நானே... எனக்குள் வசிக்கும் நல்ல கவிதை !

அனார்

ஆண்மையற்ற குறிகளால்
அபாண்டங்களை எழுதியவர்கள்
கெக்கலித்த சமயங்களில்
என்னை சொர்க்கத்துக்கு அழைத்துச் செல்பவன்
களைக்கவேயில்லை

வெள்ளைக்குதிரையில்... என்னை இறுகத் தழுவியபடி
மேலும்... மேலும்... இறுகத் தழுவியபடி
வானத்தின் ஏழாவது அடுக்குகளை தாண்டிச் செல்கிறான்

பிச்சி...
நான் வனதேவதை...
நான் கடற்கன்னி...
நான் நிறங்களால் ஆனவள்...
நான் குறிஞ்சியின் தலைவி...
எனக்குக் கவிதை முகம்... ஆகி வந்ததெல்லாம்
அவன் முத்தங்கள் இடுகின்ற கணங்களால்

அவன் புருவங்களில்.... உதடுகளில்
மூன்று நாள் தாடி முளைத்த கன்னங்களில்
எனது கவிதைகள் பெருக்கெடுத்துக் கொண்டிருக்கின்றன

திராட்சை மதுவின் ருசிகொண்ட கண்களுடையவன்
மேகங்களை முந்திச் செல்கின்றான்
வளைவற்ற நெடுந்தூர நேர் பாதையில்
சூரிய வண்ணங்களை என் கனவிற்குள் விசுறுகிறான் ...........................
மழைக்கு முன்னதாக காற்றலைகள் மிதக்கின்றன


சதுப்பு நிலத்தை தாண்டி
ஆற்றைச் சுற்றிப்போகும் தெருவழியாக
குதிரையாகிப் பாய்கிறது 'மோ' பைக்
நீலத்தாமரைகள் ஆற்றின் பச்சை இலைகளின் மீது
முழுவதுமாக மலர்ந்திருக்கின்றன... என்னைப்போல்

கைகளை விரித்து...
காற்றைப் பிடித்து பிடித்து நீந்துகிறேன்

அவன் காது மடல்களில் விழுந்த
மழைத் தூவல்களை கொத்தி உண்ணுகிறேன்

சோளகம் அவித்து விற்கும் பாமரத்தி எங்களை வாழ்த்துகிறாள்
மழை தெறிக்கும் தருணம்
சோளகம் காதலின் சுவைமிக்க மணமாகிறது

தீராக் காதலனும்...
தீராத மழையும்...
தீராத பயணங்களும்...
'நான்' என்கின்ற தீராக் கவிதையும்.............. !


06 ஜனவரி 2011

 
 
பதிவேற்றம் - ஜனவரி 2011
© பதிப்புரிமை உமா வரதராஜன் - 2010
Designed By : HLJ Solutions