கடைசி நாள் : மருதூர்க் கொத்தன்நினைவாக (1936-2004)

உமா வரதராஜன்

மருதூர்க் கொத்தன் தன் கடைசி நிமிடங்களில் சந்திக்க விரும்பிய நபர்களில் நானும் ஒருவன் .நான் சென்ற போது காற்றின் குமிழிகள் தொண்டையில் பொங்க ,கண்களின் சுடர்கள் காற்றுடன் போராட கட்டிலில் ஒடுங்கிக் கிடந்தார் .ஏதோ சொல்ல முயன்றார் .புரியவில்லை .எழுதிக் காட்ட முயன்றார் .தாளில் பதிந்ததெல்லாம் வெறும் கோடுகள் .

சரிவுப் பாதையில் கால்கள் சறுக்கிச் செல்வதைப் பார்த்தேன் .அவருடைய அந்திம காலத் தூவானத்தின் இறுதிச் சொட்டுகளையும் ,கடல் வாய் வீழும் சூரியனின் செந்நிறக் குழம்பையும் கண்டேன் .விரிந்த பூவிதழ்களின் வழியே மரண வாசனை காற்று வெளியெங்கும் பரவுவதை நுகர்ந்தேன் .ஒரு பறவைக்குப் பாரமாகிப் போன சிறகுகள் மெல்ல மெல்ல ஓய்வதைப் பார்த்தேன் .

கால நதியில் மூழ்கும் தலையைப் பார்த்து ,செய்வதறியாது கரையில் நின்று கலங்கிக் கொண்டிருந்தேன் .

எவ்வளவு காலத்துப் பழக்கம் .'கட்டிடங்களின் காடாக மருதமுனை ஆகாதிருந்த அந்த நாட்களில் ,வெயிலின் நிறமெதுவென்றே அறியாத சில ஒழுங்கைகள் வழியாக நடையால் சில 'டானாக்கள் ' போட்டால் என் வீட்டிலிருந்து பத்துப் பதினைந்து நிமிடங்களுக்குள் கொத்தனின் வீட்டுக்குப் போய் விடலாம் .

மீலாத் கீரனும் நானும் சேர்ந்து 1974 ல் வெளிக் கொணர்ந்த காலரதம் சிற்றிதழில் முன்னிலை எழுத்தாளர்கள் பலரின் படைப்புகளுடன் கொத்தனின் 'பாவம் நரிகள் ' சிறுவர் நாடகப் பிரதியும் பிரசுரமாகியிருந்தது .அதே இதழில் வெளியான என்னுடைய 'அந்தப் பார்வை அப்படித்தான் இருக்கும் 'என்ற சிறு கதை தன் கவனத்தை ஈர்த்ததாகக் கொத்தன் கூறிய போது இளம் எழுத்தாளர்களுக்கு உரிய குதூகலம் என்னை சூழ்ந்து கொண்டது .

1977ல் மருதமுனை அல் -மனார் வித்தியாலயத்தில் அவர் பணியாற்றிய போது வெளியிட்ட 'கலங்கரை ' ஆண்டுமலரில் என்னுடைய 'வெயிலும் வெறுமையும் ' கதையைப் பிரசுரித்தார் .

கொத்தனைப் போன்றவர்கள் இத்தகைய உற்சாகத்தை தந்திருக்கா விட்டால் ஒரு வேளை நான் இன்றைக்கு 'கூடி வாழ்ந்தால் கோடி நன்மை ' போன்ற நீதிக்கதைகளை எழுதிக் கொண்டிருக்கக் கூடும் .

கொத்தன் ஏனோ என் முதல் நினைப்பில் ஓர் எழுத்தாளராக உருவம் கொள்வதில்லை .என் மானஸீக வகுப்பறையில் அவர் ஓர் ஆசிரியராகவே நுழைகின்றார் .கையில் பிரம்புடன் ,சிடுசிடுத்த முகத்துடன் ,பாதணிகளின் அட்டகாசமான சரசரப்புடன் 'அந்த வகுப்பறைக்குள் ' அவர் நுழைவதில்லை .அகன்ற முகப்பரப்பும் ,குறுஞ்சிரிப்பின் போது கூடவே தோன்றும் மூக்குச் சுளிப்பும் கொண்ட அந்தக் குள்ளமான ஆசிரியரின் பணிவான மாணவன் நான் .

என்னைப் போலவே பள்ளிக்கூட எல்லைகளைத் தாண்டிய பல மாணவர்கள் அவருக்குண்டு ,தேநீர்க் கடைகளின் வாங்குகளில் ,கடற்கரையில் ,அவருடைய வீட்டின் கூடத்தில் நாங்கள் அவரிடம் கேள்வி மேல் கேள்வியாய்க் கேட்டுக் கொண்டேயிருப்போம் . 'அணி சேரா நாடுகள் 'என்றால் என்ன என்ற கேள்விக்கு சரியான பதிலளிக்க முடியாமல் என்னுடைய வகுப்பாசிரியர் ஒருவர் மூன்று நாட்களாகத் திணறியதுண்டு .கடைசியாகக் கொத்தனை சந்தித்து விளக்கம் கேட்ட போது முப்பதே நிமிடங்களில் அதைத் தெளிவு படுத்தி விட்டு ,அடுத்த வேலையைக் கவனிக்கப் போய் விட்டார் .

கொத்தனுடைய எழுத்துகள் மீது ஒரு வாசகன் என்ற வகையில் எனக்கு விமர்சனங்கள் உண்டு .அவருடைய கதைகள் சற்று உரத்துப் பேசுவன போலிருக்கும் .பெரிய கட்டியத்துடன் மஹா வாக்கியங்களுடன் கதையைக் கட்டியெழுப்ப முனைவது போல் தோன்றும் .நுட்பங்களுக்கு முக்கியத்துவமளிக்காமல் வெறும் விவரணை ,சம்பாஷணைகள் மூலம் கதையை நகர்த்தி விடலாம் என்ற மனப்பாங்கு புலப் படும் .இத்தகைய விமர்சனங்கள் இருந்த போதிலும் என் மதிப்பில் அவர் என்றும் தாழ்ந்து போனதில்லை . இதே போன்று என்னுடைய எழுத்துப் போக்குகள் ,நோக்கு நிலை குறித்து அவருக்கும் விமர்சனங்கள் இருந்திருக்கின்றன .ஆனால் இந்தக் கருத்து முரண்பாடுகள் ,ரசனை வேறுபாடுகள் எல்லாவற்றையும் இரண்டாம் பட்சமாக்கி பரஸ்பரம் நாங்கள் அன்பும் ,மதிப்பும் வைத்திருந்தோம் .

அவரிடம் உரிமையுடன் நான் கேட்டு அவர் நிறைவேற்றித் தந்த வேண்டுகோள்கள் பலவுண்டு .நான் ஏற்பாடு செய்த இலக்கியக் கூட்டங்கள் பலவற்றில் அவர் முக்கியமான பேச்சாளராக இருந்திருக்கிறார் .'அன்ரனி பால்ராஜ் ' என்ற பெயரில் நான் சிறப்பாசிரியராக இருந்த 'களம் ' இதழுக்காக என் வேண்டுகோளின் பெயரில் 'மரையாம் மொக்கு ' என்ற நீண்ட கதையை அவர் எழுதித் தந்திருக்கிறார் .என் வீட்டில் நிகழ்ந்த விசேஷங்களின் போது அவர் முக்கிய விருந்தினராக கலந்து சிறப்பித்திருக்கிறார் . பதிலுக்கு மருதூர்க் கொத்தனும் தன் பங்குக்கு எனக்கு ஒரு வேண்டுகோள் விடுத்தார் .

தன்னை வந்து பார்த்துச் செல்லும் படி ,கொத்தன் தன் கடைசி நாளில் விடுத்த அழைப்பு அது

17.10.2017


பதிவேற்றம் - நவம்பர் 2017
© பதிப்புரிமை உமா வரதராஜன் - 2017
Designed By : HLJ Solutions