித்தான், ஏர்முனை, காணி நிலம், ஹேமாவின் காதலர்கள், மோகமுள், முகம், உச்சிவெயில் இவற்றையெல்லாம் சொல்லப்போகிறீர்கள். என்னைப் பொறுத்த வரையில் இவையெல்லாம் செழுமையாக வரவில்லை என்பதே என் அபிப்பிராயம். இவர்கள் அதீத ஆர்வத்துடன் புறப்பட்டு பழையபடி நாடகங்களையே படமாக்கியது போல்தான் எனக்கு தோன்றுகிறது. பாலுமகேந்திராவும், மகேந்திரனும் சில நல்ல படங்களை தந்திருக்கிறார்கள். மனித மனங்களின் மர்மமான இழைகள் அவர்களுடைய படங்களில் இந்தியத் தன்மையுடன் வெளிப்பட்டிருக்கின்றன. மகேந்திரனின் உதிரிப்புக்கள், நண்டு, மெட்டி, பாலுமகேந்திராவின் அழியாத கோலங்கள், மூன்றாம் பிறை.... இவற்றையெல்லாம் என்னால் மறக்க முடியவில்லை. சிங்கீதம் சீனிவாசராவின் ராஜபார்வை, கே. விஸ்வநாத்தின் சலங்கை ஒலி இவை கூட நல்ல படங்கள். சேதுவின் நடுவே வரும் சில காட்சிகளைத் தவிர அது ஒரு வழக்கமான தமிழ்ச்சினிமா பாணிப்படம்.

 

 • தமிழ்ச்சினிமாவில் உங்களுக்கு பிடித்த ஆளுமை வெளிப்பாடுகள்?

முதலில் எம்.ஜி.ஆர். பத்திரிகை வாயிலாகவும், தான் பங்கேற்ற சினிமாக்கள் மூலமும் அவர் ஒரு பிம்பத்தை உருவாக்கினார் என்று சொல்வார்கள். ஆனால் தனக்குப் பொருந்தாத எந்த பிம்பத்தையும் ஒருவனால் வெகு காலத்திற்கு தக்கவைக்க முடியாது. இன, மத பேதமற்று தமிழ் பேசும் மக்கள் பெரிதும் நேசித்த ஓர் உருவம் அது. அவர் குண்டடிபட்ட செய்தியின் போதும் மரணப்படுக்கையின் போதும் மதத்தலங்களில் இடம்பெற்ற பிரார்த்தனைகள் எல்லாம் வெறும் பொய்மைக்கு கிட்டாது. அவர் ஒரு சிறந்த நடிகர் என்பதை விட வசீகரமான நடிகர் எனச் சொல்லலாம். தமிழ் திரை உலகில் எஸ்.வி. ரங்காராவ், டி.எஸ். பாலையா, எம்.ஆர். ராதா எஸ்.வி. சுப்பையா, ஜே.பி. சந்திரபாபு, கண்ணதாசன் இப்போது நாசர் போன்றவர்கள் மிகச் சிறந்த ஆளுமை மிக்கவர்கள் என்பது என் அபிப்பிராயம்


 • இன்றைய தமிழ்ச்சூழலுடன் பொருத்திப்பார்க்கும் போது விருதுகளுக்கும், பட்டங்களுக்கும், படைப்பாளிகளுக்கும் இடையேயான தொடர்பு என்ன?

எங்களைப் போன்ற எழுத்தாளர்களின் வாய்களுக்கு பிளாஸ்டர் போட்டுவிட்டு வீட்டிலுள்ள பெண்கள், குழந்தைகளிடம் பேட்டி கண்டால் ஓர் எழுத்தாளன் பற்றி பூரணமாக அறிவீர்கள். எழுத்தாளனிடம்தான் எவ்வளவு ஆசைகள். கறுப்புக் கண்ணாடி அணிந்து போஸ் கொடுக்க, பெண்களின் கனவுகளில் தோன்ற, அத்தனை ஞாயிறு வாரப்பத்திரிகைகளிலும் தான் ஒருவனே கதை எழுத, தபாற்காரன் சுமக்கின்ற பெருமூட்டையில் உள்ள அத்தனை கடிதங்களும் தன்னொருவனுக்கே வர, மைக் முன்னால் ஏறி ஊதிப்பார்க்கும் போதே சுற்றி வர நூற்றுக்கணக்கான புகைப்படக்கருவிகள் ஒளிமின்ன..... இப்படிப்பல கனவுகளுடன் பெரும்பாலான எழுத்தாளர்கள் எவ்வளவு குழந்தைகளாகவும், பொறுப்பற்றவர்களாகவும் ஒன்றுக்கும் உதவாதவர்களாகவும் இருக்கிறார்கள். என்பதை வீட்டிலுள்ளவர்கள் சொல்வார்கள். அவர்களுக்கெல்லாம் ஓர் ஆறுதல் பரிசாக இந்த விருதுகளையும், பட்டங்களையும் கொடுப்பதில் பெரிய தப்பு ஏதும் இல்லை. அமைச்சர் தேவராஜின்காலத்தில் எனக்கும் 'தமிழ்மணி' என்று ஒரு பட்டம் தந்தார்கள். அந்தப் பெயரே சகிக்கவில்லை, இன்று வரை அந்தப்பட்டத்தை நான் பயன்படுத்தவுமில்லை. அண்மையில் ஒரு வெளியீட்டு விழாவில் என்னை சிறுகதை வித்தகர் என்று அழைத்தார்கள். என்ன கொடுமை.

இந்த மாதிரி விஷயங்களையும் ஒரு படைப்பாளி எதிர் கொள்ளத்தான் வேண்டியிருக்கிறது. இப்பட்டங்களால் பூரிப்படைவதோ, இவற்றை ஒரு பாரமாக சுமந்து திரிவதோ அவரவரைப் பொறுத்த விஷயங்கள். தன் படைப்புக்கள் மூலமே படைப்பாளி வாழ்வான். பட்டங்கள் விருதுகளால் அல்ல.


 • உங்களுடைய இலக்கிய வாழ்வில் இரண்டு சிறு சஞ்சிகைகளை நடாத்தியிருக்கிறீர்கள். ஆரம்பத்தில் காலரதம், பின் வியூகம். இச்சிறு சஞ்சிகை அனுபவம் என்ன?

காலரதம் வந்தது 1974ல். இன்னொரு ஆனந்தவிகடன், இன்னொரு குமுதம் என்ற கனவில் வந்த காலரதம் பலதரப்பட்ட கருத்துகளின், ரசனைகளின் சங்கமமாக இருந்தது. மீலாத்கீரனும், நானும் இணை ஆசிரியர்களாக இருந்தோம். இளங்கீரன் காரணமாக அவருடைய மகனான மீலாத் கீரனுக்கு படைப்புகள் தேர்வில் சில வரையறைகள் இருந்தன. எனக்கு அப்படியெல்லாம் இல்லை. எல்லோரும் எழுதட்டும், எல்லாமும் வரட்டும் என்றேன். இரண்டு இதழ்களுடன் காலரதம் நின்று போய் விட்டது. 1986ல் வியூகத்தை வெளியிட்டோம். ஆளுக்கொரு பக்கம் என்று தீர்மானித்து நான், சோலைக்கிளி, எச்.எம். பாறூக், நற்பிட்டிமுனை பளீல், மன்சூர்.ஏ.காதர், மு.சடாட்சரம், வீ. ஆனந்தன் ஆகியோர் முதல் இதழில் எழுதினோம்;. படைப்புலகம் சார்ந்த பிரச்சினைகள், நூல்கள், திரைப்படங்கள் பற்றிய காரசாரமான விமர்சனக் குறிப்புகளை, மொழி பெயர்ப்புக்களை மூன்று இதழ்களில் தொடர்ந்து வெளிக்கொணர்ந்தோம். சிறந்த படைப்புகள் வராமையே வியூகம் நின்றுபோனமைக்கான காரணம். சிறந்த படைப்பாளிகள் மிகச்சோம்பேறிகளாகவும், மோசமான எழுத்தாளர்கள் சுறுசுறுப்பாகவும் இருப்பதைக்கண்ட நான் வெறுமனே பக்கங்களை நிரப்ப விரும்பவில்லை. வியூகம் நின்றுவிட்டது.

 

 • உங்களுடைய பல சிறுகதைகளில் பெண்கள் அதுவும் காதலின் உச்சத்தில் உன்னதமாக அல்லது குறுக்கீடாக இருந்தாலும் மிக ஆழமாக வந்து வந்துபோவது பற்றி.... தொலைவில் தெரியும் ஒற்றை நட்சத்திரத்தில் வரும் வசந்தா, பெரிய வெள்ளி புனித ஞாயிறில் வரும் மனோஹரி, அசோக வனத்தில் வரும் டீச்சர், விளிம்பில் வரும் அபி, ஜெனியில் வரும் ஜெனி....

சாய்வு நாற்காலியில் அமர்ந்துவிட்ட பழைய நடிகர் ஒருவரிடம் அவருடைய கதாநாயகிகள் பற்றிய மலரும் நினைவுகளைக் கிளறுவதைப்போல் இது இருக்கிறது. என் வாழ்வின் போக்கை முக்கிய திருப்பங்களை பெண்கள்தான் ஏற்படுத்தினார்கள். காதல், வசீகரம், காமம், சபலம், சிநேகம், பாசம்.... இத்தகைய பல்வேறு உணர்வுகளுடன் நான் நெருக்கமாகவிருந்த எல்லாப் பெண்களுமே என் கதைகளில் வந்துவிட்டார்கள் என்று சொல்ல முடியாது. உலகத்தின் மகத்தான படைப்பு என்று நான் பெண்ணைத்தான் சொல்வேன். இது பெண்ணை ஒரு போகப்பொருளாக நோக்கும் பார்வை என்று பலர் சொல்லக்கூடும். நான் அப்படி கருதவில்லை.

எந்தக் கதையிலும் அவர்களை நான் கொச்சைப்படுத்த முயன்றதில்லை. பெண் என்ற மாய நதியை அதன் புதிர்த்தன்மையை தட்டுத்தடுமாறி அறியமுயன்றிருக்கிறேன். நெருக்கத்தில் அவர்கள் காட்டிய தீவிரத்திலும், பின்னர் பிரிதலில் காட்டிய அவசரத்திலும் என் வாழ்;வின் பெரும்பகுதி நேரம் அலைக் கழித்திருக்கிறேன். நமது சூழல் உருவாக்கி வைத்திருக்கும் தாலி சென்டிமென்ட், ஒருவனுக்கு ஒருத்தி உபதேசம், அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு, அறிவுரைகள்.... இவற்றுக்கெல்லாம் அப்பால் இன்னொரு யதார்த்தமான உலகம் இருக்கிறது. சுருட்டு பற்றவைத்துக்கொண்டு ஒரு கிளாஸ் சாராயத்தை மடமடவென்று குடிக்கும் கிராமத்து பெண்களை நான் பார்த்திருக்கிறேன். கூச்சமில்லாமல் வம்புக்கதை பேசும் பெண்களை கண்டிருக்கிறேன். இந்த உண்மைகளையெல்லாம் காண மறுத்து காலகாலமாக அவர்களைப் போற்றியோ அல்லது ஒடுக்கியோ வந்த முட்டாள்கள் நாம். நம்முடைய தமிழ் சினிமாக்களும், பத்திரிகைக் கதைகளும், தொலைக்காட்சி நாடகங்களும் உருவாக்கும் பெண் என்ற போலியான பிம்பத்தை நான் கணக்கில் எடுப்பதில்லை. இதை என் கதைகளில் காண்பீர்கள். எங்கோ, எவளோ ஒருத்தியின் நேசத்திற்குரிய மானசீகக் காதலனாக இருப்பதுதான் என் விருப்பம்.


 • இன்றைய வாசிப்பனுபவம் தரும் சலிப்பு – தவிர்க்க முடியாத படி நமது முன்னைய எழுத்தாளர்களிடம் நம்மைத்தள்ளிவிடுகிறது என்ற கருத்து சரியானதா?

ஓரளவு சரி, நவீன பண்டிதர்கள் நிறையப் பேர் இன்றைக்கு வந்து விட்டார்கள் தலையணை அளவு நாவல்கள் நிறைய வருகின்றன. இலக்கிய அனுபவத்தை கருகலாக்கியதற்காக, மட்டுப்படுத்தியதற்காக, வித்துவச் செருக்குக்காக பண்டிதர்களையும் வித்துவான்களையும் நாம் ஒரு காலத்தில் நிராகரித்தோம் ஆனால் இன்று பல இஸங்களால் பீடிக்கப்பட்டு புதிய பண்டிதர்கள் தோன்றுகின்;றார்கள். ஆசையுடன் நான் வாங்கிய பலபுத்தகங்கள் வழுக்குமரமேறும் அனுபவத்தையே எனக்குத் தந்தன. விசித்திரமான கனவுப் பாணியில் ஒன்றுக்கொன்று தொடர்பற்ற முறையில் லத்தீன் அமெரிக்க மூகமூடிகளுடன் நமது புதிய பண்டிதர்கள் களமிறங்கியிருக்கிறார்கள். சாருநிவேதிதாவின் 'எக்ஸிஸ்டென்ஸியலிஸமும். ஃபேன்சி பனியனும்,' ஸிரோ டிகிரி, தமிழவனின் 'ஏற்கனவே சொல்லப்பட்ட மனிதர்கள்'இ 'சரித்திரத்தில் படிந்த நிழல்கள்' 'ஜி.கே எழுதிய மர்மநாவல்' கோணங்கியின் 'பொம்மைகள் உடைபடும் நகரம்'. 'உப்புக்கத்தியில் மறையும் சிறுத்தை', 'பாழி', சா. இராஜநாயகத்தின் 'சிலமுடிவுகள் சில தொடக்கங்கள்' மற்றும் 'கர்நாடக முரசும்', 'நவீன தமிழ் இலக்கியம் மீதான ஓர் அiமைப்பியல் ஆய்வும்'... இவையெல்லாம் வாசகர்களை நோக்கிய சித்துவிளையாட்டுக்கள் என்றுதான் நான் சொல்வேன். எனினும், இந்தச் சூறாவளிக்கு மத்தியிலும் நல்ல படைப்புகள் தமிழில் வந்து கொண்டுதானிருக்கின்றன. சு.ரா. வின் 'குழந்தைகள், பெண்கள் ஆண்கள்'. இமையத்தின் 'ஆறுமுகம்', நாஞ்சில் நாடனின் 'திக்குகளெட்டும் மதயானை' இவற்றையெல்லாம் படிக்கும்போது நாம் முற்றாக வறண்டுபோய் விடவில்லை என்ற நம்பிக்கை ஏற்படுகிறது.

இத்தகைய ஓரு சூழலில் தான் ப.சிங்காரம், தி. ஜானகிராமன், ஆர். ஷண்முகசுந்தரம், நீலபத்மநாபன், அசோகமித்திரன், மாதவன், கி. ராஜநாராயணன், சு.ரா. போன்றவர்களின் படைப்புலகம் குறித்த பெருமை புலப்படுகிறது. அன்று அவர்களின் புத்தகங்கள் இவ்வளவு அழகாக இல்லைதான். அட்டைகளில் நவீன ஓவியங்களும் இல்லைதான். இருந்தாலும் நாவலில் உயிரும் உணர்வும் இருந்தது. ஆனால் இப்போது நடப்பது அறிவுஜீவிகளின் அடாவடித்தனம்.

 

 • உங்கள் முப்பது வருடகாலப் படைப்பு வாழ்வில் சிறுகதை என்ற சட்டகத்திற்குள் மட்டுமே உங்கள் படைப்பை வெளிக் கொணர்ந்;தீர்களே நாவல் முயற்சிகளில் ஈடுபட வில்லையா?

அப்படித் திட்டவட்டமான வரையறை எதுவுமில்லை. சிறுகதை ஒன்றை எழுதி முடிப்பதற்கே மூச்சு வாங்குகிறது. நாவல் என்னும் போது என் உயிர் மூச்சே முடிந்துவிடும். திசை, புதுசு, வியூகம், மூன்றாவது மனிதன் ஆகியவற்றில் சில கவிதைகள் எழுதியிருக்கிறேன். ஆனால், அதெல்லாம் ஓர் அந்நியவீட்டுக் கூரையின் கீழ் படுத்துக் கொண்டு யோசி;ப்பது போல் இருந்தது. சிறுகதையில் கொஞ்சம் அவகாசமெடுத்து நிதானமாக சொல்ல வந்ததை எட்டிவிடமுடிகிறது. நாவல் எழுதுவது பற்றி நான் யோசிக்கவே இல்லை.

 

 • 1956ல் பிறந்திருக்கிறீர்கள். இந்த 44 வருட வாழ்க்கையில் இலக்கிய வாழ்வு எப்படி இருக்கிறது?

எனக்கு 44 வயதாகிறது என நீங்கள் ஞாபகமூட்டும் போது கவலையாக இருக்கிறது. இவ்வளவு சீக்கிரமாக அஸ்தமனத்தை நோக்கி வாழ்வின் சறுக்குப்பாதையில் வழுக்கிக் கொண்டிருக்கிறேனே என்ற துக்கம் நெஞ்சை கவ்வுகிறது. படைப்பாளிக்கான அர்ப்பணத்துடன் நான் இயங்கவில்லையே என்;ற குற்ற உணர்வு ஒரு மரங்கொத்திப் பறவைபோல் என்னைக் கொத்திக்கொண்டே இருக்கிறது. எனது படைப்புகள் குறித்து நான் சந்தோஷம் கொண்டபோதும் எனது இலக்கிய வாழ்க்கை திருப்தியைத் தந்தது என்று பொய் சொல்லமாட்டேன். ஆளுமை உள்ள படைப்பாளிகளை அங்கீகரிப்பதற்கு மிகவும் தயங்குகிற இலக்கிய உலகம் இது. கிறிக்கெட் ஆட்டத்தைப் பாருங்கள். அபாரமாகப் பந்து வீசுபவர்கள், சிறப்பாக துடுப்பபெடுத்தாடுபவர்கள்.. இவர்களுக்கு பெயர்கள் கிட்டும். இசைத்துறையிலும் அவ்வாறுதான். ஆனால், இலக்கிய உலகைப் பொறுத்தவரையில் ஒன்றன் கீழ் ஒன்றாக வருமாறு வரிகள் எழுதுபவர் கவிஞர் என்ற அடையாளத்தை எளிதாகப் பெற்றுவிடுகிறார். இத்தகைய சூழல்; எனக்கு எரிச்சல் ஊட்டுகிறது. எனினும், இந்த ஒவ்வாத சூழலிலும் கூட இந்த இலக்கிய வாழ்க்கை இனிய பல நண்பர்களை பெற்றுத் தந்திருக்கிறது. இது பல கசப்புக்களை மறக்கப் போதுமானது.

 

 • இன்றைய உங்கள் மன நிலை என்ன?

நான் புரியும் தொழில் சமூகத்தில் எனக்கான அடையாளம், வளர்ந்த பெண் பிள்ளைகளின் தகப்பன் இப்படிச் சில காரணங்களால் பலவற்றை சொல்லவும், எழுதவும் தயங்குகிறேன். இது பாசாங்கு அல்லவா? என்று நீங்கள் கேட்கலாம். இதை நான் மௌனம் என்று சொல்வேன். எனது பிள்ளை என் கதையை படித்துவிட்டு என்ன அபிப்பிராயம் கொள்வாளோ என்ற பயம் என்னை மௌனமாக்கப்பார்க்கிறது. 15-20 ஆண்டுகளுக்கு முன் நான் எதையும் தயங்காது எழுதினேன். இப்போது நான் இருப்பது திரிசங்கு சொர்க்கத்தில்.

மனதெங்கும் வெறுமை நிரம்பியிருக்கிறது. நான் என் ஜன்னல்களை ஒவ்வொன்றாக சாத்திக்கொண்டே வருகிறேன். எனினும் பூனை நகங்களால் வெளியே இருந்து பிறாண்டிக்கொண்டு இருக்கிறார்கள். நான் கோயிலுக்குப் போவதில்லை. இந்த உலகத்தில் என் கைகள் பற்றிக்கொள்வதற்கான எந்த ஆதாரத்தையும் நான் காணவில்லை. புத்தகவெளியீட்டு நிகழ்வுகளிலும், கல்யாண வைபவங்களிலும், மதச்சடங்குகளிலும், அரச அலுவலகங்களிலும், சந்தர்ப்பவசத்தால் போய் உட்காரும் போதெல்லாம் சு.ரா. வினுடையதைப் போன்று ஒரு குரல் மனச்சுவர் எங்கும் எதிரொலித்துக்கொண்டே இருக்கிறது. 'என் கால்களே என்னை ஏன் இங்கெல்லாம் அழைத்துச் செல்கிறாய்?'

ஒரு படைப்பாளிக்கு எவ்வளவு வயதானாலும் அவனுடைய மனம் மாத்திரம் இளமையாக இருக்கவேண்டும். அப்போதுதான் அவனுடைய படைப்பிலும் உயிர்த்துடிப்பு இருக்கும். என்னுடைய சிறு வயதில் வீதியில் போகும் சுப்பிரமணியத்தை 'ஏய் அரைப்போத்தல்' என்று கத்திவிட்டு ஓடுவேன். அவன் கம்பை சுழற்றியபடி விரட்டிவருவதைப்பார்க்க எனக்கு அப்படி ஒரு ஆசை. இப்போதும் கூட அப்படி கத்திவிட்டு ஓடும் ஆசை மனம் எங்கும் வியாபித்திருக்கிறது. ஆனால் தெருவில் யாரும் இல்லாத நேரத்தில்.

மூன்றாவது மனிதன்
இதழ் 09, ஆகஸ்ட் - ஒக்டோபர், 2000
நேர்காணல் : எம்.பௌஸர்

(10 வருடங்களுக்கு முன்னர் பதிவுசெய்யப்பட்ட பேட்டி இது)

 


பதிவேற்றம் - செப்டம்பர் 2010
© பதிப்புரிமை உமா வரதராஜன் - 2010
Designed By : HLJ Solutions