இலையான்களின் சங்கீதம்

உமா வரதராஜன்

ஈ !
என் குறட்டையின் இனிமைக்கு
செருப்பாகக் கூட வராத
உன்னுடையதை
சங்கீதம் என்கின்றாய்.

என் மலர்ப் படுக்கை வரை வந்து
காதுகளில் கிணு, கிணுத்து
நுழையவும் பார்க்கின்றாய்.
என் முக சலனம் அறிய
சுற்றிச், சுற்றி வருகின்றாய்.

குவளையில் அவளாகித் ததும்பும்
'வைன்' தந்த கதகதப்பில்

போர்வைக்குள் புகுந்து
அந்தப் பனிநிலப் பாவையுடன்
கனவுப் பெருவெளியெங்கும்
தேங்காய்த் துருவல்கள் சொரியும் குளிரில்

கால்கள் புதைய
காதலின் மூச்சு ஆவியாய் சூழ
நான் அலைவதை உன்னால் என்ன செய்ய இயலும்?

தன் உயிரைச் சுருக்கி, ஒரு காகிதமாக்கி, கழுத்தில் முடிந்து
அவள் பறக்க விடும்
மாடப் புறாவை எதிர்பார்த்து
புரண்டு கொண்டிருக்கும் எனது காதருகில்

இலையானே நீ வந்து கிணு கிணுக்கின்றாய்
ஒரு யானையின் பாதத்தடி புழுவைப் போல.

கொத்து ரொட்டிக்காரனின் தட தடப்பினிலும்,
அகால வேளைகளில் வாகனங்களின் அலறல் ஒலியினிலும்
தூங்கப் பழகியவன் நான்.
முட்டாளே, உன்னால் முடியுமா என்னை எழுப்ப?

யார் யாரினதோ கழிவுகளில் குந்தி எழும்பி வரும் நீ
ஊஞ்சல் ஆட
அறை மூலையில் தொங்குகின்றது
என் கோவணம்.
போய் எடுத்துக் கொள் !

 

07 .01 .2011

 
 
பதிவேற்றம் - ஜனவரி 2011
© பதிப்புரிமை உமா வரதராஜன் - 2010
Designed By : HLJ Solutions