நான் கண்ட மைனா - பேசும்! பாடும்!! ஆடும்!!!

எஸ்.எல்.எம். ஹனீபா

1975ஆம் ஆண்டு ஊரிலிருந்து 200கிலோமீற்றர்களுக்கப்பால் தொழில் நிமித்தம் இடமாறிக் கண்டிக்குச் செல்கிறேன். அந்த நாட்களில் பஸ்ஸில் அதிகாலையில் மேற்கொள்ளும் அந்தப் பயணம் பறவைகளின் உரையாடல்களுடன் ஆரம்பமாகி, பறவைகளின் பாடல்களோடு முடிவடையும். பாதைகளின் இரு கரைகளிலும் மரங்கள் கிளைவிரித்து நிற்கும். அந்த நாட்களுக்கும் ஒரு ஐஸ்வர்யம் இருந்தது. சண்டையில்லாத நாட்கள். அப்படியான ஒரு நாளில்தான் நான் இந்த மைனாவைக் கண்டேன்.

ஒரு நாள் காலையில் நான் கடமைபுரியும் மிருக வைத்தியர் காரியாலயத்திற்கு ஒரு பெரியவர் வந்தார். தலையில் மிகப் பெரிய தொப்பி, இடுப்பில் அதே போல் வார் அவர் நடந்து வரும்போது ஒரு குட்டியானை நடப்பது போல்......

காரியாலயத்தில் உள்ள அனைவரும் அவரைக் கண்டதும் எழுந்து மரியாதை செய்தனர். நானும் மரியாதை செய்தேன். மரியாதைக்குரிய தோற்றம் அவரிடம் குடிகொண்டிருந்தது. நேராக அவர் எனது மேலதிகாரியின் அறையை நோக்கி நடந்தார். சிறிது நேரத்திற்கெல்லாம் எனது காரியாலயத்தின் சிற்றூழியர் என்னை மேலதிகாரி அழைப்பதாக கூறினார்.

அந்தக் காரியாலயத்தில் நான் ஒருவனே தமிழ் பிரதேசம் இருந்து கடமைக்குப் போனவன். என்னுடன் ஏழு பேர் அங்கு கடமைபுரிந்தனர். அனைவரும் சிங்களர். எனது மேலதிகாரி ஒரு இசைப்பிரியர். நான் கலை, இலக்கியம், இசை தொடர்பில் ஆர்வம் கொண்டவன். எங்கள் இருவருக்குமான உறவு கலாதியானது. அதிகாரி, ஊழியன், சிங்களவன், தமிழன் என்ற எண்ணங்களுக்கு எங்களிருவரிடமும் இடமில்லாதிருந்தது. ஆனாலும் எங்களைச் சூழ இருந்த நிலைமை வேறு விதம். நான் சந்தித்த நல்ல மனிதர்களில் எனது மேலதிகாரி சாம்ஸன்டேனியல் மிகவும் ஆழுமைமிக்கவர்.

உடனடியாக எனக்கு அந்தப் பெரிய மனிதரை அறிமுகம் செய்வித்தார்.
' ஹனீபா! இவர் 'நிலம' கஜநாயக்கநிலம.' என்றவர் கண்டிப் பெரஹராவில் இடம் பெறும் யானைகளின் திருவிழாவை முன்னின்று அழைத்துச் செல்பவர. பௌத்தர்களின் பெருமதிப்புக்குரிய பெரியவர் என்றார். நான் உடனே 'உங்களைக் காண்பதும் உங்களோடு உறவாடுவதும் பெரும் பாக்கியம்' என்றேன். என்னுடைய சிங்கள உரையாடல் என்மீது நிலமைக்கு பெரும் மதிப்பை ஏற்படுத்தி இருக்க வேண்டும். நான் அவரது கரங்களைப் பிடித்து எனது அன்பை வெளிப்படுத்தினேன்.

அவரின் பார்வையில் நான் ஓர் யாழ்ப்பாணத்து தமிழன். அவரின் பசுவுக்கு உடனடியாக செயற்கை முறை சினைப்படுத்துதல் செய்ய வேண்டும். காரியாலயத்தில் ஐந்து ஊழியர்கள் இருக்கும் பொழுது நிலமை என்னையே வருமாறு அழைப்பு விடுத்து, பகற் போசனம் எனது வீட்டில் என்று விருந்துக்கும் அழைத்தார். நான் வேலை செய்யும் வத்துகாமத்திலிருந்து அவரின் இடம் பத்து கிலோமீற்றர் தூரம். அவர் சென்ற சிறிது நேரத்திற்கெல்லாம் நானும் அவர் வீட்டைத் தேடி புறப்பட்டேன்.

அவரின் ஊர் அக்குரணையை தாண்டிச் செல்லும் பூஜாபிட்டிய, பூஜாபிட்டிய என்பது வணக்கத்துக்குரிய நிலம் எனத் தமிழ்ப்படுத்தலாம். சிங்களவர்களின் பாரம்பரிய ஜென்மபூமியோ நான் அறியேன். பஸ்ஸில் சென்று வீதியில் இறங்கியதும் நிலமையின் வீடு ஒரு மலைக்குன்றில் கிட்டத்தட்ட முப்பது படிகள் ஏறி தலைவாசலில் கால்வைத்ததும் அந்தக் குரல் கேட்டது. அது மனிதக் குரல் அல்ல என்பதை ஒரு நொடியில் புரிந்து கொண்டாலும் கூடவே சந்தேகமும். மனிதன் என்றால் சந்தேகம் அவனைவிட்டுப் போகாதே.

'அதோ நமது பசுவுக்கு மருந்து போட மாத்தையா வந்துவிட்டார்.' கீச்சுக் குரலில் இரண்டு, மூன்று தடவைகள் வேகமாக எதையோ தட்டித்தட்டி ஒரு சிறுமியின் அடித் தொண்டையிலிருந்து அந்தச் சத்தம் அப்படித்தான் நான் நினைத்தேன். உடனே உள் வீட்டிலிருந்து 'சூட்டி வாய மூடிட்டிரு' ஒரு கிளியின் குரலில் நிலமயின் மகள் கட்டளை பிறப்பித்தாள். எனது வருகையைத் தெரிவித்த குரலுக்குரிய உருவத்தை நான் அங்கும் இங்குமாக தேடிய போது அந்த வீட்டின் முன் விராந்தையில் அழகாக அமர்ந்திருந்த அந்த மைனா என்னைப் பார்த்து மிக அமைதியாக
'மாத்தையா! வாடிவென்ன' ஐயா இருங்கள் என்று கூறியது. நான் புல்லரித்துப் போனேன். அதன் சிங்கள மொழி உரையாடலும், நளினமும், அழகும் என்னை பரவசத்தில் ஆழ்த்தியது.

சிறிது நேரத்திற்கெல்லாம் நிலம காய்கறிகளுடன் வந்து சேர்ந்தார். மைனா அவருடன் ஒரு வார்த்தை பேசவில்லை. என்னுடன் கதைத்துவிட்டு மைனாவைப் பார்த்தார் அப்பொழுதும் மைனா வாய்திறக்கவில்லை. உள்ளே மகளிடம் 'என்ன மகள் சூட்டி பேசுகிறாள் இல்லை' என்ற போது பறந்து வந்து அவர் மடியில் அமர்ந்த மைனா அக்கா தன்னைத் திட்டியதாக முறையிட்டது. நான் விழுந்து விழுந்து சிரித்தேன். நிலம அந்த மைனா தன்னிடம் வந்த கதையை, வளர்ந்த கதையை சொல்லி முடித்ததும். – தலையை குனிந்து மைனாவின் காதுகளில் 'குசுகுசு'த்தார்

திடீரென அது பாடத் தொடங்கியது பானுமதியின் குரலை தொட்டாற் பொல தலையை நிலத்தில் குத்தி கரணமடித்தது. அன்னம்போல் நடந்து ஆடிக்காட்டியது. எல்லாம் அதற்குத் தெரிந்த சிங்கள மொழியில். அன்றிலிருந்து நானும் அரும்பாடுபட்டு ஒரு மைனாக் குஞ்சுவை கண்டியிலிருந்து ஊருக்குக் கொண்டு வந்தேன். 1975இல் அதன் விலை இருநூறு ருபாய். இப்பொழுது மூவாயிரம் ரூபாய். மைனாவுக்கு நாம் தான் கதைபழக்க வேண்டும். அடிக்கடி அதனுடன் கதைக்க வேண்டும். வீட்டில் பலரும் புளங்கும் இடத்தில் மைனாவை வைக்க வேண்டும். எனது மைனா முதல் சொன்ன வார்த்தையே உம்மா தான். எங்களோடு வாழ்ந்த மைனா ஒரு நாள் வீடு திரும்பவில்லை எங்கள் காணியிலிருந்து பலாவின் உச்சியிலிருந்து உம்மா என்றது. இரண்டு, மூன்று தினங்களின் பின்னர் மீண்டும் மைனா வீடு திரும்பவில்லை எனது பேத்தி இடிந்து போனாள் நான் அடைந்த துன்பம் சொல்லில் மாளாது. அன்று போன மைனா போனதுதான். நானும் மைனா வளர்ப்பதை விட்டு விட்டேன்.

க்ரியாவின் அண்மைய வெளியீடு 'கொண்டலாத்தி' கவிஞர் ஆசையின் அழகின் அனுபவத்தை நம் மீதும் உறைய வைக்கும் எழுத்துக்கள். டில்லி சாகித்ய விழாவுக்குச் சென்று வந்த நண்பரும் கவிஞருமான எம்.ஏ. நுஃமான் மூலம் படிக்க கிடைத்தது புத்தகத்திலிருந்த மைனாவை பார்த்ததும் எனது மைனா மனத்தில் சிறகசைத்தது இந்த மைனாவுக்கு பெயர் மலைநாட்டு மைனா. இதோ நான் வளர்த்த உறவினர்களில் ஒருத்தி. ஏறாவூரில் எனது மைத்துனர் றசீது பு.ளு.ழு. வீட்டில் வளர்கிறது.

என்னுடன் இருப்பவர் மைனாவின் சொந்தக் காரி

(Ceylon hil mynah)
(gracula ptilogenys acridotheres tristis)


பதிவேற்றம் - ஜனவரி 2011
© பதிப்புரிமை உமா வரதராஜன் - 2010
Designed By : HLJ Solutions