கைபோன போக்கில்

உமா வரதராஜன்


சுந்தரராமசாமியின் நாவல்கள்

சுந்தரராமசாமி அவர்களின் 'குழந்தைகள் பெண்கள் ஆண்கள்' நாவலைப் படித்துக் கொண்டிருக்கின்றேன். மிகவும் மெதுவாக நகர வேண்டியுள்ளது. அவருடைய முந்தைய நாவலான 'ஜே.ஜே. சில குறிப்புக்களின்' முதல் வாக்கியமே வெகு வசீகரமாக அமைந்து, வாசகர்களை ஈர்த்து விடக் கூடியதாக இருந்தது. ஆனால் 'குழந்தைகள் பெண்கள் ஆண்கள்' நாவலின் உருவமும், பாணியும் இன்னொரு வகையானது. மிகவும் விஸ்தாரமான வெளியில், ஆற அமர வாசகர்களைச் சந்திக்க சுந்தரராமசாமி அவர்கள் இந்த நாவலில் முனைந்திருப்பதாக நினைக்கின்றேன். நாவலை முழுமையாகப் படித்துவிட்டு அது பற்றிப் பேசுவதே நியாயமானது.

'இதை விடவும் விரும்பும் நாவல் ஒன்றை நான் பின்னால் எழுதக் கூடும்' என திரு. சுந்தரராமசாமி அவர்கள் 'ஒரு புளியமரத்தின் கதை' நாவல் முன்னுரையில் குறிப்பிட்டிருந்தார். 'அதன்படி உங்கள் இரண்டாவது நாவலான ஜே.ஜே. சில குறிப்புக்கள் சிறந்த நாவல்தான் என்பது அபிப்பிராயமா' என அவரிடம் கேட்டேன். அதற்கு டிசம்பர் 1, 1990 இல் திரு. சுந்தரராமசாமி எனக்கு எழுதிய பதில் இது;

ஒரு படைப்பை முடித்ததும் அதில் கூடிவிடும் தரம் சார்ந்து ஒரு திருப்தி; நம் கனவுகளுக்கேற்ப அது உயரவில்லை என்பதில் அதிருப்தி; இவை இரண்டும் படைப்பாளியின் பொதுவான மனநிலையாகும். ஒரு புளியமரத்தின் கதையில் நான் வெளிப்படையாகப் பகிர்ந்து கொண்டிருக்கும் ஆசுவாசம் - 'இதை விடவும் விரும்பும் நாவல் ஒன்றை பின்னால் எழுதக் கூடும்;' - ஒரு தீவிர மனநிலையில் எழுதப்பட்டுள்ள எல்லாப் படைபுகளுக்குப் பின்னாலும் எழுதாமல் எழுதப்பட்டிருப்பதாகும். இருபது வருடங்களுக்குப் பின் ஜே.ஜே. எழுதிக் கொண்டிருக்கும் போது முதல் நாவலின் முன்னுரையில் நான் தேடிக் கொண்டிருந்த ஆசுவாசம் என் நினைவில் இல்லை. மனவெளி முழுக்க ஜே.ஜே. நிரம்பியிருக்க அந்த நாவல் எனக்கு அளித்த சவாலை எதிர்கொள்ள என் முழு சக்தியையும் திரட்டி எழுதினேன். அச்சேறிவிட்ட என் படைப்பைப் படிப்பதில் எனக்கு எப்போதும் ஒரு சங்கடம் இருந்து வந்திருக்கிறது. பெரும்பாலும் இதைத் தவிர்த்தே வந்திருக்கின்றேன். இதற்கு மாறாக அச்சேறிய ஜே.ஜேயைப் பார்த்தேன். ஒரு முறைக்கு இருமுறை. வௌ;வேறு சந்தர்ப்பங்களில். நன்றாகவே வந்திருப்பது போலவே பட்டது. வேறு யாரேனும் எழுதிய நாவலாக ஜே.ஜே. இருந்திருந்தால், நான் எழுதியதாக அது இல்லையே என்று வெகுவாக ஆதங்கப்பட்டிருப்பேன் என்று பட்டது. ஜே.ஜேயின் நாட்குறிப்பில் பல பகுதிகள் நவீன கவிதைகள் பற்றிய எனது கோட்பாடுகளுக்கு ஏற்ப கவிதைகளாக பரிணமித்திருப்பதை உணர்ந்தேன். பன்முகம். பல அடுக்குகள். ஒரு தளத்திலிருந்து மற்றொரு தளத்திற்கு தாவி அனுபவத்தின் வெளியை விரித்தல். இவை மிகுந்த மன நிறைவைத் தந்தன.

பாரதிக்குப் பின் தமிழில் எழுதப்பட்ட ஆகப்பெரிய கவிதைகள் இவைதாம் என்று எண்ணத்தொடங்கினேன். தாழ்வு மனப்பான்மையை அடக்கத்தின் அடையாளமாகவும், தன் திறன் மதித்தலை அகங்காரத்தின் சின்னமாகவும் கருதப்படும் மரபு நமக்கு என்பதால் என் கூற்று தவறாக எடுத்துக் கொள்ளப்படும் அபாயம் கொண்டது. விமர்சன அளவுகோலை கூர்மையாக வளர்த்துக் கொள்ள விரும்பும் ஒரு ஆசிரியன் அவன் வாழும் காலத்தில் எப்போதும் அபாயமான சூழ்நிலையைத்தான் எதிர் கொள்கிறான். காலம் மாறும். விமர்சனப் படைப்பாளியும் அந்தக் காலத்தில் ஒரு பகுதியாக மாறுகிறான். இன்றைய சக எழுத்தாளன் ஏற்றுக்கொள்ளத்திமிறும் உண்மைகள் அன்றைய வாசகனுக்கு சகஜமாகப்படும்.

;இதை விடவும் விரும்பும் நாவல் ஒன்றைப் பின்னால் எழுதக் கூடும்' என்ற வாசகம் எழுதப்படாமல் ஜே.ஜே.யிலும் தொற்றி நிற்கிறது. இப்போது அந்த நாவலை எழுதிக் கொண்டிருக்கின்றேன். எழுதப் போகும் விஷயம் நிழலாடிய பின்னும் உருவம் பிடிபடாமல் பத்தாண்டுகள் அலைக்கழிந்து கொண்டிருந்தேன். இப்போது எழுத எழுத விஷயத்தின் உக்கிரம் அதன் வடிவத்தைச் தேடிச் சென்றடைவதில் நிம்மதி ஏற்படுகிறது. அளவில் இது பெரிய படைப்பு. ஆழத்திலும் இதுவொரு பெரிய படைப்பாக பரிணமிக்க வேண்டும் என்பது என் கனவு. இதுதான் என் படைப்புகளில் ஆகச் சிறந்ததாக இருக்க வேண்டும். அப்படி இல்லையென்றாலும் அதற்கு மேல் ஒன்றும் செய்வதற்கு இல்லை. ஏனெனில் இந்தப்படைப்பின் மூலம் என்னை முற்றாக நான் காலி செய்து கொண்டு விடுவேன் என்று நினைக்கிறேன்.

 

ரஜனியும், நீலாம்பரியும்

ஆரவாரங்கள் சற்று அடங்கிய நிலையில், அண்மையில் 'படையப்பா' பார்த்தேன். மரணப்படுக்கையில் கிடக்கும் தமிழ் சினிமாவை தத்தம் பங்குக்கு அவ்வவ்போது பலரும் ஏறிமிதிப்பதுண்டு. இரண்டு வருட அவகாசம் கொடுத்து அருணாச்சலத்திற்குப் பிறகு ரஜனிகாந்தின் அடுத்த மிதி இப்போது.

ரஜனிகாந்தின் பேச்சுகளையும், அறிக்கைகளையும், செய்கைகளையும் பார்க்கும் போது அவருக்கு மனநிலை சரியில்லையோ என்று எண்ணத்தோன்றும். ஆனால் அவர் ஒரு காரியப் பைத்தியம் என்பதுதான் உண்மை.

எம்.ஜி.ஆருக்குப் பின்னர் தமிழ்நாட்டு மக்களின் ரசனைகளை சரியாக அளவிட்டு வைத்திருக்கும் ஒரே நடிகர் அவர்தான். அருணாச்சலம், படையப்பா என அவர் தொடர்ச்சியாகத் தாங்கிவரும் தெய்வத் திருநாமங்கள் தற்செயலான ஒன்றல்ல. அவருடைய எண்ணத்தில் அவர் தமிழ்நாட்டின் புதிய, காக்கும் கடவுள்.

புற்றுக்குள் கையை விடும் அவர், பாம்பைத் தூக்கியெடுத்து முத்தமிடுகிறார். சீறிவரும் காளையைக் கையிலிருக்கும் வேலால் எறிந்து தடுத்து நிறுத்துகிறார். 'என்னை வாழவைத்தது தமிழ்நாட்டு மண்ணப்பா' என்று பாடுகின்றார். தன்னை மதியாத இடத்தில் அனுமார் பாணியில் தானே இருக்கை அமைத்து அமர்ந்து கொள்கிறார். அப்பா சொன்ன வார்த்தைக்காக சொத்து, சுகங்களை இழக்கிறார். அம்மா, தங்கையிடம் பாசம் பொழிகிறார். ஆணவக்காரியை அடக்குகிறார். இவை மட்டுமா? விஷம் கலந்த பாலை பாம்பு வந்து தட்டிவிடுகிறது. தீடீரெனத் தோன்றும் செயற்கைச் சூறாவளி அப்படியே மோசடி பத்திரங்களை அள்ளிச் செல்கிறது. ஆஹா, இவ்வளவு நவரச லேகியங்களையும் ஒரே குடுவையில் பெற தமிழ்பட ரசிகர்கள் எவ்வளவு கொடுத்து வைத்திருக்க வேண்டும்? அண்மைக் காலமாக அவருடைய திரைப்படங்களின் பொதுவான சரடு ஜெயலலிதாவைத் தாக்குவதாகும். படையப்பாவில் ஜெயலலிதாவுக்கு நீலாம்பரி என்று பெயர்.

ரஜனி உதிர்க்கும் ஒவ்வொரு வசனங்களுக்கும், அறிக்கைகளுக்கும் பல்வேறு வியாக்கியானங்களை வழங்கும் பணியில் இன்றைய பத்திரிகைகள் இயங்குகின்றன. உண்மையிலேயே ரஜனிகாந்தின் பிரச்சினைதான் என்ன? ரஜனிகாந்த் அநீதிக்கு எதிர்க்குரல் கொடுக்கவா அரசியலுக்கு வருகிறார்? நான் அப்படி நினைக்கவில்லை. ரஜனிகாந்தை மதிக்காத ஜெயலலிதா என்ற ஓர் ஆணவத்துடன் ரஜனிகாந்தின் ஆணவம் மோதிப்பார்க்க விரும்புகிறது.

1992ம் ஆண்டு சினிமா எக்ஸ்பிறஸ் விருது வழங்கும் விழாவில் அப்போது முதலமைச்சராக இருந்த ஜெயலலிதாவைப் பாராட்டி ரஜனிகாந்த் பேசிய வார்த்தைகளை அப்படியே தருகிறேன்.

'......முதல்வராகப் பொறுப்பேற்ற புரட்சித் தலைவி அவர்களை வாழ்த்துவதற்காக அவருடைய வீட்டுக்குச் சென்றிருந்தேன். அப்போது உடல்நலம் சரியில்லாமல் இருந்தார். உடல்நலத்தை கவனமாக பார்த்துக் கொள்ளுமாறு அவரிடம் சொன்னேன். அதற்கு அவரோ உடல்நலம் பற்றிக் கவலையில்லை. உயிரைத்தான் கவனமாக காப்பாற்ற வேண்டியிருக்கிறது. கொலைப்பட்டியலில் முதலாவதாக என் பெயர் இருக்கிறது என்று சொன்னார். அதைக் கேட்டதும் எனக்கு மிகவும் சங்கடமாகப் போய்விட்டது.

கள்ளம் கபடமற்ற இனிய அன்புள்ளம் கொண்ட அவருக்குத் துணையாக கோடானுகோடி தமிழ் மக்களின் அன்பும், ஆதாரவும் இருக்கிறது. அவரை எமன்கூட நெருங்க முடியாது. எமன் அல்ல. எமன், எமன் எமனுக்கு அப்பனே வந்தாலும் அவரை ஒன்றும் செய்ய முடியாது...'

அன்று கள்ளம் கபடமற்ற இனிய அன்புள்ளம் கொண்ட ஜெயலலிதா இன்று கொடூர குணம் கொண்ட நீலாம்பரியாக மாறிவிட்டார். நாளை இதே ஜெயலலிதா தில்லானா மோகனாம்பாளாகவும், ரஜனிகாந்த் சிக்கல் ஷண்முகசுந்தரமாகவும் மாறினால் கூட வியப்பில்லை.

அணுஆயுத பரிசோதனை சம்பந்தமாக ரஜனியின் அபிப்பிராயம் என்ன? அயோத்திப் பிரச்சினை சம்பந்தமாக ரஜனி என்ன சொல்கிறார்? அண்டை நாடான இலங்கையில் அல்லலுறும் தமிழினம் குறித்து அவர் என்ன நினைக்கிறார்? இவற்றைப் பற்றியெல்லாம் கேட்டால் இந்த வருங்கால முதலமைச்சர் 'என் வழி தனி வழி' என்று விரல்களைச் சொடுக்கக்கூடும். அல்லது 'நான் ஒரு தரம் சொன்னால் நூறு தரம் சொன்ன மாதிரி' என்று தலை மயிரைச் சிலுப்பக்கூடும். மேற்சொன்னவைகளெல்லாம் ரஜனிகாந்துக்கு பிரச்சினைகளே இல்லை. அவருடைய முக்கிய பிரச்சினை, தன்னைப் பொருட்படுத்தாத ஜெயலலிதா.

இத்தகைய அற்பமான காரணங்கள் அரசியல் பிரவேசம் ஒன்றிற்குப் போதுமானது என்பது எவ்வளவு அபாயகரமான நிலைமை. மூடக்கருத்துகளைப் பரப்பும் படையப்பா போன்ற ஒரு திரைப்படத்திற்கு பகுத்தறிவுத் திலகம் கலைஞர் கருணாநிதி நற்சான்றிதழ் வழங்கி 'படையப்பா படம் ரஜனிக்hந்தின் மற்ற வெற்றிப் படங்களின் சாதனையை உடையப்பா' என ஆக்கியிருக்கிறது' என்கின்றார். திராவிட அரசியலுடன் சம்பந்தப்பட்ட இந்த சினிமா நட்சத்திர அரசியலுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கும் தைரியம் இன்று தமிழ் நாட்டில் எந்த அரசியல் தலைவர்களுக்கும் இல்லை.

 

பாலச்சந்தர் என்றொரு பொம்மலாட்டக்காரர்

வெள்ளிக்கிழமை தோறும் எனக்கு இரண்டு கஷ்டங்கள். ஒன்று மரக்கறிச் சாப்பாடு. மற்றது மாலையானதும் பேச்சுத் துணைக்கு யாரும் இருப்பதில்லை. வீட்டிலுள்ளவர்கள் எல்லாம் பாலச்சந்தரின் 'காதல் பகடை' பார்க்க வு.ஏ முன்னால் குழுமி விடுகிறார்கள்.

தலைப்புக் காட்சிகளின் போது பாலச்சந்தர் விதவிதமான போஸ்களுடன் வருகின்றார். ஓர் அங்கத்தில், பாலச்சந்தர் பற்றியே இரு பாத்திரங்கள் பேசிப் பேசிப் புல்லரிக்க வைத்து விட்டார்கள்.

பள்ளிக்காலத்தில் நானும் நண்பர்களும் பாலச்சந்தரின் பரமரசிகர்கள். பாலச்சந்தரின் புதுமை நாட்டம் எவனுக்கும் புரியாமலிருக்கிறதே என்றுசொல்லி அங்கலாய்த்துக் கொள்வோம். பாலச்சந்தரை எல்லோரும் புரிந்து தலைமேல் கொண்டாடும் தருணத்தில் நாங்கள் வெகுதூரத்துக்கு விலகிப் போய் விட்டோம்.

அவருடைய முதல் சாதனை என்று நான் குறிப்பிட விரும்புவது இதைத்தான். வெறும் கோமாளியாக, கதாநாயகனுக்கும் கதாநாயகிக்கும் தூது போகிறவனாக, வில்லனிடம் அறை வாங்குபவனாக இருந்த நாகேஷை ஒரு குணச்சித்திர நடிகனாக பரிணமிக்க வைத்தது. நீர்க்குமிழி, எதிர்நீச்சல், மேஜர் சந்திரகாந்த், அனுபவி ராஜா அனுபவி, நவக்கிரகம், பத்தாம்பசலி... இப்படிப் பல படங்கள். தாடை பெருத்த, தொந்தி வைத்த பயில்வான்கள்தான் தமிழ்த்திரைக் கதாநாயகர்கள் என்ற விதியை சற்று விலக்கி வைத்தவர் அவர்.

தமிழ்த் திரைப்படங்களின் மாமூலான வடிவமைப்பை அவர் மாற்றியமைத்திருக்கிறார். ஸ்ரீதரின் 'நெஞ்சில் ஓர் ஆலயமும்' பாலச்சந்தரின் 'நீர்க்குமிழி'யும் தேர்ந்தெடுத்த களம் ஒன்றுதான். ஒரு வைத்தியசாலை. எனினும் ஸ்ரீதரின் நெஞ்சில் ஓர் ஆலயம் இயல்புக்கு முரணான அதீத கற்பனைகளுடன் ஒரு முக்கோணக் காதல் கதையாக திரையில் வருகின்றது. நீர்க்குமிழியோ ஒரு வைத்தியசாலையின் விடுதி தன்னைப் பற்றிக் கூறுகின்ற கதையாக மாறுபட்ட வடிவத்தில் வெளிப்படுகின்றது. பாலச்சந்தரைப்பற்றி சிலாகித்துச் சொல்லக்கூடிய இன்னொரு அம்சம் அவருடைய திரைப்படங்களின் உதிரிப் பாத்திரங்களுக்குக் கூட கிடைக்கின்ற பொலிவும் மெருகுமாகும்.

நாடகத் தன்மைகளுடன் அறிமுகமானாலும், கால ஓட்டத்தில் தன்னைக் கொஞ்சம் கொஞ்சமாக மாற்றிக் கொண்டவர் இவர் என்ற எண்ணத்தை இப்போது மறுபரிசீலனை செய்யவேண்டிய நிலைமை வந்துவிட்டது.

1972ல் வெளியான 'அரங்கேற்றம்'தான். பாலச்சந்தரின் திரையுலக அந்தஸ்தை வெகுவாக உயர்த்திவிட்ட திரைப்படம். தமிழிலும் அது முக்கியமான படம் என்பதில் ஐயமில்லை. அதிலிருந்து அவருடைய பயணம் முன்னோக்கி நகர்ந்திருக்க வேண்டும். ஆனால் அதற்கு சாத்தியம் இல்லாமல் போய்விட்டது. பாலச்சந்தரின் கலைப்பிறழ்வு அபூர்வராகங்களிலிருந்து ஆரம்பமாகின்றது. பாலச்சந்தருக்கு அபூர்வ இயக்குனர் என்ற பட்டத்தைப் பெற்றுத் தந்த 'அபூர்வராகத்தின்' கதையமைப்பு அபத்தமானதும், செயற்கையானதுமாகும். அபூர்வராகங்களுக்குக் கிடைத்த வரவேற்பே அது போன்ற அபத்தமான கதைகளை மென்மேலும் படமாக்கும் தைரியத்தை பாலச்சந்தருக்கு வழங்கியிருக்க வேண்டும். அவள் ஒரு தொடர் கதை, மூன்று முடிச்சு, புதுப்புது அர்த்தங்கள், கல்கி, பார்த்தாலே பரவசம் என அவருடைய பல பொம்மலாட்டங்கள் இன்றுவரை தொடர்கின்றன.

நமது 'தென்னாட்டு சத்தியஜித்ரே' இன்று மிகவும் சிறுத்துப் போய் (தொலைக்காட்சிக்கு வந்ததைச் சொல்கிறேன்.) இன்று வெறும் தமாஷ்களை தோரணம்கட்டி மாலை தொடுத்து காலத்தை ஓட்டுவது சகிக்க முடியாமல் இருக்கிறது. இந்த 'நாடகங்களை'யெல்லாம் பார்க்கும் போது அவர் மறுபடியும் பாமாவிஜயம், எதிர்நீச்சல், பூவா தலையா காலத்திற்குப் போய்ச்சேர்ந்துவிட்டாகவே எண்ணத் தோன்றுகின்றது. ஆனால் பாலச்சந்தரின் மறுபதிப்புகள் நம்மை மிகவுந்தான் சோதிக்கின்றன.

இன்று மணிரத்தினத்தைப் பற்றி சிலாகித்துக் கூறுபவர்களிடம் நான் செல்வது இதைத்தான். 'அவர் தமிழ்த் திரையுலகின் இரணண்டாவது பாலச்சந்தர்.'

ஜூன் - ஓகஸ்ட் 1999

 

தேர்தல் நேரம்

தலைவர் சிரிக்கிறார். தலைவி புன்னகைக்கிறார். எவ்வளவு பெரிய சுவரொட்டிகள். எத்தனை வர்ணம். என்னுடைய வாசல் கேற்றிலும் தலைவரை ஒட்டிவிட வேண்டுமென்று ஒருவன் பசை வாளியுடன் இரவு பத்துமணியளவில் வந்தான். 'தயவுசெய்து இதில் எதையும் ஒட்ட வேண்டாம்' என்றேன். அவன் பசையைப் பூச ஆரம்பித்தான். சற்றுக் கண்டிப்பான குரலில் மறுபடியும் சொன்னேன். என்னை ஏற இறங்கப் பார்த்துவிட்டு அடுத்த மதிலை நோக்கி நகர்ந்தான். ஜனநாயகத்தைக் காப்பாற்றிய பூரிப்புடன் நான் இரவு பத்துப் பத்துக்கு தூங்கச் சென்றேன். தலைவருடைய ஆட்சி ஒருவேளை அமைந்தால் தாராளமாக என்னுடைய வீட்டுக்கு எல்லோரும் வரலாம். அப்போது என்னுடைய வீட்டு வாசலுக்கு கேற் என்று எதுவும் இருக்காது.

வாக்கு வேட்டை நடந்து கொண்டிருக்கிறது. வாகனத்தில் இருந்தபடியே கையசைத்து என்னைக்கடந்து சென்றுவிடும் அந்த நண்பன் அன்று அக்கறையுடன் என் வீடு தேடி வந்தான். பெருத்த வயிறுடன் கால் நடையாக அவன் வருவது சங்கடமாக இருந்தது. கையில் இருந்த துண்டுப் பிரசுரம் ஒன்றை என்னிடம் தந்தான். துண்டுப் பிரசுரத்தில் 'சிக்னல் பற்பசை சிரிப்புடன்' இருந்தவரைச் சுட்டிக்காட்டி ''னுழn'வ கழசபநவ''(மறந்துவிட வேண்டாம்.) என்றான். பின் நகர்ந்தான்.

'எதை மறப்பது நண்பரே, எதை மறப்பது? சோதனைச் சாவடிகளில் வெயிலிலும், மழையிலும் நாங்கள் நாய்களிலும் கேவலமாய் ஊர்வதையா? மாலையானதும் வீட்டுக்குள் முடங்கி எங்கள் அரைநாள் பொழுதுகளைப் பறி கொடுத்ததையா? அகால வேளைகளில் எங்கள் வீட்டுக் கதவுகளைத் தட்டி அடையாள அட்டைகள் பார்பதையா?'

எங்கள் பொன்மாலைப் பொழுதின் சொர்க்கமாய் திகழ்ந்த இந்தக் கடற்கரையை தட்டிப்பறித்ததையா? சென்ற முறை நீங்கள் எல்லோரும் சொந்தம் கொண்டாடினீர்களே வெண்புறா – அதைப் பங்கு போட்டு கறி சமைத்து உண்டதையா? எதை மறக்கச் சொல்கிறீர்கள் நண்பரே. எதை?

 

முகமற்ற முகம்

'மோசமான படங்களை வெறுப்பதற்கு ரசிகர்கள் தயாராக இருக்கிறார்கள். நாம் செய்யவேண்டியதெல்லாம் நல்ல படங்களை விரும்புவதற்கு அவர்களை தயார் செய்ய வேண்டும். அவ்வளவுதான்' எனத் தன்னுடைய 'முகம்' திரைப்படம் வெளிவருவதற்கு முன்னர் இயக்குனர் ஞான ராஜசேகரன் பேட்டியொன்றில் தெரிவித்தார். ஆனால் அவர் நம்பிக்கை வைத்திருந்த ரசிகர்கள் முகத்தை ஆதரிக்கத் தயாராக இருக்கவில்லை. ஐம்பது லட்சம் ரூபா செலவில் தயாரிக்கப்பட்ட இந்தப் படத்தை அவர்கள் நிராகரித்து விட்டனர்.

இந்தப் படம் ஓடியிருந்தால்தான் நான் ஆச்சரியப் பட்டிருப்பேன். பொய் முகங்களுக்கே இந்த உலகில் மவுசு அதிகம் என்பதை நிரூபிக்கும் அதீத ஆர்வத்தை இந்த ஒன்றரை மணித்தியாலப் படம் கொண்டுள்ளது. 'முகத்தி'ன் முக்கிய பலவீனம் இந்த எடுகோளை நிரூபிப்பதற்காக செயற்கையான சம்பவங்களைச் சோடித்துச் செல்வது ஆகும். படத்தில் வரும் பாத்திரங்கள் எல்லாமே பத்து நிமிடங்களுக்கொரு தடவை 'முகம்' என்ற சொல்லை வெகு சிரத்தையுடன் உச்சரிக்கிறார்கள். முகமூடியை அணிந்தவுடன் நாசரின் முகம் அழகாக மாறுவது சரி. அவருடைய அகோரமான நீண்ட பற்களுமா மாறிவிடும்? முகமூடி ஒன்றினால் முகமாற்றம் அவ்வளவு எளிதா என கேட்டால் முகமூடி ஒரு குறியீடு என நமது திரைப்பட 'அறிஞர்கள்' கூறக்ககூடும். கால்மாத்திரை, அரைமத்திரை, முழு மாத்திரையைத்தவிர வேறெந்தக் குறியீடுகளுடனும் அதிக பரிச்சயமற்ற நமது சராசரி ரசிகன் 'அப்படியானால் எம்.ஜி.ஆர். ஆசை முகத்தில் நடித்த போது மாத்திரம் ஏன் கிண்டல் செய்தீர்கள்' எனக் கேள்வி கேட்பான். சில வேளைகளில் பரீட்சார்த்த முயற்சிக்கும், கற்றுக் குட்டித் தனத்திற்கும் அதிக வித்தியாசம் இல்லையோ என்னவோ? வித்தியாசமாகத் தங்களைக் காட்ட முனையும் இந்த இயக்குனர்கள் ஏன் இந்த வினோதமான செயற்கையான கதைகளைத் திரைப்படமாக்கத் தேர்ந்தெடுக்கிறார்கள் என்பது புரியவில்லை. பி.சி.ஸ்ரீராம், லெனின், விஜயன், இளையராஜா, ட்ரொஸ்கி மருது எனப் பல தேர்ந்த கலைஞர்கள் இருந்தும் கூட இப்படத்தில் உயிர்த்துடிப்பில்லை.


முதல்வன்

மூனாவில் தொடங்கும் இன்னொரு படம் பற்றி சில வரிகள். ரஜனிக்குத் தைத்த சட்டையை தீபாவளி சமயத்தில் அர்ஜூன் மாட்டிக் கொண்டு முதல்வனாக வந்திருக்கிறார். ஜென்டில்மேன், காதலன், இந்தியன், ஜீன்ஸ் ஆகிய தொடர் வெற்றிகளுக்குப் பின்னால் வரும் ஷங்கரின் அடுத்த படமிது. சமூகப் பிரச்சினை குறித்து அதிக அக்கறை கொண்டிருப்பது போல் அவருடைய (ஜீன்ஸை தவிர்த்து) படங்களில் தென்படும் மாயத் திரையை அகற்றிப்பார்ப்பது அவ்வளவு சிரமமான காரியமல்ல பின் அவற்றில் தென்படுபவை நம்முடைய திரைக் கதாநாயகர்கள் காலாகாலமாகப் புரிந்து வரும் தனிநபர் சாகசங்களே. முதல்வன் திரைப்படம் முன்வைக்கும் அரசியல் விமர்சனங்கள் சமூக அக்கறையுடன் எழுந்தவை அல்ல. தராசு, நக்கீரன், ஜூனியர் விகடன் பாணியில் பலரையும் ஈர்க்கும் பரபரப்பு விற்பனையை அடிப்படையாகக் கொண்டவை. ஷங்கரின் தீர்வுகள் விசித்திரமானவை. சராசரி மனிதனின் பொருமல்களுக்குத் தீனி போடுபவை. ஏழை மாணவர்கள் கல்வி கற்க கொள்ளையடித்து உதவுகிறான் ஜென்டில்மேன். நாட்டில் லஞ்சம், ஊழலை ஒழிக்க வர்மக் கலையை பயன்படுத்துகிறான் இந்தியன். ஒரு நாள் பதவியிலிருக்கும் முதல்வன் அதிரடி நடவடிக்கைகள் எடுக்கிறான். அசாத்தியக் கனவுகள் தரும் சுகத்துக்குத்தான் நிகரேது? இத்தகைய சினிமாக்களில்தான் இது சாத்தியம் என நம்பும் நமது ரசிகன் அதற்கப்பால் தனது விடுதலை பற்றிச் சிந்திக்கச் செல்வதில்லை.
ஷங்கரின் தொழில் நுட்பம் பற்றி மிகவும் சிலாகித்துக் கூறப்படுவதுண்டு. அது காலத்தின் நிர்ப்பந்தம். நாகிரெட்டியாரின் நம் நாட்டில் எம்.ஜி.ஆர். அரசியலில் வெற்றி பெற்றவுடன் 'வாங்கய்யா வாத்யாரய்யா' என்று பாடினார்கள். முதல்வனில் 'வன்... வன்... முதல்வன்' என்று வரவேற்கின்றார்கள். வாசன் சந்திரலேகாவில் காட்டிய ட்ரம் நடனத்திற்கும், மலைகள் எரியும் ஷங்கரின் படப் பாடல் காட்சிக்கும் அடிப்படையில் அதிக வித்தியாசமில்லை. பிரமாண்டம் என்ற பெயரில் ரசிகனின் வாயைப் பிளக்கச் செய்வதே இருவரினதும் நோக்கம்.

ஆனால் ஷங்கரிடம் சில சிறப்பம்சங்களில்லாமல் இல்லை. மசாலாப் படங்களின் நாடக சூத்திரத்தை அவர் கொஞ்சம் மாற்றியமைத்திருக்கின்றார். விறுவிறுப்பாக அவருடைய படம் நகர்கிறது. நகைச்சுவைத் தடம் என்று ஒன்று தனியாக அவருடைய படங்களில் இல்லை. கடைசிக் காட்சியில் தங்கையையும், தாயையும் கட்டி வைத்து விட்டு காதாநாயகனிடம் வில்லன் மணிக்கணக்கில் வசனம் பேசுவதில்லை. இவற்றால் திரைப்பட வர்த்தகத்தில் அவர் முதல்வனாக இருக்கிறார்.

 

இயக்குனர்கள் - ரசிகர்கள் - இடைவெளி

1975ம் ஆண்டளவில் பாபு நந்தன் கோடின் 'தாகம்' படம் பார்த்த போது 'ஏன் இப்படி சவ்வு போல் இழுக்கிறார்கள்' என நினைத்துக் கொண்டேன். பாபு நந்தன் கோட் பின்னாட்களில் சினிமா ஆசை போய் சாமியாராகி விட்டதாகவும், அவருடைய உதவியாளராக அப்போதிருந்த பால் பாண்டியன் என்பவரே இன்றைய பாரதிராஜா எனவும் அண்மையில் எங்கோ படித்தேன். பாபு நந்தன் கோட் சாமியாராகப் போனதற்கும் பாரதிராஜா பிரபல இயக்குனராக விளங்குவதற்கும் காரணங்கள் இல்லாமலில்லை. பாபு நந்தன் கோட் தொடங்கி ஞானராஜ சேகரன் வரையில் தமிழ் ரசிகர்களுடனான தொடர்பில் பெரும் இடைவெளி இருக்கிறது. யாருக்காக அழுதான், அவள் அப்படித்தான், ஹேமாவின் காதலர்கள், ஏழாவது மனிதன், மறுபக்கம், கண் சிவந்தால் மண் சிவக்கும், காணி நிலம், ஏர்முனை, ஊமை ஜனங்கள், வீடு, சந்தியாராகம், தேவதை, ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் போன்ற படங்களைப் பார்த்த அனுபவத்திலிருந்து இதை எழுதுகிறேன்.

இத்தகைய படங்களில் காணப்படும் மெதுவான நகர்ச்சி, சம்பாஷணைகளில் காண்பிக்கப்படும் சாவகாசம், இறுக்கமின்மை, அசுவாரஸ்யம் என்பன ரசியர்களை விரட்டுவதில் ஆச்சரியமில்லை. நாசர் கொஞ்ச நாட்களுக்கு முன்னர் பூர்வ ஜென்ம வாசைன கொண்ட 'தேவதை' என்றொரு படத்தை எடுத்தார். இந்தப் படம் ஓடுமென்று அவரை எண்ண வைத்தது எது? அதுகூட முற்பிறப்பில் அவர் கண்ட கனவோ, என்னவோ? தமிழ்த் திரைப்படங்கள் வெறும் ஒலிச்சித்திரங்கள் என ஏளனம் பண்ணுபவர்கள், 'ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாளு'க்கு விதிவிலக்கு அளிக்க முயல்வதை பாரபட்சத்தின் வெளிப்பாடாகவே கொள்ள வேண்டும். மோகமுள் எனும் சிறந்த நாவலின் திரைப்பட வடிவம் உண்மையிலேயே மெச்சத்தக்க விதத்திலா அமைந்துள்ளது? ராஜபார்வை, அழியாத கோலங்கள், மூன்றாம் பிறை, உதிரிப்பூக்கள், சலங்கை ஒலி, தண்ணீர் தண்ணீர், சத்யா, மகாநதி, ரோஜா, அஞ்சலி, நாயகன், குருதிப்புனல், நண்டு, மெட்டி, என் உயிர்த் தோழன் போன்ற செழுமையான முயற்சிகளைத் தமிழ் ரசிகர்கள் ஆதரிக்கவில்லையா? இத்தகைய முயற்சிகள் மேலும் தொடராமல் போனதற்கு சகலகலா வல்லவன் மாத்திரம்தான் காரணம் எனச் சொல்வது சரியானதுதானா? நீங்கள் கேட்டவை, வர்த்தக சபலத்துடன் உன் கண்ணில் நீர் வடிந்தால் போன்ற படங்களை எடுத்த பாலு மகேந்திராவையும் கை கொடுக்கும் கை, கண்ணுக்கு மை எழுது, ஊர்ப்பஞ்சாயத்து போன்ற படங்களை எடுத்த மகேந்திரனையும், கொடி பறக்குது, வாலிபமே வா வா போன்ற படங்களைத் தந்த பாரதிராஜாவையும் நாம் சார்பு நிலையொன்றியிலிருந்தே அணுகுகின்றோம் போலும் (இந்தப் படங்களினால் அப்படிப் பெரிதாக இவர்கள் என்னதான் சம்பாதித்தார்கள்?)

 

கொலையும் ஒரு கலை - அல்பிறட் ஹிட்ச்கொக்

தனியார் தொலைக் காட்சி நிறுவனங்களின் புண்ணியங்களில் சில நல்ல காரியங்களும் நடக்கின்றன. அல்பிறட் ஹிட்ச்கொக்கின் வேர்ட்டிகோ, மார்னி, சைக்கோ, ஃப்ரென்ஸி, ஆகிய நான்கு படங்களை வரிசையாக எம்.ரி.வியில் பார்த்தேன். மர்மப் படங்களைப் பொறுத்தவரையில் ஹிட்ச்கொக் ஒரு மன்னர்தான். சாதாரண மர்மக் கதைகளையும் ஒரு கலையழகுடன் அவரால் மெருகேற்ற முடிந்திருக்கிறது. அவரைப் பொறுத்த வரையில் கொலையும் ஒரு கலை. திரைக்கதை, ஒளிப்பதிவு, ஒலிப்பதிவு படத் தொகுப்பு போன்ற அம்சங்கள் அவருடைய திரைப்படங்களில் அந்தக் காலத்திலேயே பயன்படுத்தப்பட்டிருக்கும் விதம் வியக்கவைக்கின்றது. க்ரைம் கதைகளையே ஏன் தேர்ந்தெடுக்கிறீர்கள் என அவரைக் கேட்ட போது அவர் அளித்த பதில் இது. ''ஏனெனில் இது போன்ற கதைகளையே நான் எழுதுகிறேன். அல்லது எழுத உதவுகிறேன். இவற்றையே நான் வெற்றிகரமாக படமாக்குகிறேன். வேறு கதைகளையும் நான் பயன்படுத்த தயாராக இருக்கிறேன். ஆனால் கதைகளை எனக்குத் தேவையான வடிவத்தில் எந்த எழுத்தாளனும் தருவதில்லை''

தமிழிலும் இத்தகைய க்ரைம் சினிமாக்கள் அவ்வப் போது வந்திருக்கின்றன. யார் நீ, அதே கண்கள், அம்மா எங்கே, மூடுபனி, நூறாவது நாள், உச்சக்கட்டம்... இப்படிச் சில படங்களைச் சொல்லிக்கொண்டே போகலாம். கொலைகளும், கொலையாளிகளும் நிறைந்த இத்தகைய திரைப்படங்களுக்கு பெரும்பாலான தமிழ் ரசிகர்களிடமிருந்து அவ்வளவு ஆதரவு கிடைப்பது இல்லை. தமிழ்த் திரைக்கதாசிரியர்கள், நடிகர்கள், இயக்குனர்கள் என்பவர்களே அநேகமான தமிழ்த் திரைப்படங்களின் கொலையாளிகளாக இருந்து விடுவதால் அவற்றிற்கு தனியான கவனிப்புக் கிடைப்பதில்லை போலும்.

 

தமிழ்த்திரையிசைப் பாடல்கள்

மீசை அரும்பத் தொடங்கியிருக்கும் இளைஞர் ஒருவர் 'ரஹ்மானின் இசைக்கு நிகர் ஏது? கேட்டிருக்கிறீர்களா?' என அண்மையில் பெருமையுடன் விசாரித்தார். ரஹ்மானின் பாடல்களை மட்டுமல்ல. கடந்த 07 வருட காலமாக வந்த அனேகமான தமிழ்த் திரைப்படப் பாடல்களைக் கேட்டிருக்கிறேன். சமீபத்தில் ஒரு பேராசிரியர் ஒருவர் எனக்கிருக்கும் சினிமாப் பாடல் பித்துப் பற்றி பெரிதும் கவலை தெரிவித்தார். ''தாழ்ந்த ரசனை, வெறும் திகட்டல், திரும்பத் திரும்ப ஒரே விசயம்'' என்பன திரையிசைப் பாடல்கள் குறித்த அவருடைய குற்றச்சாட்டு. இதைச் சொல்லும் போது அவருடைய மனக்கண்ணில் மரங்களைச் சுற்றிச் சுற்றி ஓடும், அல்லது படகு வலித்துச் செல்லும் அல்லது மலைப்பள்ளத்தாக்குகளில் உருண்டு புரளும் ஜோடிகள் தோன்றியிருக்கலாம். இந்த அபத்தமான காட்சிகளுக்கு அப்பாலும் படப்பாடல்களின் வீச்சு உள்ளது என்பதுதான் உண்மை.
இந்த நூற்றாண்டின் இறுதிக் கட்டத்திலும் இளைமையுடன் விளங்கும் பல பாடல்கள் இருக்கின்றன. எங்கிருந்தாலும், எப்படியிருந்தாலும் என்னை ஈர்த்துவிடக் கூடிய பாடல்கள் என்று ஒரு பட்டியலிட்டுக் கொண்டிருக்கின்றேன். முதல் 20 பாடல்கள் இவை.

 1. காற்றினிலே வரும் கீதம் (மீரா - எம்.எஸ் சுப்புலட்சுமி - 1945
 2. நீலவண்ணக் கண்ணா வாடா (மங்கையர் திலகம் - பால சரஸ்வதி - 1955)
 3. வான் மீதிலே இன்பத்தேன் (சண்டிராணி - பி. பானுமதி - 1953)
 4. கல்யாண ஊர்வலம் வரும் (அவன் - ஜிக்கி - 1953)
 5. சேலாடும் நீரோடை மீதே (அலாவுதீனும் அற்புத விளக்கும் - ஏ.எம். ராஜா - 1960)
 6. மலரோடும் விளையாடும் தென்றலே (தெய்வ பலம் - P.B. ஸ்ரீனிவாஸ் - 1960)
 7. நிலவும் மலரும் பாடுது (தேன் நிலவு - ஏ.எம். ராஜா, சுசீலா - 1961)
 8. காற்று வெளியிடை கண்ணம்மா (கப்பலோட்டிய தமிழன் - P.B. ஸ்ரீனிவாஸ், சுசீலா - 1963
 9. நிலவே என்னிடம் நெருங்காதே (ராமு - P.B. ஸ்ரீனிவாஸ் - 1964)
 10. யார் அந்த நிலவு (சாந்தி - டி.எம். சௌந்தரராஜன் - 1965)
 11. ஆலயமணியின் ஓசையை (பாலும் பழமும் - பி. சுசீலா - 1961)
 12. காவேரி ஓரம் கவி சொன்ன (ஆடிப்பெருக்கு - பி. சுசீலா - 1962)
 13. சிட்டுக்குருவி சிட்டுக்குருவி (டவுன் பஸ் - ராஜேஸ்வரி - 1955)
 14. நான் பேச நினைப்பதெல்லாம் (பாலும் பழமும் - டி.எம்.எஸ், சுசீலா - 19661)
 15. வெண்ணிலவே தண் மதியே (வஞ்சிக் கோட்டை வாலிபன் - பி.லீலா - 1958)
 16. மயக்கும் மாலைப் பொழுதே (குலேபகாவலி - ஏ.எம். ராஜா, ஜிக்கி - 1955)
 17. தென்னங்கீற்று ஊஞ்சலிலே (பாதைதெரியுது பார் - P.B. ஸ்ரீவாஸ் - 1960)
 18. ஓராயிரம் பார்வையிலே (வல்லவனுக்கு வல்லவன் - டி.எம்.எஸ் - 1964)
 19. சிட்டுக்குருவி முத்தம் (புதிய பறவை – பீ.சுசீலா - 1964)
 20. நான் தேடும் போதே நீ ஓடலாமோ (அவள் யார் - பாணிக்ரஹி - 1959)

அரும்பு மீசை இளைஞனும், பேராசிரியரும் எதிர்வரும் நாள் ஒன்றில் பொன்னிறப்பானம் கொஞ்சம் பருகி, லேசாக உணவருந்தி, இரவில் தண்ணொளியில் இப்பாடல்களை அரைக்கண் திறந்த நிலையில் செவிமடுத்து, நமது படப் பாடல்களின் பாரம்பரியம் பற்றிய சந்தேகம் அகன்று, ''முக்காப்புலா, ஷக்கலக்க பேபி, முஸ்தபா, தய்யத்தய்யா, சோனியா'' போன்ற செவிக்குள் புகுந்த பேய் பூதங்களை விரட்டி, ஜீவித ஒளியைத் தரிசித்து சகல சௌபாக்கியங்களும் பெறுவார்களாக!

ஜனவரி – மார்ச் 2000

மூன்றாவது மனிதன்

 

காந்தியும், கமலஹாசனும்

ஏராளமான எதிர்பார்ப்;புகளுக்கும், விளம்பரங்களுக்கும் மத்தியில் கமலஹாசனின் 'ஹேராம்' வெளியானது. பொதுவாக கமலஹாசன், ரஜனிகாந்த் போன்றவர்களின் தும்மல்களுக்கும், இருமல்களுக்கும் கூட பல வியாக்கியானங்கள் சொல்லப்படுவதுண்டு. முப்பது வருஷங்களுக்கு முன்னால் சிவாஜி கனேசன் 'திருவருட் செல்வரில்' முக ஒப்பனை செய்து கொண்டு அப்பராக மாறி வந்த போது அதுவெறும் சம்பவம். கமலஹாசன் இந்தியன் தாத்தாவாக முகமாற்றம் செய்து கொண்டு தோன்றினால் அது சரித்திரம். அமர்க்களமான அட்டைப்படத் தோற்றங்கள், அறிவிப்புகள், பேட்டிகள், கட்டுரைகள், முன்னோட்டங்கள் என்பவற்றுடன் வெளியான ஹேராம் சிலர் சொல்வது போல ஓர் அற்புதமான கலைப்படைப்புத்தானா? அல்லது பலர் கூறுவதைப் போல தெளிவற்ற ஒரு திரைப்படமா?

காந்தி ஓர் மகாத்மாதானா என்பதில் பலவிதமான கருத்து நிலைகள் இன்றைக்கு இருக்கின்றன. அவரை அரசியல் ரீதியாக குற்றங்குறை காண்பவர்கள் அவர் பிறந்த நாட்டிலேயே உள்ளனர். எனினும் இந்தியாவின் பெரும்பான்மை மக்களிடையே காந்திக்குள்ள
முக்கியத்துவத்தை நாம் மறுக்க இயலாது. காரணங்களெவையுமற்ற நிலையில் ஒரு மனிதனுக்கு இத்தகைய அங்கீகாரங்கள் எவையும் கிடைப்பதுமில்லை. வில்லன்களுடனேயே இதுவரை தமிழ் சினிமாக்களில் மோதிவந்த நமது கமலஹாசன் இந்தத் தடவை மோதியிருப்பது இந்தியர்களின் நிஜமான நாயகன் ஒருவருடன்.

பலரது கவனத்தையும் ஈர்ப்பதற்கு ஏதுவாக காந்தி என்ற பெயரை இந்தத் தடவை அவர் தெரிந்தெடுத்துக் கொண்டார். ஹேராம் திரைப்பட ஆக்கத்தின் வளர் நிலையிலேயே காந்தியைப் பற்றிய தன் தடாலடியான கருத்துகளை பத்திரிகைகள், தொலைக்காட்சிகள் மூலம் தெரியப்படுத்தி வியாபாரத் தந்திரங்களை அவர் மேற்கொண்டார். கமலஹாசன் தீனா கானாவா, பாரதிய ஜனதாக் காரரா, ஆர்.எஸ்.எஸ். சார்பாளரா என்றெல்லாம் ஊகங்கள் எழுப்பும் பத்திரிகைகள் முதலில் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். தி.வி.க. (திரைப்பட வியாபாரிகள் கட்சி)

வழி வழியாக வரும் தமிழ்ப் படங்களுள் கமலின் ஹேராமும் ஒன்று எனச் சொல்லிவிட முடிவதில்லை. இந்தப் புத்திசாலித் தனம்தான் கமலஹாசன், மணிரத்னம், ஷங்கர் போன்றோரின் பலமாகவுள்ளது. தமிழ் சினிமாவுலகைப் பொறுத்த வரையில் சமீபகாலமாக இரண்டு வகை வியாபாரங்கள் நடைபெறுவதாக சொல்ல முடியும். ஒன்று நடைபாதை வியாபாரம், மற்றது சுப்பர் மார்க்கெட் வியாபாரம். தம்மை வியாபாரிகள் என்று சொல்ல விரும்பாத மணிரத்தனம், ஷங்கர், கமலஹாசன் போன்றவர்கள் இரண்டாவது வகையை சார்ந்தவர்கள்.

காந்தி விமர்சனத்திற்கு அப்பாற்பட்ட மனிதரல்ல. ஆனால் கமலஹாசனுக்கு காந்தி மீது புதிய கோணத்திலான விமர்சனம் எதையும் வைப்பதற்கான துணிவில்லை. Day of Jeckol பாணியில் ஒரு விறுவிறுப்பான ஹொலிவுட் த்ரில்லர் அவருடைய கனவாக இருந்திருக்கும். இசைத்தட்டு ஒன்றின் வழமையான வேகத்தைச் சற்றுக் குறைவாக்கி, விசித்திரமான ஒலியை உண்டாக்கும் உத்தியில் இந்தத் த்ரில்லருக்கு கலை முலாம் பூச அவர் முயற்சி செய்திருக்கின்றார். தன் அன்பு மனைவி சிதைக்கப்பட்டு, கொல்லப்பட்டதற்கு ஏதோ ஒரு வகையில் காந்தியும் காரணம் என்ற வெறுப்பு சாகேத்ராமை வன்முறையின் பால் வழி நடத்துகிறது. காந்தியை கொலை செய்ய தூண்டுகிறது. இத்தகைய துர்ப்பாக்கியத்திற்கு ஆளான, ஆனால் துப்பாக்கி தூக்கத் தெரியாத எத்தனையோ சாமானியர்களை இந்தக் கணத்தில் நினைத்துப் பார்க்கத் தோன்றிற்று.

இந்து - முஸ்லிம் கலவரத்துடன் ஆரம்பமாகும் இத்திரைப்படம் இந்து - முஸ்லிம் கலவரத்துடனேயே முடிவடைகின்றது. ''இன்னமும் இதெல்லாம்முடியவில்லையா'' என்று கேட்டுவிட்டு சாகேத்ராம் என்ற கிழவர் கண்களை மூடுகிறார். இந்த இரண்டு முனைகளுக்குமிடையே இயல்பான முறையில் வைத்திருக்க வேண்டிய காட்சிகள் துண்டு துண்டாக அமைகின்றன. மிகவும் செயற்கையான வகையில் பாத்திரங்கள் உரைiயாடுகின்றன (ஷாருக்கான் - கமல் சம்பந்தப்பட்ட காட்சிகள்) கமலஹாசனின் திறந்த மேனிக் குளியல், நாயகிகளுடன் முத்தம் போன்ற மாமூலான வக்கிரமான அம்சங்களுடன் காந்தியும் அவ்வப்போது படங்களில் வந்து போகிறார். படைப்பாளியின் துணிவின்மை காரணமாக, ஏற்கனவே வந்த இருவரைப் போன்றே இப்படமும் ஓர் இலக்கற்ற தன்மையில் அலைகிறது.

 

எல்லோரும் நல்லவரே - கே.எஸ். சிவகுமாரன்

அண்மையில் பத்திகையாளர் ஜி.நடேசன் வீட்டில் கைக்குண்டு வீச்சு என்ற செய்தியைப் பார்த்த போது திரு. கே.எஸ். சிவகுமாரனின் ஞாபகம்தான் உடனே வந்தது. அண்மையில் அவர் மட்டக்களப்புக்கு வந்த போது அங்கேதான் தங்கியிருந்தார். ஆனால் கே.எஸ் சிவக்குமாரனை நோக்கிக் கைக்குண்டு வீசுவது பற்றி யாருமே யோசித்து பார்க்கமாட்டார்கள். அவரால் புண்பட்ட எழுத்தாளர்கள் என்று எவருமே இருக்கமாட்டார்கள். அந்த இனிமையான சுபாவந்தான் அவருடன் பலரையும் நெருங்க வைப்பது.

திரு. கே.எஸ் சிவக்குமாரன் என்றதும் இரண்டு விஷயங்கள் என் மனதில் தோன்றுவதுண்டு. ஒரு காலத்தில் இலங்கை வானொலியில் சித்திரகானம் நிகழ்ச்சியின் போது ஒலிக்கும் அவருடைய வித்தியாசமான தொனி கொண்ட குரல். மற்றது திரைப்பட விழாக்கள். When the lion comes திரைப்படத்திற்கு நுழைவுச் சீட்டுக் கிடைக்காமல் நான் சோகத்துடன் திரும்பிக்கொண்டிருக்கும் போது அவர் வெற்றிகரமாக திரையரங்கினுள் நுழைந்து கொண்டிருந்தார். இன்றுவரை அவர் தொடர்ந்து திரைப்பட விழாக்களில் அக்கறை காட்டுகிறார் என்பது எவ்வளவு கவனிப்புக்குரிய விஷயமோ அதைவிட ஆச்சர்யமூட்டும் விஷயம் இந்தத் திரைப்படங்கள் பற்றிய ஒரு தகவல் சொல்லியாக மாத்திரமே அவர் தன்னை இன்றுவரை ஸ்தாபித்து வைத்திருப்பது. இவ்வளவு திரைப்படங்களைப் பார்த்த ஒரு மனிதர் தியோடர் பாஸ்கரன், அம்ஷன்குமார், வெங்கடேஷ் சக்கரவர்த்தி, பசுமைக்குமார், விஸ்வாமித்திரன் போன்றவர்களைப் போல் திரைப்படச் சிந்தனைகளைத் தமிழில் பரிமாறியிருக்க வேண்டுமல்லவா என்பது என் ஆதங்கம். தான் பார்த்த பல நாட்டுத் திரைப்படங்கள் தந்த அனுபவங்களின் பின்னணியில் தமிழ் சினிமாவின் இன்றைய நிலை பற்றிய விழிப்புணர்வைத் தூண்டக்கூடிய கருத்துக்களை ரசிகர்களுக்கு தரக்கூடிய தகுதி அவருக்கு இருக்கின்றது. மணிரத்னம் பற்றிய அவருடைய அபிப்பிராயம் என்ன என நாம் அறிய முயற்சித்தால், எங்களுக்கு வாழ் நாளில் பார்க்கக் கிடைக்காத போத்துக்கல் திரைப்படமொன்றின் இயக்குனரான மனோ வெல்டி ஒலிவியரோ பற்றி புன்னகையுடன் சொல்லத் தொடங்குவார். ''என் பணி தகவல் தருவது மாத்திரமே'' என்பது..... இந்தப் புன்னகையின் அர்த்தம்.

கே.எஸ். சிவகுமாரன் தன்னைப் பற்றி ''இந்தப் பழம் கிழம், இந்தச் சிறியோன், இந்த ஞானசூனியம்'' என மிக அடக்கமாகச் சொல்லிக் கொள்ளும் போதெல்லாம் உண்மையிலேயே அவற்றிக்கு நேரெதிரான பிம்பங்களையே அவர் மனதிற் கொண்டுள்ளார் என எனக்குத் தோன்றுவதுண்டு. அவருடைய நூல்கள் ஒன்றன்பின் ஒன்றாக அண்மையில் வெளிவந்துள்ளன. ஈழத்து சிறுகதை தொகுப்புகள் : திறனாய்வு, அண்மைக்கால ஈழத்துச் சிறுகதைத் தொகுப்புகள், மூன்று நூற்றாண்டுகளின் முன்னோடிச் சிந்தனைகள், ஈழத்து தமிழ் நாவல்களில் சில : திறனாய்வுக் குறிப்புகள், மரபு வழித்திறனாய்வும் ஈழத்து தமிழ் இலக்கியமும் - இவை போக 'இருமை' என்ற பெயரில் ஒரு சிறுகதைத் தொகுதி.

இவற்றுள் ஈழத்து சிறுகதைத் தொகுப்புக்கள் : திறனாய்வு, அண்மைக்கால ஈழத்து சிறுகதைத் தொகுப்புகள், இருமை ஆகியவற்றைப் படித்தேன். முதலிரு நூல்களிலுமுள்ள பெரும்பாலான திறனாய்வு குறிப்புகள் தாராள மனதுடன் எழுதப்பட்டிருக்கின்றன. எழுத்தாளர்களின் கலைத்தரங்கள் சம்பந்தமான வேறுபாடுகள் கே.எஸ். சிவக்குமாரனை அவ்வளவாக உறுத்துவதில்லை போலும். ஒவ்வொரு எழுத்தாளனிலும் பிரேமை கொள்ள நடை, கரு, உத்தி, சமூக நோக்கு என ஏதாவதொரு அம்சம் அவருக்கு புலப்பட்டுக் கொண்டே இருக்கிறது. என் கேள்வி இதுதான். 'குப்பனும் சுப்பனும் ஒன்றா?'

 

வாமனன் : திரையிசையின் திசையறி கருவி

பிரசாந்தின் பிரத்தியேகப் போஸ், நான் ரசித்த பாடல் காட்சி, என்னைக் கவர்ந்த நட்சத்திரம், நடுப்பக்கக் கவர்ச்சி.... இவற்றையெல்லாம் மூட்டைக் கடிகள் போல் சகித்துக் கொண்டு கடந்த இரண்டு வருடங்களாக சினிமா எக்ஸ்பிறஸ் படித்து வருகிறேன். முக்கியமான அதன் மூன்று நான்கு பக்கங்களுக்காக, ''திரை இசைச் சாதனையாளர்கள்'' என்ற பெயரில் ஓர் அரிய தொடர் சினிமா எக்ஸ்பிறஸில் இடம் பெறுகிறது.

தமிழ் சினிமா இசை மீது ஆர்வம் கொண்டவர்களுக்கு இக் கட்டுரை ஒரு வரப்பிரசாதம். இந்தியன் எக்ஸ்பிறஸில் விமர்சனக் கட்டுரைகள் பல எழுதியுள்ள விஷய ஞானமுள்ள இசை விமர்சகர் திரு. கே.என். கிருஷ்னசாமி, வாமனன் என்ற பெரில் இத் தொடரை எழுதி வருகிறார்.

ஜி.இராமநாதன், சுப்பையா நாயுடு, வெங்கட்ராமன், விஸ்வநாதன் ராமமூர்த்தி, இளையராஜா, கே.வி மகாதேவன், ஏ.ஆர். ரஹ்மான் போன்ற பிரபலங்களே தமிழ் சினிமா இசையைத் தாங்கிப் பிடிக்கும் தூண்கள் என்ற கருத்தை இத் தொடர் மெல்லத் தகர்க்கிறது. தமிழ் சினிமாவின் இனிய குரல்களான ஆர். பால சரஸ்வதிதேவி, ஏ.பி கோமளா, ஆண்டாள், வசந்த கோகிலா பற்றியெல்லாம் இது ஞாபமூட்டுகிறது. ''மனம் ஒரு குரங்கு'' என்ற மறக்க முடியாத பாடலுக்கு இசையமைத்தவர் வி. குமார் என்று இந் நாள் வரை எண்ணிக் கொண்டிருந்தேன். அதற்கு இசையமைத்தவர் டி.பி. ராமச்சந்திரனாம். எதிர்பாராதது படத்திற்கு இசையமைத்தவர் ராஜேஸ்வரராவ் என்று எண்ணிக் கொண்டிருந்தேன். ஆனால் இசையமைத்தது சி.என் பாண்டுரங்கனாம். துலாபாரத்தில் ''பூஞ்சிட்டு கன்னங்கள்'' என்ற மனதை வருடும் அந்தப் பாடலுக்கு இசையமைத்தவர் விஸ்வநாதன் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். இல்லையாம். அதற்கு இசையமைத்தது ஜி. தேவராஜனாம். விஷயஞானம் குறித்து நான் கொண்டிருந்த தன்னம்பிக்கைக்கு அடிமேல் அடி தந்து கொண்டேயிருக்கிறார் இந்த வாமனன்.

வாமனனின் கட்டுரையில் இடம்பெறும் அரிய பல இசைத்தட்டுகளும் இன்றைக்கு இருக்கக்கூடிய ஒரேயிடம் நமது இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் என்பதில் ஐயமில்லை. இந்தத் தொடர் கட்டுரையை அடிப்படையாகக் கொண்டே தமிழ் திரையிசை தொடர்பான நிகழ்ச்சியொன்றை அமைக்கும் வல்லமை அவர்களுக்கு உண்டு. ஆனால் அங்குள்ளவர்களுக்கு அரிய பல இசைத்தட்டுகள் தோசைக் கல் போல் தோன்றுவதால் இப்போதைக்கு இசைத்தட்டுகளுக்கு மோட்சமில்லை.

 

பாமரனும் இளையராஜாவும்

பாமரனின் ''பகிரங்கக் கடிதங்கள்'' (குமுதம் இதழில் வந்ததும் - வராததும்) அண்மையில் நூல் வடிவில் வெளியாகியுள்ளது. பாலச்சந்தர், மணிரத்னம், சே. குவரோ பற்றி தோழி, வை.கோ., சந்தன மரம் புகழ் வீரப்பன், சேரன், இளையராஜா, சோ. ராமசாமி, தமிழ் நடிகர்கள் ஆகியோருக்கு பாமரன் எழுதிய கடிதங்களின் தொகுப்பு இந்நூல். பாமரனின் பார்ப்பனீய எதிர்ப்புணர்வே கடிதங்களின் மொழிநடையை நிர்ணயித்துச் செல்கிறது. பாலசந்தர், மணிரத்தினம், சேரன், வை.கோ, சோ பற்றியெல்லாம் பாமரன் கொதிப்புடன் தெரிவிக்கும் கருத்துகள் எனக்கும் உடன்பாடானவைதான். ஆனால் இளையராஜா என்று வரும் போது மாத்திரம் பாமரனின் கூரான பேனாமுனைக்கு என்ன நடந்தது?

ஜாதியக் கண்ணோட்டத்தில் மற்றவர்களைப் பிய்த்துக் குதறும் பாமரன் அதே ஜாதியக் கண்ணோட்டத்தில் இளையராஜாவின் குளறுபடிகளுக்கு விதிவிலக்கு அளிப்பது சரிதானா? பாமரன் கூறுவது போல இளையராஜா ஒடுக்கப்பட்ட தனது மக்களுக்காக இசையைப் பயன் படுத்தியவரல்ல. அது அவர் மேல் பாமரன் எழுப்ப முயலும் மாயத்தோற்றம். தமிழ்த் திரையுலகின் ஆதிக்ககாரர்களான செட்டியார், பிராமணர்கள் போன்றவர்களுடன் சமரசம் செய்வதிலும், ஐக்கியப்படுவதிலுந்தான் அவர் பெருமை அடைந்தவர். இவற்றையெல்லாம் மறந்து இளையராஜாவின் இசையை நாம் ரசிக்கிறோம் என்றால் அது தாழ்த்தப்பட்ட ஒருவரின் இசை என்பதால் அல்ல.

பாமரன் சொல்வது போல இளையராஜாவை திட்டமிட்டு எந்த சக்திகளும் ஒதுக்கவுமில்லை, புறக்கணிக்கவுமில்லை. நான் என்ற அகந்தையின் காரணமாக அவர் தேடிக் கொண்ட சிக்கல்கள் ஏராளம். ஆத்தா, பாத்தா, பூத்தா என்ற பாணியில் அவரே பாடிக் கெடுத்ததும், சாமியார் வேஷம் போட்டுக் கொண்டு முக்கல் முனகல் பாடல்களை வாரி வழங்கியதையும் பாமரன் லேசாக மறந்து விட்டார். ரஹ்மான் போன்ற இளைஞர்களின் வரவை அவர் மனதளவில் விரும்பவில்லை என்பதே உண்மை. இளையராஜா ஓர் ஆதிக்க சக்தியாக இருக்க விரும்பினாரே தவிர, பாமரன் கூறுவது போல ஆதிக்க சக்திகளால் நசுக்கப்படவில்லை. கடைசியாக பாமரனுக்கு சில வார்த்தைகள் : ஆபாசம், வக்கிரம் என்றெல்லாம் கூச்சலிடுகின்றீர்களே, அவற்றையெல்லாம் உற்பத்தி செய்வதில் பெரும் பங்கு வகிப்பது குமுதம் பத்திரிகை. அது பற்றிப் பகிரங்கமாக கடிதம் ஒன்று எழுதுவீர்களா குமுதம் பத்திரிகையில் நீங்கள் எழுதுகிறீர்கள் என்பதால் தான் இந்தக் கேள்வி தமிழ் நாட்டில் எத்தனையோ வகை வியாபாரங்கள் நடக்கின்றன. அவற்றுள் பாமரனின் சீற்றமும் ஒன்று.

 

சாருநிவேதிதா

சாருநிவேதிதாவின் ஸீரோ டிகிரி நாவலையும், நே நோ சிறுகதைத் தொகுப்பையும் பார்த்து வியந்து போனேன். (படித்து அல்ல). விஸ்கிப் போத்தலுள் கசிப்புப் போல அமைந்த நாவல்.

''என் கண்மணி ஜெனீ...... யதார்த்த உலகை விட்டு விலகி நிற்கும் இந்தத் தருணத்தில் யோசித்துப் பார்க்கிறேன். உன்னோடு பேசி எவ்வளவு காலம் ஆகிவிட்டது.

உன்னை இறுதியாகப் பிரிந்த போது நீ சொன்ன வார்த்தைகள் ஞாபகம் வருகின்றன...... அப்பா நீ என்ன அடிக்கடி வந்து பார்க்க வேண்டும்.

ஆனால் அப்போது தெரியாது அதுதான் இறுதிச் சந்திப்பு என்று.

புல்லில் தேங்கிய பனித்துளியாய் உன் கண்களில் தேங்கி நின்ற கண்ணீருக்கு ஈடாக நான் உனக்கு எதைக் கொடுக்ப்போகிறேன் என் பிரிய மகளே..... என் உயிரின் ஆழத்தில் இன்னமும் ஈரம் இருக்கிறது என்பதை எனக்கே உணர வைத்தது அந்தப் பனித்துளிதான் கண்ணே.... என் சினேகிதிகளோடும் வாசுகியோடும் நான் நிகழ்த்திய சம்பாஷனைகளையும் என்னுடைய வரலாற்றையும் 1800 பக்கங்கள் எழுதி அதில் எத்தனையோ பக்கங்களை கிழித்துப் போட்டுவிட்டு மிஞ்சியதை மட்டும் இப்போது உனக்கு அனுப்புகிறேன். இந்த வெண்பனி சிகரங்களைத் தாண்டி என் வார்த்தைகள் உன்னை வந்து சேருமா என்று தெரியவில்லை. மனிதனின் ஆதி குரூரங்களை உன்னுடைய மிருதுவான பிஞ்சு மனசுக்குள் பெருமூச்சோடு இறக்கி வைத்துவிட்டு இரவோ பகலோ தெரியாத பனிப்பாலையில் தனியாகச் சென்று கொண்டிருக்கிறேன்...'' என மென்மையாகத் தொடங்கும் நாவல் முற்றிலும் முரன்பட்ட வேறொரு தொனியில் நகர்கிறது. பூக்கடையின் நறுமணமும், கசாப்புக்கடையின் கத்தி உராய்வும் ஒரே நாவலில் அமைகின்றன என்பது எவ்வளவு அபாக்கியமான விஷயம். சாருநிவேதிதா தமிழ்ச் சூழலை அதிர்ச்சி வைத்தியத்திற்குள்ளாக்குவதாக அவரும் அவரது நேசகர்களும் நினைத்துக் கொள்ளலாம். ஆனால் நான் ஒரு போதும் அவ்வாறு எண்ண மாட்டேன். மனிதன் ஆடை அணிவது ஒரு பொது நாரீகம். ஆனால் அம்மணமாக நின்று காட்டுகிறேன் என்கிறார் சாரு. அது அவருடைய இஷ்டம், இஷ்டம். ஆனால் அதற்கோர் இலக்கிய அந்தஸ்த்தை ஏற்படுத்த நடைபெறும் முயற்சிகள் வேடிக்கையாக இருக்கின்றன. சென்ற பத்தாண்டுகளில் வந்த குறிப்பிடத்தக்க நாவல்கள் பட்டிலில் இந்த நாவலையும் இந்தியா டுடே உள்ளடக்குகிறது. பொதுவாக ஒரு ஜனரஞ்சகப் பத்திரிகையில் இவ்வாறான படைப்புகள் வந்துவிட்டால் கூப்பாடு போடும் விமர்சகர்கள் சாருநிவேதிதாவின் முன்பு மிக அடக்கஒடுக்கமாக உட்காந்திருக்கிறார்கள். ஆனால் இந் நாவலுக்கு மாறாக நே நோ சிறுகதைத் தொகுதியில் மனதில் பதியக்கூடிய சில சிறுகதைகள் உள்ளன.

மே – ஜூலை - 2000


பதிவேற்றம் - ஜனவரி 2011
© பதிப்புரிமை உமா வரதராஜன் - 2010
Designed By : HLJ Solutions