நாணலின் கானம்

உமா வரதராஜன்

ஓவியம்: மணிவண்ணன்

எஸ்.பி. பாலசுப்ரமணியம் மறைவு தமிழ்ச் சூழலில் அதிகூடிய அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. பதினாறு மொழிகளிலும் நாற்பதாயிரத்துக்கும் அதிகமான பாடல்களைப் பாடியவர், மாநில ரீதியாகவும் தேசிய ரீதியாகவும் பல உயரிய விருதுகளைப் பெற்றவர், கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் பெயர் பதித்தவர், திரைப்படங்கள் சிலவற்றில் நடிகர், இசையமைப்பாளர், இரவல் குரல் கலைஞர்; இவற்றால் மாத்திரம் தோன்றியதல்ல இந்த அதிர்வலை. இதற்கு நிகரான திறமையும், ஏறத்தாழ இதேயளவு காலப்பரப்பும் துறைசார்அனுபவமும் கொண்ட எம்.எஸ். விஸ்வநாதன், டி.எம். சௌந்தரராஜன் ஆகியோரின் மறைவு தமிழ்ச் சூழலில் பெறாத பரவலான கவனத்தையும் அனுதாபத்தையும் எஸ்.பி.பி பெற்றிருந்தார். மருத்துவமனையில் அவரிருந்த இறுதிநாட்களில் இன, மத பேதம் கடந்து பலரும் பிரார்த்தனை செய்தார்கள். எனினும் அவரால் மரணத்தை வெல்ல முடியவில்லை. அவர் காலமானதும் முகநூலும் சமூக வலைத்தளங்களும் அனுதாபச் செய்திகளாலும் அஞ்சலிக் கவிதைகளாலும் நினைவுப் பதிவுகளாலும் பாடல்களாலும் நிரம்பிவழிந்தன. அவர்பற்றி எதையாவது எழுதியே தீர வேண்டும் என்று பலரும் காலக் கடமையாக ஏற்றிருந்தார்கள். எதிர்பாராத தருணத்தில் ஓர் இசைத்தட்டின் சுழற்சி நிற்பதைப்போல நிகழ்ந்த அவருடைய ‘விடைபெறலை’ ரசிகர்கள் பலரும் பிரிவாற்றாமையுடன் கண்டனர். கொரோனாவுக்கான பலி ஒரு திரையுலகப் பிரபலம் எனும்போது அந்தத் துயரத்தின் வலி பன்மடங்காகியது. புகழின் வெளிச்சத்துடனும் பணப் பசையுடனும் இருக்கும்போதே நிகழ்ந்த எஸ்.பி.பியின் மரணம் திரையுலகப் பிரபலங்களினதும் ஊடகங்களினதும் கவனத்தையும் ஈர்த்ததில் வியப்பில்லை.

தமிழ் மக்களின் நாடித் துடிப்பறிந்த ஊடகங்கள் இந்தத் துயரத்தைப் பன்மடங்காகப் பெருக்குவதிலும், உச்சக்கட்டம்வரை நகர்த்துவதிலும் உச்சமான உழைப்பைக் காட்டின. எஸ்.பி.பியின் நாளாந்த உடல்நிலையை ஊகமாகவோ அல்லது உண்மையாகவோ வெளியிடுவதிலிருந்து, எஸ்.பி.பி தன் திருமண நாளை கேக் வெட்டிக் கொண்டாடினார், பாடினார், கட்டை விரலை உயர்த்திக் காட்டினார் போன்ற சுவாரஸ்யமான திருப்பங்களை நாளாந்தம் அறிவிப்பதுவரை தம்பங்குக்கு மருத்துவமனைக் காட்சிகளை விறுவிறுப்பாக்கின. ஜெயலலிதாவுக்கு அடுத்த துன்பியல் நாடகமொன்றின் பார்வையாளர்களாக மக்களும் தங்களை மாற்றிக்கொண்டார்கள்.

எனது எழுத்தாள நண்பர் எஸ்.பி.பியின் மரணச் செய்தியறிந்து தான் அழுதுவிட்டதாகவும், இரவின் தனிமையிலும் மனச்சோர்விலும் அந்தப் பாடகனே தனக்குப் பெருந்துணையாக இருந்ததாகவும் கூறினார். இதைப் போன்றே அவரை நேசிப்பதற்குப் பலருக்கும் பல்வேறு காரணங்கள் இருந்தன. வாழ்வின் பல படிநிலைகளிலும் எஸ்.பி.பியின் பாடல்கள் தங்களுடன் கூடவே பயணம் வந்தவை எனவும் பல்வேறுபட்ட உணர்வுகளுடன் வெளிப்பட்ட அந்தப் பாடல்கள் தம்முள்ளிருந்தும் அவற்றுடன் சம்பந்தப்பட்ட நினைவுகளைக் கிளறியவை எனவும் துயருற்றோர் பலர்.

இத்தகைய மனப்பதிவை உருவாக்குவதில் ஊடகங்களுக்கும் அவர் பங்கேற்ற மேடைக் கச்சேரிகளுக்கும், அவர் நடித்த திரைப்படங்களின் கதாபாத்திரங்களுக்கும், கள்ளம்கபடம் தென்படாத அவருடைய தோற்றத்துக்கும் பெரும் பங்குண்டு. (பாடகர் மலேசியா வாசுதேவன் போல் எதிர்மறைக் குணாம்சம் கொண்ட பாத்திரத்தில் ஒருபோதும் அவர் நடித்ததாக ஞாபகமில்லை.) தான் பங்கேற்ற மேடை நிகழ்ச்சிகளில் போட்டியாளர்களுடன் கனிவாக உரையாடினார். தான் கடந்துவந்த பாதையை நெகிழ்ச்சியுடன் நினைவுகூர்ந்தார். குழந்தைகள் பாடும்போது நெக்குருகிக் கசிந்தார். கண்ணீர் துளிர்க்கத் தோன்றினார். தானும் பாடலின் சிலபகுதிகளைப் பாட, தன்னிலும் இளைய பாடகர்களிடம் ‘பிளீஸ் ’ எனக்கூறி மிகவும் தாழ்மையுடன்அனுமதி கோரினார். இவையெல்லாம் எஸ்.பி.பியின் தன்னடக்கப் பிம்பத்துக்கான மெருகூட்டல்களென அவரே அறிவார். ஆனால் பார்வையாளர்கள் முன்னிலையில் அல்லாமல் மேடையேறும் முன்னரே எஸ்.பி.பி இத்தகைய அனுமதியைப் பெற்றுக்கொண்டிருக்கலாமே என்றொரு கேள்வி பலருடைய மனங்களிலும் எழாமலில்லை. மிகையான தன்னடக்கம் கடைசியில் ஒருவரை ‘அய்யம்பேட்டை அறிவுடைநம்பி கலியப்பெருமாள் சந்திரன்’ ஆக ஆக்கிவிடவும் கூடியது. (இதற்கான விளக்கத்தை ‘தில்லுமுல்லு’ படத்தில் அறியலாம்.)

எஸ்.பி.பி. இசையுலகில் ஓயாமல் இயங்கியவர். உலகத்தின் பல திக்குகளுக்கும் மேடைக்கச்சேரிகளின் பொருட்டுப் பறந்துகொண்டிருந்தவர். கடந்த இருபத்தைந்து வருடங்களாக தெலுங்கு நுவுஏ தொலைக்காட்சியில் ‘பாடுத திய்யக’ இசை நிகழ்ச்சிக்கு அனுசரணையாளராகவும் முதன்மை நடுவராகவும் பங்கேற்று வந்தவர். முக்கியமாக இன்று முப்பதுக்கும் எண்பதுக்கும் இடைப்பட்ட வயதினைக் கொண்டவர்களுக்கு அவர் ஒரு மகத்தான பாடகர்.

அவருடைய பாடல்களின் எண்ணிக்கையும் அவருடைய முன்னோடி இசைக் கலைஞர்களின் காலத்தில் கிட்டாத தொழில்நுட்பமும் அவரை உலகத்தின் பல்வேறு திக்குகளுக்கும் கொண்டுபோய்ச் சேர்ப்பதில் பெரும் பங்குவகித்தன. உலகின் பல பாகங்களிலும் தமிழில் இயங்கும் ஏதாவதொரு வானொலி நிலையத்திலிருந்து எஸ்.பி.பி பாடிக்கொண்டேயிருந்தார்.

ஊடகங்களின் மீதான கடிவாளத்தை எஸ்.பி.பி தன் புகழ்வாழ்வுக்காக எவ்வாறு கையாண்டாரோ அதேபோன்று எஸ்.பி.பியின் இறுதிநாட்களில் ஊடகங்களின் கடிவாளம் அவரை இறுக்கிப்பிடித்தது. அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நாட்களிலிருந்து, இறுதியாக அவரை இறக்கிய குழியில் பிடிமண்விழும்வரை இந்த ஊடகங்களின் நிழல் அவரைப் பின்தொடர்ந்தது.

1969இல் ‘அடிமைப்பெண்’ படத்தின் ‘ஆயிரம் நிலவே’ பாடல் வாயிலாகத்தான் தமிழில் எஸ்.பி.பி அறிமுகமானார் எனப் பலரும் குறிப்பிடுவதுண்டு. (‘ஹோட்டல் ரம்பா ’என்ற படத்திற்காக 1962இல் அவரது குரலில் முதன்முதலாகப் பதிவுசெய்யப்பட்ட பாடல் படத்துடன் சேர்ந்து வெளியாகாமலே போயிற்று.) ஆனால் உண்மை அதுவல்ல. காலவரிசைப்படி 08.01. 1969இல் தணிக்கை செய்யப்பட்டு 14.01.1969இல் வெளியான ‘குழந்தை உள்ள’த்தில் எஸ்.பி. கோதண்டபாணியின் இசையமைப்பில் அவர் பாடிய ‘முத்துச் சிப்பிக்குள்ளே’ பாடல்தான் தமிழில் அவர் பாடிய முதற்பாடல். ‘குழந்தை உள்ளம்’ 1969இல் வெளியான ‘சின்னாரி பாப்பலு’ என்ற தெலுங்குப் படத்தின் மீளுருவாக்கம். குழந்தை உள்ளத்தைத் தயாரித்து இயக்கியவர் நடிகை சாவித்திரி. (படத்தின் நாயகன் ஜெமினி கணேசன். பெரும்பாலும் அந்தக் காலகட்டத்தில் அவருக்குப் பின்னணி பாடியவர் பி.பி. ஸ்ரீநிவாஸ். மாறாக எஸ்.பி.பி இந்தப் படத்தில் ஜெமினிக்காகப் பின்னணி பாடினார். இந்தத் தெரிவின் பின்னணியில் சாவித்திரியின் தற்துணிவு இருந்திருக்கலாம். ஆனால் இதுபற்றி எஸ்.பி.பி எங்குமே குறிப்பிட்டதாகத் தெரியவில்லை.)

தமிழில் எஸ்.பி.பியின் அடுத்த பாடலும் ‘ஆயிரம் நிலவே வா’ அல்ல. பால்குடம் படத்தில் (10.01.1969இல் தணிக்கை செய்யப்பட்டு 14.01.1969இல் வெளியானது.) எம்.எஸ். விஸ்வநாதன் இசையமைப்பில் நாடகபாணியும் உரையாடல் பாங்கும் தொனிக்கும் ‘மல்லிகைப் பூ வாங்கி வந்தேன்’தான் அவரது இரண்டாவது பாடலாகும். காலவரிசைப்படி ‘ஆயிரம் நிலவே வா’ எஸ்.பி.பியின் மூன்றாவது தமிழ்ப்பாடலாகும். (இது இடம்பெற்ற ‘அடிமைப் பெண்’ 28.04.1969இல் தணிக்கை செய்யப்பட்டு 01.05.1969இல் வெளியானது.) 09.05.1969இல் தணிக்கை செய்யப்பட்டு 23.05.1969இல் வெளியான ‘சாந்தி நிலைய’த்தில் இடம்பெற்ற ‘இயற்கை எனும் இளைய கன்னி’ அவருடைய நான்காவது பாடலாகும். பிரபலம் ஒன்றுடன் இணைந்ததாகத் தன் தமிழ்த் திரையுலக வரலாற்றை அமைத்துக்கொள்வதில் எஸ்.பி.பிக்கு விருப்பம் இருந்திருக்கலாம். இதனாலேயே எம்.ஜி.ஆருக்காகப் பாடிய ‘ஆயிரம் நிலவே வா’ வே அவரது முதற்பாடல் எனப் பலரும் குறிப்பிட்டபோதெல்லாம் எஸ்.பி.பி அதைக் கடுந்தொனியில் மறுத்ததில்லை.

ஆனால் அவர் எம்.ஜி.ஆருக்குக் கனகச்சிதமாகப் பொருந்திப்போகின்ற பாடகருமல்லர். சுமார் பதினைந்து வருடங்களளவில் எம்.ஜி.ஆருக்கான பின்னணிப் பாடகராக உரத்த தொனிகொண்ட டி.எம். சௌந்தர ராஜனே விளங்கிவந்தார். இத்தகைய ஒரு சூழலில் எம்.ஜி.ஆருக்கு கே.ஜே.யேசுதாஸ், எஸ்.பி.பி போன்ற இளமைக் குரல்கள் தேவைப்படுவதை அவர் தன் பின்னைய படங்களில் செய்துகொண்ட இளமை ஒப்பனைகளுடனும் அவற்றில் பங்கேற்ற இளவயது நாயகிகளுடனும் சமப்படுத்தலாம். தவிரவும் டி.எம்.எஸ்ஸின் ஏகபோகத்தை அசைத்துப் பார்க்கவும் இளைய எம்.ஜி.ஆர் விரும்பியிருக்கக் கூடும். விளைவு, எஸ்.பி.பியின் இளங் குரலிலான பாடல்கள்.

அதே போல் டி.எம்.எஸ்ஸ{டன் பதினேழு வருடப் பிணைப்பைக் கொண்டிருந்த சிவாஜியும் எஸ்.பி.பியை 1971இல் சேர்த்துக்கொள்கிறார்.

தங்களுக்கான புதிய, இளைய பின்னணிப் பாடகர்களைத் தமிழ்த் திரையுலகின் இரண்டு மூத்த பெரும் நடிகர்களும் தீர்மானிக்க முயன்றுகொண்டிருக்கும் அதே வேளையில் காலமோ காட்சியை வேறுவிதமாக மாற்றுகிறது.

அரசியலில் எம்.ஜி.ஆர் தீவிரம் காட்ட ஆரம்பிக்கின்றார். சிவாஜியின் திரையுலகப் பயணமோ ஏற்ற இறக்கங்களுடன் நகர்ந்துகொண்டிருக்கிறது. அரசனை நம்பிப் புருஷனை ஒரேயடியாகக் கைவிட முடியாத நிலை. எனவே டி.எம்.எஸ்ஸ{ம் சிவாஜியும் ஏககாலத்தில், “ஓ மை லார்ட், பார்டன் மீ. உங்கள் மந்தையிலிருந்து இரண்டு ஆடுகள் வேறுவேறு பாதையில் போய்விட்டன” என்று கூக்குரலிட்டாலும் கூட ஆளையாள் பிரிவது சாத்தியமாகவில்லை. சரியாகச் சொன்னால் எஸ்.பி.பியின் வயதுக்கேற்ற ‘நேர்த்தியான ஆட்டம்’ வெளிப்படுவது இந்த இரண்டு மூத்த பெரும் நடிகர்களின் களங்களுக்கு அப்பால்தான்.

எம்.ஜி.ஆர்., சிவாஜிக்கு அப்பால் தமிழ்த் திரையுலகின் அடுத்த வரிசை நட்சத்திரங்களான ஜெய்சங்கர், ரவிச்சந்திரன், சிவகுமார், ஏ.வி.எம். ராஜன், முத்துராமன் போன்றோருக்கும் ஏ.எம். ராஜா,பி.பி.ஸ்ரீநிவாஸ் போன்றோரின் மென்மையான பின்னணிக் குரல்களுடன் வாயசைத்த ஜெமினி கணேசனுக்கும் எஸ்.பி.பியின் இளையகுரல் மிகவும் பொருந்திப்போவதாக ரசிகர்கள் நினைத்தார்கள். ஜெமினி நீங்கலாக இந்த நடிகர்களுக்கும் எஸ்.பி.பிக்கும் நடுவே அதிக வயது வித்தியாசம் இல்லாததும் நம்பகத்தன்மையை உருவாக்கியது.

கன்னடத்தில் உச்சநிலைப் பாடகராகயிருந்த பி.பி.ஸ்ரீநிவாஸையும். தெலுங்கின் முக்கிய பாடகரான கண்ட சாலாவையும் எஸ்.பி.பி. எவ்வாறு பின்நகர்த்தினாரோ அது மலையாளத்தில் நடக்கவில்லை. தென்னாட்டின் இதர மொழி மாநிலங்களில் கிடைத்த வரவேற்பு மலையாள மண்ணில் எஸ்.பி.பிக்குக் கிட்டவில்லை. அங்கு கே.ஜே. யேசுதாஸின் ஏகபோகத்தைத் தாண்டி அவரால் ஊடுருவ முடியவில்லை. எனினும் இசைத் துறையில் தன் ஐம்பது வருடங்கள் பூர்த்தியாவதையொட்டி ஒழுங்கு செய்யப்பட்ட நிகழ்வொன்றில் கே.ஜே.யேசுதாஸைக் குரு ஸ்தானத்தில் வைத்து எஸ்.பி.பி பாதபூஜை செய்து கௌரவித்தார். பிறப்பால் பிராமணரான எஸ்.பி.பி தன் ஜாதிசார்ந்த சடங்குச் சம்பிரதாயங்களில் ஈடுபாடுடையவராக இருந்தபோதிலும் இந்த விடயத்தில் தன் சாதிப் பெருமைகளை, சம்பிரதாயங்களை, இறுக்கங்களைப் புறந்தள்ளிக் கேரளத்துக் கிறிஸ்தவரான யேசுதாஸ{க்கு வழங்கிய கௌரவம் கலையின் கடப்பாடுகளில் ஒன்றான மனமுதிர்ச்சியின் அடையாளத்தையே காட்டுகிறது.

தமிழில் எஸ்.பி.பியின் வருகை காலப்போக்கில் டி.எம்.எஸ்ஸின் ஏகபோகத்தை இழக்கச்செய்தது. தமிழ்த் திரையிசையுலகில் டி.எம்.எஸ்ஸிற்குப் பின்னர் நடிகர்களை மனத்திலிருத்திக் கொண்டு பல்வேறு பாணிகளிலும் பாட முயற்சித்த பாடகராக 1970க்குப் பின்னர் எஸ்.பி.பி வியாபிக்கிறார்.

மாற்றமடையும் ரசனைகளினதும் இளையவர்களினதும் பிரதிநிதியாகத் தோன்றிய அவர் காலப்போக்கில் தன்னைப் பலவிதமான பாடல்களுடனும் பொருத்திக்கொண்டார். மெல்லிசை, மரபுரீதியான இசை, நாட்டுப்புற இசை, மேலைத்தேய இசை என அவரின் தளங்கள் விரிவடைந்து சென்றதை அவருடைய பாட்டுப் பயணம் காட்டுகிறது. உற்சாகம் என்றுமே அவருடைய பல பாடல்களிலும் தென்பட்ட சிறப்பம்சம். இந்த உற்சாகம் கோணங்கிப் பாவனையுடன் அவரைப் பாடுமளவுக்குக்கூட இழுத்துச் சென்றிருக்கிறது. (இந்த அம்சம் சிறப்பாக வெளிப்பட்ட இன்னொரு பாடகர் மலேசியா வாசுதேவன். ஆனால் அவருடைய வீச்செல்லை சிறியதொரு பரப்புக்குள் சுருங்கிவிட்டது. இந்தப் பாவனை அறவே கைகூடாத பாடகர் கே.ஜே.யேசுதாஸ். ‘ஏரிக்கரைப் பூங்காற்றே, தண்ணித் தொட்டி தேடிவந்த போன்ற மிகச் சொற்பமான பாடல்களுடன் தனக்குப் பொருந்திவராத இந்த முகமூடியைக் கைவிட்டு ஒதுங்கிக்கொண்டார்.)

ஆரம்ப காலத்தில் சில பாடல்களில் பி.பி.ஸ்ரீனிவாஸ{க்கும் கண்டசாலாவுக்கும் நடுவே எஸ்.பி.பியின் குரல் ஊஞ்சலாடிக்கொண்டிருந்தது. காலப்போக்கில் அது தனக்கென சில பாணிகளை வரித்துக்கொண்டது. அது முக்குவதுண்டு, முனகுவதுண்டு. காமனின் மலர்க்கணை தொடுப்பதுண்டு. செல்லச் சீண்டலுடன் சிரிப்பதுண்டு. பொய்க் கோபத்துடன் முனகுவதுண்டு. உரக்கக் கத்துவதுண்டு. பொய்க் குரல்களில் வேடிக்கை காட்டுவதுண்டு. ‘ரமப்பா...ரம்பப்பா...ஹோய்...ஹாய்.. லலலா’ என்றெல்லாம் சேஷ்டைகள் புரிவதுண்டு. மிதமிஞ்சிய உற்சாகம் சிலசந்தர்ப்பங்களில் கோமாளித்தனங்களின் எல்லையைத் தொட்டுமிருக்கிறது. சில இடங்களில் சோகம் ஒப்பாரியாகவும் அரற்றலாகவும் ஆகியிருக்கிறது. ‘குண்டு மாங்காய்,ரெண்டு குண்டு மாங்காய்’ ‘ஏய் நீ சமைஞ்சது எப்படி’ போன்ற பாடல்வரிகளை நாக் கூசாமல் பாடியுமிருக்கிறது. அவருடைய ஜனரஞ்சக நிலைப்பாடு மெல்லமெல்லப் பாமர ரசனைக்குத் தீனிபோடும் ஒருவராகவும் உருமாற்றியிருக்கிறது. பாடல்களின் எண்ணிக்கை அதிகரித்தது. ஆனால் ‘நாலிலே ஒன்றிரண்டு பலித்தது’. அப்படி கிடைத்த பாடல்களுக்குள் சிலவற்றை அடக்கலாம். இளையராஜாவுடனான எஸ்.பி.பியின் பயணம் தனித்துச் சொல்லப்பட வேண்டியது. கமலஹாசன், ரஜினிகாந்த் ஆகியோர் தமிழ்த் திரையுலகின் முன்னணி நாயகர்கள் ஆகிறார்கள். எம்.எஸ். விஸ்வநாதனின் அலைஓய்ந்து அற்ற குளமாகிப் போகும் காலகட்டத்தில் அறுநீர்ப் பறவைகளெல்லாம் இளையராஜாவின் திசை நோக்கி விரைந்துகொண்டிருந்தன. இளையராஜாவோ வெகுகவனத்துடன் தன் பாடகர்களைத் தீர்மானித்துக் கொண்டிருந்தார். ஆரம்ப காலத்தில் கே.ஜே. யேசுதாஸ், ஜெயச்சந்திரன், மலேசியா வாசுதேவன் போன்றோருக்கே அவர் முன்னுரிமை வழங்கியது போல் தெரிகிறது. இளையராஜா அறிமுகமான அதே ஆண்டில் வெளியான ‘நான் பேச வந்தேன்’ (‘பாலூட்டி வளர்த்த கிளி’), ‘ஒருநாள் உன்னோடு ஒருநாள்’ (உறவாடும் நெஞ்சம்) ஆகிய பாடல்களில் ரகசியத்தொனி கொண்ட அடக்கஒடுக்கமான எஸ்.பி.பியையே காண முடியும். அடுத்த ஆண்டில் வெளியான புவனா ஒரு கேள்விக்குறியில் ‘விழியிலே மலர்ந்தது’, ‘ராஜா என்பார் மந்திரி என்பார்’ எனச் சொல்லிக்கொள்ளும்படியான இரண்டு பாடல்கள். 1978இல் வெளியான அச்சாணியில் ‘தாலாட்டு’ என்றொரு பாடல். அதே ஆண்டு வெளியான ‘இளமை ஊஞ்சலாடுகிறது’ படத்தில் கமலுக்காகப் பிரத்தியேகக் கவனமெடுத்துப் பாடிய ‘என்னடி மீனாட்சி’, அதே படத்தில் இன்னொரு இனிய கானம்; ‘ஒரே நாள் உன்னை நான்.’

காலப்போக்கில் இளையராஜாவினது தவிர்க்க முடியாத பாடகராகவும் கமலஹாசன், ரஜினிகாந்த் போன்றோரின் முதல் விருப்புக்குரிய பாடகராகவும் எஸ்.பி.பி விளங்குகிறார். 1987இல் எஸ்.பி.பியின் குரலின் சாயலைக் கொண்ட மனோவை இளையராஜா அறிமுகப்படுத்தித் தொடர்ச்சியாக வாய்ப்புகளை வழங்குகிறார். ஆனாலும் எஸ்.பி.பியை முடக்க முடியவில்லை. நகலொன்றுடன் ஒப்பிடும்போதே அசலின் பெறுமதி புலப்படும்.

இந்தச் சதுரங்க ஆட்டங்களையெல்லாம் அவர் புன்னகையுடன் கையாண்டார். (இளையராஜாவுடனான இணைவில் எஸ்.பி.பிக்குக் கிடைத்த சிறப்பான பாடல்களாகச் சொல்லத் தோன்றுவன தனிப் பட்டியலில்)

மிகவும் பலவீனமான அம்சங்களைக் கொண்டிருந்த சில படங்களை இளையராஜாவும் எஸ்.பி.பியும் தத்தம் இசை ஜாலத்தினால் உயிர்ப்பித்திருக்கிறார்கள்.

 • ‘பயணங்கள் முடிவதில்லை’ (1982)
 • ‘காதல் ஓவியம் (1982),
 • ‘நான் பாடும் பாடல்’ (1984)
 • ‘உதயகீதம்’ (1985)
 • ‘இதயக் கோயில்’ (1985)
 • என அந்தப் பட்டியல் நீண்டு செல்லும்.

எஸ்.பி.பியின் பெருமைக்குரிய ஆல்பங்களில் சங்கராபரணமும் ஒன்று. தன் இளமையை அப்படியே ஒளித்து நடுத்தர வயதுகொண்ட சங்கர சாஸ்திரியின் குரலாகவே மாறும் வித்தையை அங்கே காணலாம். இதேபோன்ற இன்னொரு சிறப்பான ஆல்பம்: ‘ஏக் துஜே கே லியே. ‘தேரே மேரே பீச் மெய்ன்’, ‘ஹம் தும் தேமோ ஜாப் மி’, ‘ஹம் பனி தும் பனி’. இது போன்ற பாடல்கள் எஸ்.பி.பிக்கு மாத்திரமல்ல கமலஹாசனுக்கும் இந்தியில் மிகவும் சிறப்பான அறிமுகத்தைத் தந்தவை. எஸ்.பி.பி இந்தியில் சிறப்பாக வெளிப்பட்ட இன்னோர் ஆல்பம் ‘சாஜன்’.

எஸ்.பி.பி தமிழ்த் திரையுலகில் அமர்ந்திருந்த பெருமைக்குரிய நாற்காலி இன்று காலியாகிவிட்டது. அங்கு உட்காரப்போகும் அடுத்தவர் யார் என்பது முக்கிய கேள்வி. தொடர்ச்சியான இயக்கம், இசை ஞானம், குரலினிமை, பன்முக ஆற்றல் என்ற அளவுகோல்களுக்குப் பொருந்திப் போகின்றவர்களாக இப்போதைக்கு எவரையும் காணோம். ஹரிஹரன், உண்ணிகிருஷ்ணன், மனோ, சங்கர் மகாதேவன், ஸ்ரீநிவாஸ் போன்ற அடுத்தகட்டப் பாடகர்கள் போதுமென்ற பொன்மனத்துடன் சிறுவட்டத்துக்குள் ஒடுங்கிக் கொண்டதாகவே தோன்றுகின்றது. சித் ஸ்ரீராமோ ஒரே பாணியில் குரலை நீட்டி உழல்கிறார். அதிரடி வாத்தியங்கள் செயலிழந்துவிடும் ஒருநாளில் அனிருத், ஹிப் ஹாப் தமிழன் போன்றவர்களுக்கும் பிராண வாயு கிடைக்காமல் போகும்.

எஸ்.பி.பியின் இடத்தை இனி யார் நிரப்பக்கூடும் என்ற புலம்பலுடன் நாம் ஒரேயடியாக ஸ்தம்பித்துவிடத் தேவையில்லை.

இருண்ட வானம் நிரந்தரமானதல்ல. எஸ்.பி.பி. மறையலாம்; நாமும் மறையலாம். ஆனால் வியப்பைத் தரப்போகும் இன்னொரு நட்சத்திரம் தோன்றாமல் போகாது.


எம்.ஜி.ஆருக்காக...

 • ஆயிரம் நிலவே வா (அடிமைப் பெண்)
 • நீராழி மண்டபத்தில் (தலைவன்)
 • வெற்றிமீது வெற்றி வந்து(தேடி வந்த மாப்பிள்ளை)
 • இரண்டு கண்கள் பேசும் மொழியில் (சங்கே முழங்கு)
 • அவள் ஒரு நவரச நாடகம் (உலகம் சுற்றும் வாலிபன்)
 • பாடும்போது நான் / அங்கே வருவது யாரோ (நேற்று இன்று நாளை)
 • அன்பு மலர்களே / லவ் இஸ் எ கேம் (நாளை நமதே)
 • ஆகிய பாடல்கள். திரையரங்கில் கண்களை மூடிக்கொண்டு இந்தப் பாடல்களைக் கேட்டு ரசித்தவர்கள் பாக்கியவான்கள்.

  சிவாஜிக்காக...

  (பொட்டுவைத்த முகமோ – சுமதி என் சுந்தரி) 1971இல் வெளியான சிவாஜியின் மற்றொரு படமான ‘குலமா குணமா’விலும் எஸ்.பி.பி.க்கு ‘உலகில் இரண்டு கிளிகள்’ பாடல். ஆனால் எஸ்.பி.பியின் குரலுக்கு வாயசைத்தது சிவாஜியல்ல. அவருடைய தம்பியாகப் பாத்திரமேற்ற ஜெய்சங்கர். அருணோதயத்தில் ‘எங்க வீட்டுத் தங்கத் தேரில்’ முள்ளில்லா ரோஜா (மூன்று தெய்வங்கள்) கௌரவம் படத்தில் ‘யமுனா நதியிங்கே’, திரிசூலம் படத்தில் ‘என் ராஜாத்தி வாருங்கடி’ என அவ்வப்போது சிவாஜியின் படங்களிலும் எஸ்.பி.பி.யின் குரல் ஒலித்தது.


  பிற படங்களில்...

 • அங்கம் புதுவிதம் (வீட்டுக்கு வீடு 1970)
 • நிலவே நீ சாட்சி (நிலவே நீ சாட்சி 1970)
 • கல்யாணராமனுக்கும் (மாணவன் 1970)
 • உன்னைத் தொட்ட காற்று ( நவக்கிரகம் 1970)
 • ஆரம்பம் இன்றே ஆகட்டும் (காவியத்தலைவி 1970 )
 • பொன்னென்றும் பூவென்றும் (நிலவே நீ சாட்சி 1970)
 • மாதமோ ஆவணி / உன்னைத் தொடுவது இனியது (உத்தரவின்றி உள்ளே வா 1970)
 • இறைவன் என்றொரு கவிஞன் (ஏன் –1970)
 • காதல் ஜோதி அணையாதது (காதல் ஜோதி 1970)
 • தொடுவதென்ன தென்றலோ (சபதம் 1971)
 • திருமகள் தேடி வந்தாள் (1971)
 • அன்பு வந்தது (சுடரும் சூறாவளியும் 1971)
 • ஒரு மல்லிகை மொட்டு (ரங்கராட்டினம் 1971)
 • ஓ மைனா / நினைத்தால் வானம் சென்று (நான்கு சுவர்கள் 1971)
 • இன்று முதல் செல்வமிது (வீட்டுக்கு ஒரு பிள்ளை 1971)
 • மங்கையரில் மகராணி / ஆயிரம் நினைவு (அவளுக்கென்று ஒரு மனம் 1971)
 • பேசு மனமே பேசு (புதிய வாழ்க்கை 1971)
 • முள்ளில்லா ரோஜா (மூன்று தெய்வங்கள் 1971 )
 • கேட்டதெல்லாம் நான் கொடுப்பேன் (திக்குத் தெரியாத காட்டில் 1972)
 • எந்தன் தேவனின் பாடல் என்ன ( பொன்மகள் வந்தாள் 1972 )
 • On a hot summer morning (ராணி யார் குழந்தை 1972 - இதே மெட்டில் எஸ்.பி.பி.பாடிய ‘பூந்தமல்லியிலே ஒரு பொண்ணு பின்னாலே’ பாடல்இதேஆண்டில் வெளியான கருந்தேள் கண்ணாயிரம் படத்தில் இடம் பெற்றது )
 • நேற்று வரை விண்ணிலிருந்தாளோ (கருந்தேள் கண்ணாயிரம் 1972)
 • ‘காலங்களே ..காலங்களே ..காதலிசை பாடுங்களே’ (கனிமுத்துப் பாப்பா-1972 மூலம்: ஸிந்தக்கி ஏக் ஸஃபர் ஹே சுஹானா- அந்தாஸ் )
 • உள்ளத்தில் நூறு நினைத்தேன் (மாப்பிள்ளை அழைப்பு 1972 )
 • தேன் சிந்துதே வானம் (பொண்ணுக்குத் தங்க மனசு 1973)
 • நான் என்றால் அது (சூரியகாந்தி 1973)
 • சொந்தம் இனி உன் மடியில் (மறுபிறவி 1973)
 • யமுனா நதி எங்கே (கௌரவம் 1973)
 • காலம் பொன்னானது (கல்யாணமாம் கல்யாணம் 1973 )
 • ஆரம்ப காலத்தில் (அரங்கேற்றம் 1973 )
 • என் காதல் கண்மணி (மஞ்சள் குங்குமம் 1973 )
 • நான் என்றால் அது ( சூரியகாந்தி 1973)
 • அன்பு மேகமே (எங்கம்மா சபதம் 1974)
 • ஓடம் கடலோரம் /காதல் விளையாட (கண்மணி ராஜா 1974)
 • ஊர் கோலம் போகின்ற ( அக்கரைப் பச்சை1974)
 • நீ ஒரு ராகமாலிகை (பெண் ஒன்று கண்டேன் 1974 )
 • மணிவிளக்கே விளக்கே மாந்தளிரே (உன்னைத்தான் தம்பி 1974 )
 • ராதா காதல் வராதா (நான் அவனில்லை 1974)
 • இரு மாங்கனி போல் (வைரம் 1974)
 • பொன்னான மனம் எங்கு (திருமாங்கல்யம் 1974)
 • நிலவு வந்து வானத்தையே (திருடி 1974)
 • உன்னை நான் பார்த்தது (பட்டிக்காட்டு ராஜா 1975)
 • முத்துக்கள் சிந்தி ( யாருக்கு மாப்பிள்ளை யாரோ 1975)
 • பனிமலை மேகங்கள்/ ஆவணி மலரே (தொட்டதெல்லாம் பொன்னாகும் 1975)
 • கொட்டிக் கிடக்குது ( வாழ்ந்து காட்டுகிறேன் 1975 )
 • சம்சாரம் என்பது வீணை (மயங்குகிறாள் ஒரு மாது 1975)
 • இப்படி அடுத்தடுத்து வெளியாகிக் கொண்டிருந்த எஸ்.பி.பி.யின் பாடல்களில் எல்லாம்விட்டு விடுதலையான ஒரு சிட்டுக்குருவியைக் காணலாம்


  எழுபதுகள் - எண்பதுகள்

 • ஒரு சின்னப்பறவை (மதன மாளிகை 1976)
 • கண்டேன் கல்யாணப் பெண் போன்ற (மேயர் மீனாட்சி 1976)
 • சொர்க்கத்திலே முடிவானது (லலிதா 1976)
 • கண்ணனை நினைக்காத (சீர்வரிசை 1976)
 • மார்கழிப் பனியில் / எனக்கொரு காதலி (முத்தான முத்தல்லவோ1976)
 • தென்றலுக்கு என்றும் (பயணம் 1976)
 • மாலை மலர் பந்தலிட்ட( அக்கா 1976)
 • நெஞ்சத்தில் போராடும் எண்ணங்கள் ( உணர்ச்சிகள் 1976 )
 • முதல் முதல் வரும் (காலங்களில் அவள் வசந்தம் 1976 )
 • ஏதோ ஒரு நதியில் (என்ன தவம் செய்தேன் 1977)
 • நாலு பக்கம் வேடருண்டு (அண்ணன் ஒரு கோயில் 1977)
 • வானுக்குத் தந்தை எவனோ (ஆடு புலி ஆட்டம் 1977)
 • வான் நிலா நிலா (பட்டினப் பிரவேசம் 1977)
 • நந்தா நீ என் நிலா (நந்தா என் நிலா 1977)
 • அங்கும் இங்கும் (அவர்கள் 1977 )
 • எனக்கொரு உதவி செய் (காலமடி காலம் 1977 )
 • ஏதோ ஒரு நதியில் ( என்ன தவம் செய்தேன் 1977)
 • கம்பன் ஏமாந்தான்/ இலக்கணம் மாறுதோ (நிழல் நிஜமாகிறது 1978)
 • மழை தருமோ (மனிதரில் இத்தனை நிறங்களா 1978)
 • தொடங்கும் தொடரும் (முடிசூடா மன்னன் 1978)
 • கண்ணனை நினைக்காத (சீர்வரிசை 1978 )
 • மேடையில் ஆடிடும் (வண்டிக்காரன் மகன் 1978 )
 • பூமாதேவி போலே வாழும் (பஞ்ச கல்யாணி 1979)
 • நானா பாடுவது நானா (நூல்வேலி 1979)
 • தொட வரவோ / ஆனந்தம் அது என்னடா (இரு நிலவுகள் 1979 )
 • ஆடிடும் ஓடமாய் (சுவரில்லாத சித்திரங்கள் 1979 )
 • விடுகதையொன்று ( ஒரு விடுகதை ஒரு தொடர்கதை 1979)
 • பூந்தேனில் கலந்து (ஏணிப்படிகள் 1979)
 • பாரதி கண்ணம்மா /காத்திருந்தேன் காத்திருந்தேன் /சயனோரா /லால லல லாலா (நினைத்தாலே இனிக்கும் 1979)
 • நான் எண்ணும் பொழுது (அழியாத கோலங்கள் 1979)
 • ஒரே ஜீவன் / உனை எத்தனை முறை பார்த்தாலும் (நீயா 1979)
 • சிப்பியிருக்குது (வறுமையின் நிறம் சிவப்பு 1980)
 • மரியா மை டார்லிங் (மரியா மை டார்லிங் 1980 )
 • நினைத்திருந்தது நடந்து விட்டது ( மற்றவை நேரில் 1980 )
 • நீ ஒரு கோடி மலர் ( பாமா ருக்மணி 1980 )
 • நான் உன்ன நெனைச்சேன் (கண்ணில் தெரியும் கதைகள் 1980)
 • அங்கே மரம் ஒண்ணு வெச்சாளே (தனிமரம் 1980)
 • அவள் ஒரு மேனகை (நட்சத்திரம் 1980)
 • கெளரி மனோஹரியைக் கண்டேன் (மழலைப் பட்டாளம் 1980)
 • இது குழந்தை பாடும் (ஒரு தலை ராகம் 1980)
 • ராகங்கள் பதினாறு (தில்லுமுல்லு 1981)
 • அழகினில் விளைந்தது (கிளிஞ்சல்கள் 1981 )
 • கேள்வி கேட்கும் நேரமல்ல (குலக்கொழுந்து 1981)
 • மூங்கிலிலே பாட்டிசைத்து (ராகம் தேடும் பல்லவி 1981)
 • மான் கண்ட சொர்க்கங்கள் (47 நாட்கள் 1981)
 • பௌர்ணமி நேரம் (பாலைவனச் சோலை 1981)
 • உனக்கென்ன மேலே நின்றாய் (சிம்லா ஸ்பெஷல் 1982)
 • சின்னச் சின்ன மேகம் (காற்றுக்கென்ன வேலி 1982 )
 • ஓ நெஞ்சே (டார்லிங் டார்லிங் டார்லிங் 1982)
 • மலரே என்னென்ன கோலம் (ஆட்டோ ராஜா 1982)
 • நீலவான ஓடையில் (வாழ்வே மாயம் 1982)
 • விடிய விடிய சொல்லித் தருவேன் (போக்கிரிராஜா 1982)
 • மழையே மழையே (அம்மா 1982)
 • மணி ஓசையும் / சுமைதாங்கி ஏனின்று / எதிர்பார்த்தேன் இளங்கிளியை (அந்த ராத்திரிக்கு சாட்சி இல்லை 1982)
 • அழகிய செந்நிற வானம் (காஷ்மீர் காதலி 1982)
 • நெடுநாள் ஆசை (சரணாலயம் 1982)
 • வா வா என் வீணையே /ஒரு நண்பனின் கதை இது (சட்டம் 1982)
 • மூங்கில் காட்டோரம் (பூக்கள் விடும் தூது 1983)
 • இந்திரலோகத்து (உயிருள்ளவரை உஷா 1983)
 • நண்பனே எனது உயிர் நண்பனே (சட்டம் 1983)
 • தங்கநிலவே (தங்கைக்கோர் கீதம் 1983)
 • தேவி வந்தாள் (அழகு 1984 )
 • தேவன் கோயில் மணி (குழந்தை யேசு 1984)
 • தேன்மழையிலே (புதியவன் 1984 )
 • யாரோ மன்மதன் (ராஜாத்தி ரோஜாக்கிளி 1985 )
 • அதோ வானிலே ( தண்டனை 1985 )
 • மேகம் ரெண்டு சேரும் (பொய்முகங்கள் 1985 )
 • பூப் பறிக்கும் நேரத்திலே (கரையைத் தொடாத அலைகள் 1985)
 • என் நினைவுதான் / வாழும் வரை (பாடும் வானம்பாடி 1985)
 • இதழோடு இதழ் / பொங்கியதே (மண்ணுக்குள் வைரம் 1986)
 • மேகம் அந்த மேகம் / பூ மேடையோ (ஆயிரம் பூக்கள் மலரட்டும் 1986)
 • கவிதைகள் விரியும் விழியிலே / I want to be a rich man (உயிரே உனக்காக 1986)
 • மாலை எனை வாட்டுது /காதல் ஊர்வலம் இங்கே / மானே தேனே (பூக்களைப் பறிக்காதீர்கள் 1986)
 • நானும் உந்தன் உறவை / ஒரு பொன்மானை நான் காண (மைதிலி என்னைக் காதலி 1986)
 • வா வா இதயமே (நான் அடிமை இல்லை 1986)
 • கார்மேகம் ஊர்கோலம் போகும் (காலமெல்லாம் உன் மடியில் 1986)
 • நீலக்குயில்கள் ரெண்டு (விடுதலை 1986)
 • ஒரு காதல் என்பது (சின்னத்தம்பி பெரிய தம்பி 1987)
 • ஒரு காதல் என்பது (சின்னத்தம்பி பெரியதம்பி 1987 )
 • செம்மறியாடே (உழவன் மகன் 1987 )
 • சங்கீத வானில் (சின்னப்பூவே மெல்லப் பேசு 1987 )
 • கண்ணுக்குள் நூறு நிலவா (வேதம் புதிது 1987)
 • ஈரத்தாமரைப் பூவே (பாய்மரக்கப்பல் 1988)
 • என் ராசாத்தி நீ (ஊமைக்குயில் 1988 )
 • வண்ணத்துப் பூச்சி ( பாட்டி சொல்லைத் தட்டாதே 1988 )
 • சேலை கட்டும் /அன்னை மடியில் /ஓ காதல் என்னைக் காதலிக்கவில்லை (கொடி பறக்குது 1988)
 • ராக்குயிலே (புதிய வானம் 1988 )
 • செந்தூரப் பூவே (செந்தூரப் பூவே 1988 )
 • மெதுவா மெதுவா (அண்ணா நகர் முதல் தெரு 1988)
 • விழிகளில் கோடி (கண் சிமிட்டும் நேரம் 1988)
 • கொலுசே கொலுசே (பெண்புத்தி முன்புத்தி 1989)
 • நான் கண்டது (பறவைகள் பலவிதம் 1989 )
 • ஓ பொன் மாங்குயில் (மனசுக்குள் மத்தாப்பூ 1989 )
 • அந்திநேரத் தென்றல்(இணைந்த கைகள் 1990 )
 • யாரோடு யார் (இதய தாமரை 1990 )
 • நீலக்குயிலே நீலக்குயிலே (வைகாசி பிறந்தாச்சு 1990 )
 • பாட்டு ஒண்ணு பாடட்டுமா( புது வசந்தம் 1990 )
 • மழையும் நீயே / சங்கீத ஸ்வரங்கள் / ஜாதிமல்லிப் பூச்சரமே (அழகன் 1991)
 • வா வா எந்தன் (சேரன் பாண்டியன் 1991)
 • வண்ணம் கொண்ட (சிகரம் 1991)
 • வா வா எந்தன்( சேரன் பாண்டியன் 1991)
 • மல்லிகைப் பூவழகில் (அன்னை வயல் 1992)
 • ஓ நெஞ்சமே எட்டு மடிப்பு சேல (முதல் சீதனம் 1992)
 • நன்றி சொல்லிப் பாடுவேன் (சேவகன் 1992 )
 • முத்துநகையே முழுநிலவே (சாமுண்டி 1992)
 • காதல் ரோஜாவே (ரோஜா 1992)
 • வசந்தமே (அமரன் 1992)
 • ஜூலை மாதம் (புதியமுகம் 1993)
 • கண்களில் என்ன / பெண்ணல்ல பெண்ணல்ல (உழவன் 1993)
 • மானூத்து மந்தையிலே (கிழக்கு சீமையிலே 1993)
 • புத்தம் புது மலரே (அமராவதி 1993)
 • என் வீட்டுத் தோட்டத்தில் (ஜென்டில்மேன் 1993 )
 • எந்தப் பெண்ணிலும் இல்லாத (கேப்டன் மகள் 1993 )
 • மின்னலே நீ (மே மாதம் 1994)
 • இது சுகம் சுகம் வண்டிச்சோலை சின்னராசு (1994)
 • பூங்குயில் பாடினால் (நம்மவர் 1994)
 • கன்னத்தில் வை வைரமணி (கேப்டன் 1994 )
 • இன்பராகங்கள் (ஹலோ பிரதர்)
 • பூங்குயில் பாடினால் (நம்மவர் 1994)
 • அஞ்சலி அஞ்சலி / என் காதலே / மெட்டுப் போடு (டூயட் 1994)
 • செவ்வானம் சின்னப் பெண் (பவித்ரா 1994)
 • தொடத் தொட (இந்திரா 1995 )
 • ஒரு காதல் ராகம் ( மனதிலே ஒரு பாட்டு 1995)
 • என்னைக் காணவில்லையே (காதல் தேசம் 1996)
 • என்னைக் காணவில்லையே (காதல் தேசம் 1996 )
 • மாயா மச்சீந்ரா (இந்தியன் 1996)
 • நலம் நலமறிய ஆவல் ( காதல்கோட்டை 1996)
 • உள்ளமே உனக்குத்தான் (கோபுரதீபம் 1997)
 • தங்கத்தாமரை மலரே (மின்சாரக் கனவுகள் 1997)
 • ஈரநிலா (அரவிந்தன் 1997)
 • வெண்ணிலவே வெண்ணிலவே வெட்கம் ஏனம்மா (காலமெல்லாம் காதல் 1997)
 • அழகோவியம் (ரோஜா மலரே 1997 )
 • அழகான ராட்சஸியே (முதல்வன்1997 )
 • என் வானம் நீதானா (தினந்தோறும் 1998)
 • மலரே மௌனமா (கர்ணா)
 • நாடோடிப் பாட்டு பாட/ பூங்காற்று வீசும் (ஹரிச்சந்திரா 1998)
 • நன்றி சொல்லவே மன்னவா (மறுமலர்ச்சி 1998 )
 • உன்னைப் பார்த்த பின்புதான் (காதல்மன்னன் 1998 )
 • வெள்ளி மலரே (ஜோடி 1999 )
 • மனமே மனமே ( ரோஜாவனம் 1999 )
 • பார்த்துப் பார்த்து கண்கள்( நீ வருவாய் என 1999)
 • ஓ தென்றலே (என்றென்றும் காதல் 1999)
 • காதலெனும் தேர்வெழுதி (காதலர் தினம் 1999)
 • மின்னலே நீ வந்து (மே மாதம் 1999)
 • சுத்திச் சுத்தி வந்தீக (படையப்பா 1999)
 • வெள்ளி மலரே (ஜோடி 2000)
 • ஸ்வாசமே (தெனாலி 2000)
 • மனசுக்குள் ஒரு புயல் (ஸ்டார் 2001)
 • ராஜ ராஜேஸ்வரி (அவளுக்குள் ஒரு ரகசியம் 2001)
 • முன் பனியா (நந்தா 2001 )
 • கவிதைகள் சொல்லவா (உள்ளம் கொள்ளை போகுதே 2001)
 • கண்ணால் பேசும் பெண்ணே (மொழி 2007)
 • நான் போகிறேன் மேலே மேலே (நாணயம் 2010)

 • இளையராஜா - இளைய நிலா

 • மேகமே தூதாக வா (கண்ணன் ஒரு கைக் குழந்தை 1978)
 • என் கண்மணி / பொன்னுல பொன்னுல பண்ணின மூக்குத்தி (சிட்டுக்குருவி 1978)
 • கண்மணியே காதல் என்பது (ஆறிலிருந்து அறுபது வரை 1979)
 • திருத்தேரில் வரும் சிலையோ (நான் வாழ வைப்பேன் 1979)
 • சின்னப் புறாவொன்று (அன்பே சங்கீதா 1979)
 • நதியோரம் (அன்னை ஓர் ஆலயம் 1979)
 • குறிஞ்சி மலரில் (அழகே உன்னை ஆராதிக்கிறேன் 1979)
 • மயிலே மயிலே (கடவுள் அமைத்த மேடை 1979)
 • பொன்னாரம் பூவாரம் / இளமை எனும் பூங்காற்று (பகலில் ஒரு இரவு 1979)
 • தேவதை ஒரு தேவதை / எங்கெங்கோ செல்லும் (பட்டாக்கத்தி பைரவன் 1979)
 • வா பொன் மயிலே / மனதில் என்ன நினைவுகளோ (பூந்தளிர் 1979)
 • உச்சி வகுந்தெடுத்து (ரோசாப்பூ ரவிக்கைக்காரி 1979)
 • காத்தோடு பூவுரச (அன்புக்கு நான் அடிமை 1980)
 • நான் ஒரு பொன்னோவியம் (கண்ணில் தெரியும் கதைகள் 1980)
 • வாடாத ரோசாப்பூ (கிராமத்து அத்தியாயம் 1980)
 • பேரைச் சொல்லவா (குரு 1980)
 • எங்கேயோ ஏதோ பாட்டொன்று (நதியைத் தேடிவந்த கடல் 1980)
 • இது ஒரு பொன்மாலைப் பொழுது / மடை திறந்து (நிழல்கள் 1980)
 • பருவமே / உறவெனும் (நெஞ்சத்தைக் கிள்ளாதே 1980)
 • ஆயிரம் தாமரை மொட்டுகளே (அலைகள் ஓய்வதில்லை 1981)
 • ஒரு குங்கும செங்கமலம் (ஆராதனை 1981)
 • பூந்தளிராட(பன்னீர் புஷ்பங்கள் 1981)
 • ஹேய் ஓராயிரம் / ராதா ராதா (மீண்டும் கோகிலா 1981)
 • அந்திமழை பொழிகிறது (ராஜபார்வை 1981)
 • தேன் அருவியில் (ஆகாய கங்கை 1982)
 • அம்மா அழகே /நதியில் ஆடும் / பூவில் வண்டு / வெள்ளி சலங்கைகள் (காதல் ஓவியம் 1982)
 • சந்தனக்காற்றே (தனிக்காட்டு ராஜா 1982)
 • இளையநிலா / சாலையோரம் / தோகை இளமயில் /வைகறையில்(பயணங்கள் முடிவதில்லை 1982)
 • ஊமை நெஞ்சின் / ஒரு கிளி உருகுது / ஓ வெண்ணிலாவே (ஆனந்தக் கும்மி 1983)
 • தேவதை இளம் தேவி (ஆயிரம் நிலவே வா 1983)
 • தாழம்பூவே கண்ணுறங்கு (இன்று நீ நாளை நான் 1983)
 • தலையைக் குனியும் (ஒரு ஓடை நதியாகிறது1983)
 • கீதம் சங்கீதம் (கொக்கரக்கோ 1983)
 • பொத்தி வெச்ச (மண்வாசனை 1983)
 • என் காதல் தேவி / விழிகள் மீனோ /தென்றலோ தீயோ (ராகங்கள் மாறுவதில்லை 1983)
 • மௌனமான நேரம் / நாத விநோதங்கள்/ வான் போலே (சலங்கை ஒலி 1983)
 • சின்னஞ்சிறு கிளியே (முந்தானை முடிச்சு 1983 )
 • நீலக்குயிலே உன்னோடு (1984 )
 • விழியிலே மணி விழியிலே(நூறாவது நாள் 1984)
 • தேவன் தந்த வீணை (உன்னை நான் சந்தித்தேன் 1984)
 • மேகம் கொட்டட்டும் / முத்தம் போதாதே (எனக்குள் ஒருவன் 1984)
 • தாழம்பூவே (கை கொடுக்கும் கை 1984)
 • நிலவொன்று கண்டேன் (கைராசிக்கரன் 1984)
 • ரோஜா ஒன்று (கொம்பேறிமூக்கன் 1984)
 • என் வாழ்விலே / காதலின் தீபம் (தம்பிக்கு எந்த ஊரு 1984)
 • மாலை சூடும் வேளை (நான் மகான் அல்ல 1984)
 • பாடும் வானம்பாடி / சீர் கொண்டு வா (நான் பாடும் பாடல் 1984)
 • ஓ வசந்தராஜா (நீங்கள் கேட்டவை1984)
 • விழியிலே மணி விழியிலே (நூறாவது நாள் 1984)
 • காலம் மாறலாம் (வாழ்க்கை 1984)
 • மனசு மயங்கும் (சிப்பிக்குள் முத்து 1985)
 • இதயம் ஒரு கோயில் / கூட்டத்திலே கோயில் புறா / நான் பாடும் மௌனராகம் / பாட்டுத்தலைவன் / யார் வீட்டு ரோஜா (இதயக் கோயில் 1985)
 • சங்கீத மேகம் / பாடுநிலாவே / என்னோடு பாட்டு / தேனே தென்பாண்டி/உதய கீதம் பாடுவேன் (உதயகீதம் 1985)
 • கண்ணில் என்ன (உன் கண்ணில் நீர் வழிந்தால் 1985)
 • கண்மணியே பேசு / பட்டு கன்னம் /வானிலே தேனிலா (காக்கிச் சட்டை 1985)
 • நிலவு தூங்கும் நேரம் (குங்குமச் சிமிழ் 1985)
 • புதிய பூவிது / கவிதை பாடு (தென்றலே என்னைத் தொடு 1985)
 • பெண்மானே சங்கீதம் (நான் சிகப்பு மனிதன் 1985)
 • மன்றம் வந்த / நிலாவே வா / பனி விழும் இரவில் (மௌனராகம் 1986)
 • காலைநேர (அம்மன் கோயில் கிழக்காலே 1986)
 • இளஞ்சோலை பூத்ததா /கண்ணா உன்னைத் தேடுகிறேன் (உனக்காகவே வாழ்கிறேன் 1986)
 • போகுதே போகுதே (கடலோரக் கவிதைகள் 1986)
 • ஓ வானம்பாடி (சாதனை 1986)
 • யார் தூரிகை தந்த (பாரு பாரு பட்டணம் பாரு 1986)
 • என்ன சத்தம் / சிங்களத்து சின்ன குயிலே (புன்னகை மன்னன் 1986)
 • வா வெண்ணிலா / தேடும் கண் பார்வை / தில் தில் மனதில் (மெல்லத் திறந்தது கதவு 1986)
 • மீண்டும் மீண்டும் வா (விக்ரம் 1986)
 • தீர்த்தக்கரை ஓரத்திலே (தீர்த்தக் கரையினிலே 1987)
 • மலையோரம் வீசும் காற்று / வா வெளியே (பாடு நிலாவே 1987)
 • நந்தவனம் பூத்திருக்குது (இல்லம் 1988)
 • நாடோடி பாட்டுகள் (என் உயிர் கண்ணம்மா 1988)
 • இதழில் கதை எழுதும் (உன்னால் முடியும் தம்பி 1988)
 • பல்லவியே சரணம் (ஒருவர் வாழும் ஆலயம் 1988)
 • வளையோசை (சத்யா 1988)
 • மஞ்சப் பொடி தூவையிலே (செண்பகமே செண்பகமே 1988)
 • அதிகாலை நேரம் / ஒரு தேவதை (நான் சொன்னதே சட்டம் 1988)
 • தென் மதுரை வைகை (தர்மத்தின் தலைவன் 1988)
 • வாழ வைக்கும் / உன்னை நெனைச்சேன் (அபூர்வ சகோதரர்கள் 1989)
 • என்னதான் சுகமோ நெஞ்சிலே (மாப்பிள்ளை 1989 )
 • அடி வான்மதி / இரு விழியின் (சிவா 1989)
 • உன் மனசுல பாட்டுதான் (பாண்டிநாட்டுத் தங்கம் 1989)
 • பூங்காற்று உன் பேர் சொல்ல (வெற்றி விழா 1989)
 • குருவாயூரப்பா / கேளடி கண்மணி / கல்யாணமாலை (புதுப்புது அர்த்தங்கள் 1989)
 • தானா வந்த சந்தனமே (ஊரு விட்டு ஊரு வந்து 1990)
 • பச்ச மலப் பூவு / பாடிப் பறந்த குயில் (கிழக்கு வாசல்1990)
 • ரம் பம் பம் (மைக்கேல் மதன காமராஜன் 1990)
 • மண்ணில் இந்த (கேளடி கண்மணி 1990)
 • ஆட்டமா (நடிகன் 1990)
 • பூங்கொடிதான் / இதயமே (இதயம் 1991)
 • காதல் கவிதைகள் (கோபுர வாசலிலே 1991)
 • போவோமா / அரைச்ச சந்தனம் / குயிலப் புடிச்சு (சின்னத்தம்பி 1991)
 • சந்தைக்கு வந்த கிளி (தர்மதுரை 1991)
 • சுந்தரி கண்ணால் / காட்டுக் குயிலு (தளபதி 1991)
 • எங்கிருந்தோ (பிரம்மா 1991)
 • பூ..பூ..பூ.. (புது நெல்லு புது நாத்து 1991)
 • சந்தைக்கு வந்த கிளி (தர்மதுரை 1991 )
 • வருது வருது இளங்காற்று (பிரம்மா 1991)
 • காட்டுக்குயிலு (தளபதி 1991)
 • அடுக்குமல்லி / சாமிக்கிட்ட சொல்லி (ஆவாரம்பூ 1992 )
 • இன்னும் என்னை என்ன (சிங்காரவேலன் 1992)
 • என்னைத் தொட்டு (உன்னை நெனைச்சேன் பாட்டு படிச்சேன் 1992 )
 • சின்னக்கிளி வண்ணக்கிளி / கூண்டுக்குள்ள என்னை வெச்சு/ முத்துமணி மால (சின்னக்கவுண்டர் 1992)
 • கூண்டுக்குள்ள / முத்துமணி மால (சின்னகவுண்டர் 1992)
 • ஓ பட்டர்ஃப்ளை / பனி விழும் மாலையில் (மீரா 1992)
 • துள்ளித் திரிந்ததொரு காலம் (என்றும் அன்புடன் 1992)
 • வைகை நதியோரம் (ரிக் ஷா மாமா 1992)
 • சின்னச் சின்ன தூறல் / காலையில் கேட்டது (செந்தமிழ் பாட்டு 1992)
 • ஒருநாளும்/நிலவே முகம் காட்டு (எஜமான் 1993)
 • எல்லோரும் சொல்லும் பாட்டு / நலம் வாழ (மறுபடியும் 1993)
 • நெஞ்சுக்குள்ளே (பொன்னுமணி 1993)
 • இந்த மாமனோட மனசு (உத்தமராசா 1993 )
 • நெஞ்சுக்குள்ளே / சிந்துநதி செம்மீனே (பொன்னுமணி 1993)
 • பூங்குயில் ரெண்டு (வீட்டில விசேஷங்க 1994)
 • வெண்ணிலவின் மல்லிகையில் (அதிரடிப் படை 1994 )
 • என்னவென்று சொல்வதம்மா (ராஜகுமாரன் 1994)
 • ஸ்ரீரங்க ரங்கநாதனின் (மகாநதி 1994)
 • கொஞ்சி கொஞ்சி (வீரா 1994)
 • புன்னைவனத்துக் குயிலோ /அந்தக் கஞ்சிக் கலயத்த (முத்துக்காளை 1995)
 • சின்னக் கண்மணிக்குள்ளே / வழிவிடு வழிவிடு (பாட்டுப் பாட வா 1995)
 • மனதிலே ஒரு பாட்டு (தாயம் ஒண்ணு 1995 )
 • உன்னைப் பாடாத ( இரட்டை ரோஜா 1996)
 • ஆலோலங் கிளி / செம்பூவே (சிறைச்சாலை 1996)
 • கண்ணம்மா / நிழலின் கதை ( விஸ்வதுளசி 2004 )

 • மின்னஞ்சல்: umavaratharajan@gmail.com

  நன்றி :காலச்சுவடு, நவம்பர் 2020

  16.11.2020


  பதிவேற்றம் - நவம்பர் 2020
  © பதிப்புரிமை உமா வரதராஜன் - 2020
  Designed By : HLJ Solutions