ஊஞ்சல்

அனார்

சாய்ந்து எழுந்த விருட்சம்
வந்து செல்கின்ற மலைக்குன்று
தள்ளாடுகிற ஆகாயம்
இங்குமங்கும் ஓடியோடித் தேய்ந்த நிலா
ஊஞ்சலில்...
தலைகீழாகப் பார்க்கிறேன் உலகத்தை

காற்றுக் குழிகளுக்குள் போய்விழும் மாதுழம் பூவிதழ்கள்

ஊஞ்சலாடும் சிறுமிக்கு சிரிக்க மட்டுமே தெரியும்

பறவையொன்றின் தன்மைகளை
கற்றுத்தருகிறது ஊஞ்சல்

வானகத்தின் ஏழு வாசல்களையும் எட்டித் தொடுகிறது

அவளுக்கு பாலூட்டுகையில்
மௌனத்தை உறுஞ்சி... அசைந்தது கயிற்றூஞ்சல்

சிறுசுகள் கூடி
குதிப்பும்... கூச்சலுமாய் ஆடிய
கொய்யாமரக் கிறுக்கூஞ்சல்

தண்ணீர் கரையைத் தொட்டாட
பழுத்துக் காய்ந்து தொங்கிடும்... தென்னோலை ஊஞ்சல்

ஊஞ்சல் கொண்டுபோய் எறிந்த எங்கள் உலகம்
சிவந்த தும்பிகளின்... கண்ணாடிச் சிறகைப்போல்
எதிலெதிலோ மோதிச் சிதைந்தது

ஆண்களென்றும்...
பெண்களென்றும்... பிரிந்தோம்
வயது வந்தவர்களாகி...

எங்கள் ஊஞ்சலைத் தவறவிட்டோம்

ஆகஸ்ட் 2010பதிவேற்றம் - செப்டம்பர் 2010
© பதிப்புரிமை உமா வரதராஜன் - 2010
Designed By : HLJ Solutions