மரியா ஃபுல் ஒஃப் க்ரேஸ் (MARIA FULL OF GRACE )

உமா வரதராஜன்

வாழ்க்கை என்பது நம் முன்னே சில பொறிகளை வைத்து விட்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும். சிலர் அதில் மாட்டிக் கொள்வார்கள். சிலர் அவற்றை சாமர்த்தியமாகத் தாண்டி விடுவார்கள். பல சந்தர்ப்பங்களில் பொருளாதார நிர்ப்பந்தங்கள்தான் மனித நடத்தைகளைத் தீர்மானிப்பதில் பெரும் பங்கு வகிக்கின்றன.

இன்று நாம் பார்க்கப் போகும் திரைப்படத்தில் வரும் மரியாவும் இதற்கு ‘விதி விலக்கான ‘ ஒரு பெண்ணல்ல. நீரினுள் மெல்ல மெல்லஅமிழ்ந்து போகும் நிலையில் உள்ள அவள் எதையாவது ‘பற்றிக்’ கரையேறும் எண்ணத்தில் இருக்கிறாள். அவளுடையதும் அவளைப் போன்றோரினதும் இக்கட்டான நிலையை உலகின் சக்தி வாய்ந்த தரப்பு பயன் படுத்திக் கொள்ளுகின்றது.

உலகில் மரியா போன்ற சாமானியர்கள் ஒரு புறமென்றால் இதன் மறுபுறத்தில் சக்தி வாய்ந்த தரப்பினர் இருக்கின்றனர். இந்த சக்தி வாய்ந்த தரப்பு பெரு முதலாளிகளையும், அரசியல்வாதிகளையும் ,கொலையாளிகளையும் உலகெங்கும் உள்ளடக்கியது. இந்த சக்தி வாய்ந்த தரப்பின் பின்னணியை, மீறல்களை சட்டம் கண்டு கொள்வதில்லை. ஏனெனில் ஓர் ஆட்சியை அமைப்பதிலும் சரி ,கவிழ்ப்பதிலும் சரி –இவர்களுடைய பங்கு கணிசமானது. இந்த மமதையில் சக்தி வாய்ந்த தரப்பு ஆட்டுவிக்கின்றது. மரியாவைப் போன்றவர்கள் ஆடுகின்றனர்.

மரியா ஃபுல் ஒஃப் க்ரேஸ் "Maria, you are full of grace") (என்ற இந்தப் படம் ஸ்பானிய மொழியில் 2014ல் வெளியானது. ஸ்பானிய மொழியில் இதன் தலைப்பு ‘María, llena eres de gracia, lit.இந்தத் திரைப்படம் கொலம்பியா-அமெரிக்கா ஆகிய இரண்டு நாடுகளின் கூட்டுத் தயாரிப்பில் உருவானதாகும்.இந்தத் திரைப்படத்தின் கதாசிரியரும்இயக்குநரும் ஜோஷுவா மார்ஸ்டன் ( Joshua Marston) ஆவார்.

தென் அமெரிக்காவின் கொலம்பியாவை சேர்ந்த 17 வயதான, மரியா ரோஜா பூக்களை சேகரித்து அனுப்பும் பண்ணையொன்றில் பணி புரிபவள். அவளுடைய வீட்டிலிருக்கும் விதவைப் பாட்டி, அம்மா , கணவனைப் பிரிந்து கைக்குழந்தையுடன் தஞ்சமடைந்து விட்ட அக்கா எல்லோரையும் மரியாவின் சம்பாத்தியமே காப்பாற்றிக் கொண்டிருக்கிறது. கூட வேலை செய்யும் ப்லங்கா (Blanca) இவளுடைய நெருக்கமான தோழி.

மரியாவுக்கு ஒரு காதலன் இருக்கிறான். பெயர் ஜோன். அவனை சந்திக்கும் மரியா அவன் மூலம் தான் கர்ப்பமாக இருப்பதைக் கூறுகின்றாள். வெவ்வேறு குணாதிசயங்கள் கொண்ட அவர்கள் திருமணம் செய்து கொள்வது பற்றி உரையாடுகிறார்கள். ( நினைத்த மாத்திரத்தில் மரியாவால் குரங்கு போல் தாவி வீட்டின் கூரை வரை செல்ல இயலும். ஜோனால் அவளை அண்ணாந்து பார்ப்பது மட்டுமே இயலுமான காரியம்.) திருமணத்திற்குப் பின்னர் தன் வீட்டிலேயே இருக்கலாம் ‘ என மரியா கூறுகின்றாள். ஜோன் அதற்கு இணங்கவில்லை. காரசாரமான தர்க்கத்தின் பின் பிரிகிறார்கள்.

உடல் நலக் குறைவால் ஒருநாள் அவதியுறும் மரியா மீது இரக்கம் காட்டாமல் பண்ணையின் கண்காணிப்பாளன் அவளைத் திட்டுகிறான். அவள் வாந்தியெடுப்பதைக் கூடப் பொருட்படுத்தாமல் அந்த வாந்தி ரோஜாப் பூக்களை நாசமாக்கி விட்டதற்காக சத்தமிடுகிறான். மன வேதனையுறும் மரியா அந்த வேலையிலிருந்து விலகத் தீர்மானிக்கிறாள். தன் வாழ்வின் எதிர்காலத் திசையறியாத மனக்குழப்பத்துடன் இருக்கும் மரியாவுக்கு ஃப்ராங்க்ளின் என்ற இளைஞன் ‘பார்ட்டி’ ஒன்றில் அறிமுகமாகின்றான். நகரத்திற்குச் சென்று அங்குள்ள ஏதோ ஒரு வீட்டில் பணிப்பெண்ணாக சேர்ந்து கொள்ளலாம் என்று எண்ணும் அவளுக்கு ஃப்ராங்க்ளின் வேறொரு வழியைக் காட்டுகிறான். ‘’கடத்தல் வேலை மூலம் நிறைய சம்பாதிக்கலாம். செய்கிறாயா ?’’ என்று கேட்கிறான்.

அவர்களுக்குக் கொடுக்கப் பட்ட பணி , போதைப் பொருள் நிரம்பிய அறுபது கேப்ஸ்யூல்களை அவர்கள் ஒவ்வொருவரும் விழுங்க வேண்டும்.(தேர்ச்சி பெற்றவர்கள் நூறு மாத்திரைகள் கூட விழுங்குவார்கள் என ஏற்பாட்டாளன் கூறுகிறான்.) விமானப் பயணத்தின் மூலம் நியூ யோர்க்கை அடைந்து அங்குள்ள முகவர்களிடம் இவற்றை ஒப்படைக்க வேண்டும். மாத்திரைகள் வயிற்றுக்குள் வெடித்து விட்டால் மரணம். விமான நிலைய சோதனைகளில் மாட்டிக் கொண்டால் கடுந்தண்டனை. இவற்றையெல்லாம் தெரிந்து கொண்டே இந்த ஆபத்தான விளையாட்டில் உயிரைப் பணயம் வைத்த படி மரியாவும் அவளுடைய தோழி ப்லங்காவும் , லூசியா என்ற இன்னொரு பெண்ணும் இணைந்து கொள்ளுகின்றனர்.

இந்தக் கடத்தல் வெற்றிகரமாக முடிந்தால் கிடைக்கப் போகும் ஊதியம் அவர்களுக்குப் பெரிதாக இருக்கின்றது.

இந்தக் குறுக்கு வழிப் பயணத்தில், வாழ்வதற்கான வேட்கையில் அவர்கள் கண்டடைந்த அனுபவங்கள் எவை ?

இந்த வேகமான ,இயந்திர மயமான ,பொருள் வேட்கை கொண்ட உலகில் மரியாவுக்கும் ,மரியா போன்ற இன்னும் பலருக்குமான இடம் என்பது என்ன ? அவர்கள் இதயமும் காதுகளுமற்ற சுவர்களுக்குள் சிக்கிக் கொண்ட வண்ணத்துப் பூச்சிகளா ? அல்லது வலிய கரங்கள் கையாளும் பரிசோதனைக் கூட எலிகளா ? சட்டவிரோதமான காரியத்தில் ஈடுபட்டவள் என்ற ஒரே காரணத்தால் மரியாவின் மனதில் உள்ள கருணையின் ஈரம் புறந் தள்ளி விடக் கூடிய ஒன்றா ?

பெருமூச்சு நிறைந்த இத்தகைய கேள்விகளை எம் முன்னே வைப்பதுதான் இந்தத் திரைப்படத்தின் வெற்றி.

இந்தப் படத்தின் இயக்குநரான ஜோஷுவா மார்ஸ்டன் 1968ல், தென் கலிஃபோர்னியாவில் பிறந்த ஒருவர். இவர் ‘மரியா ஃபுல் ஒஃப் க்ரேஸ்’ திரைப்படம் மூலமாகவே பரவலாகப் பேசப்பட்டார்.

இந்தத் திரைப்படத்தில் மரியா என்ற முக்கிய பாத்திரத்தை ஏற்று நடித்தவர் கொலம்பியாவை சேர்ந்த முன்னணி நடிகை கெட்டலினா ஸன்டினோ மொரீனா (Catalina Sandino Moreno ) ஆவார்.

மரியா பாத்திரத் தேர்வுக்காகப் போட்டியிட்ட பல நூற்றுக் கணக்கான நடிகைகளைப் பின் தள்ளி ,தன் அபாரமான திறமையினால் இந்தப் படத்தில் நடிக்கும் வாய்ப்பைப் பெற்றவர் இவர். இந்தப் படத்தில் நடித்ததன் மூலம் பெர்லின் திரைப்பட விழாவில் ‘சிறந்த நடிகைக்கான ‘விருதைப்’ பெற்றார்.

17.10.2017


பதிவேற்றம் - நவம்பர் 2017
© பதிப்புரிமை உமா வரதராஜன் - 2017
Designed By : HLJ Solutions