என்றும் குலுங்கும் சலங்கை

உமா வரதராஜன்

அண்ணன் மௌனகுருவை நான் முதன் முதலாக சந்தித்தது 1974 இல் .கொழும்பு ,ஹெவலொக் வீதியில் 602/3, என்ற இலக்க வீட்டின் இரண்டாம் மாடி அறையில் நான் வாழ்ந்த காலமது. என்னுடன் கூட இருந்தவர் என்னூரைச் சேர்ந்த கவிஞர் சண்முகம் சிவலிங்கம் அவர்கள் .அவர் மூலம் அண்ணன் மௌனகுருவின் பெயரை அறிவதற்கு முன்னரே அண்ணன் மௌனகுரு பற்றி எழுத்தாளர் இளங்கீரன் அவர்கள் என்னிடம் கூறியிருக்கிறார் . நானும் ,இளங்கீரனின் புதல்வர் மீலாத்கீரனும் இணைந்து வெளியிட்ட 'காலரதம்' சிற்றிதழில் 'மனிதபுராணம் ' என்ற தலைப்பில் இளங்கீரன் நாடகமொன்றை எழுதியிருந்தார் .அந்த நாடகம் அண்ணன் மௌனகுரு திருமணமாகி தலைநகருக்குத் தனிக்குடித்தனம் போனதைப் பின்னணியாகக் கொண்டது .அண்ணன் மௌனகுருவின் பதிவுத் திருமணத்தின் போது கூட இருந்தவர்களில் இளங்கீரனும் ஒருவர் .

கேட்ட மாத்திரத்திலேயே 'மௌனகுரு' என்ற அந்தப் பெயர் 'மர்ம யோகி ' என்ற நாமத்துக்கு இணையான ஒரு வசீகரத்தை என் மனதில் உருவாக்கி விட்டது .நேரில் சந்தித்திராத , தோற்றமறியாத ஒருவரின் பெயர் நம் மனதில் தன்பாட்டுக்கு அவரின் உருவம் பற்றி வரைந்து கொள்ளும் சித்திரங்கள் விசித்திரமானவை .என்னுடைய 'மனச்சித்திரத்தில் ' அண்ணன் மௌனகுரு நீண்டதொரு தாடி வைத்திருந்தார் .சிஷ்யர்கள் அவரை சூழ்ந்திருந்தார்கள் .அவர்களுடைய கேள்விகளுக்கு எப்போதாவது ஒரு தடவை மௌனம் கலைத்து ஆறேழு வார்த்தைகளில் பதிலளித்தார் . கொஞ்சம் முசுடு .

ஆனால் நான் வரைந்து வைத்திருந்த அந்த சித்திரத்தின் வர்ணங்கள் யாவும் கரைந்து ,கோடுகளும் கலைந்து ,முற்கற்பிதங்களும் பொய்த்துப் போக அதிக நாட்கள் எடுக்கவில்லை. ஒரு நாள் எங்கள் அறைக்கு சண்முகம் சிவலிங்கம் அவர்களைத் தேடி அவரும் ,சித்ரா அக்காவும் நேராகவே வந்து விட்டார்கள் .

முதன் முதலாக சந்தித்த அன்றே மௌனகுரு அண்ணனின் பெயரில் முன்பாதி பொய் ,பின்பாதி மெய் என்பது நிரூபணமாகி விட்டது .எல்லா மருமக்களையும் வாரியணைக்கும் 'வானொலி சிறுவர் மலர் மாமா ' போல் அவரிருந்தார் .குமிண் சிரிப்பு .உற்சாகமான பேச்சு . உணர்ந்தேன் .

சண்முகம் சிவலிங்கம் அவர்கள் என்னை அறிமுகப் படுத்தி வைத்தார் . நான் அறை மூலையிலிருந்த மண்ணெண்ணெய் ' ஸ்டவ்'வில் நீரைக் கொதிக்க வைத்துக் கொண்டிருந்தேன் . அவர்களின் உரையாடலை செவிமடுத்த படி அன்று தேநீர் தயாரித்து வழங்கினேன் . அண்ணன் மௌனகுருவுக்கு என்னுடைய தேநீர் மிகவும் பிடித்திருக்க வேண்டும் .என் கை விசேஷத்தைப் பெருமைப் படுத்தும் விதத்தில் 'தேநீர்த் தென்றல் 'என்றொரு பட்டத்தை எனக்கு வழங்குவதாக அண்ணன் மௌனகுரு அவர்கள் அறிவித்தார் . சித்ரா அக்கா அதை ஆமோதித்தார் .சண்முகம் சிவலிங்கம் 'ஹா ..ஹா ..' வென்று சிரித்தார் .இப்படித்தான் நாங்கள் நெருக்கமானோம் .

''சும்மாதானே இருக்கிறீர்கள் .வீட்டுக்கு அடிக்கடி வந்து போகலாமே ...நல்ல புத்தகங்கள் எல்லாம் இருக்கின்றன ...''

இப்படித்தான் என் இருப்பிடத்திலிருந்து நடைதூரத்தில் பாமன்கடை ஒழுங்கையில் உள்ள அவருடைய வீட்டுக்கு ஆர்வத்துடன் அடிக்கடி சென்று வர ஆரம்பித்தேன் . டபிள்யூ .ஏ .சில்வா மாவத்தையில் சபையர் தியேட்டருக்கு அருகே கிளை விடும் பாமன்கடை ஒழுங்கையில் அண்ணன் மௌனகுரு அவர்கள் குடியிருந்தார் .ஒழுங்கை முனையில் வலதுபுறமாக ஒரு பழங்காலக் கட்டிடமொன்றிருந்தது .அதன் வாசல் திண்ணையில் நின்று கொண்டிருக்கும் மூன்று இளம்பெண்கள் இருள் படும் வரை வீதியை வேடிக்கை பார்த்த படியிருப்பார்கள் . அவர்கள் மூவரும் என்னைப் பார்த்து புன்னகைப்பது போலவும், அவர்களில் இளையவள் போல் தோன்றியவளின் புன்னகை மற்றவர்களுடையதை விட சற்றுப் பிரகாசத்துடனிருப்பது போலவும் எனக்கு ஒரு பிரமை .(சண்முகம் சிவலிங்கம் அவர்களிடம் இது பற்றி நான் ஒரு நாள் சொன்ன போது அவர் கூறிய பதில் இது :'அவர்கள் சிரிப்பதில் பிரச்சினையில்லை . ஆனால் அவர்கள் சிரிக்கும் படியாக நீ ஆகி விடாதே !' )

அங்கிருந்து கொஞ்சம் நடந்தால் 'டானா ' வடிவில் முடங்கும் வீதி பின் நிமிர்ந்து கொள்ளும் .பிரபல பகுத்தறிவு வாதி டாக்டர் ஏப்ரஹாம் கோவூர் அண்ணன் மௌனகுருவின் அயல் வீட்டுக் காரர். நான் முதன்முதலாகச் சென்ற அந்த நாளில் ,அமானுஷ்ய அமைதியுடன் இருப்பதாக கோவூரின் அந்த வீடு தோன்றியது .அந்த வீட்டு வாசலில் நின்ற பப்பாளி மரத்தின் பழத்தை ஒரு காகம் கொத்திக் கொண்டிருந்தது .பச்சைத் தோலைத் துளைத்து செம்மஞ்சள் சதையைக் கண்ட பெருமிதத்துடன் அது என்னை ஒரக் கண்ணால் பார்த்தது .

ஒழுங்கை முடியுமிடத்தில் ,பள்ளத்தில் அண்ணன் மௌனகுருவின் வீடு இருந்தது .ஓட்டிப் பிறந்த இரட்டையர் போன்ற அமைப்பில் இருந்த அந்த வீட்டின் ஒரு புறத்தில் மௌனகுரு அண்ணன் குடும்பத்தினரும் மறுபுறத்தில் இலங்கை வானொலி அறிவிப்பாளர் சுந்தரலிங்கம் குடும்பத்தினருமிருந்தனர் .(சித்ரா அக்காவும் அப்போது இலங்கை வானொலியில் பணி புரிந்து கொண்டிருந்தார் .அண்ணன் மௌனகுரு பாடப் புத்தக வெளியீட்டுக் குழுவில் பணியாற்றிக் கொண்டிருந்ததாக ஞாபகம் . ) அண்ணன் மௌனகுருவின் மகன் சித்தார்த்தன் அப்போது கைக்குழந்தை . அவர்களோடு அப்போது அந்த வீட்டில் இருந்தவர்கள் அவருடைய மருமகள் வத்ஸலா ,சித்ரா அக்காவின் பாட்டி ஆகியோர் .

நாளடைவில் அவர்களுடைய வீட்டில் நானும் ஒருவனாகி விட்டேன் . அவரிடம் ஏராளமான புத்தகங்களை இரவல் பெற்று நான் படித்திருக்கிறேன். பின்னாட்களில் என் எழுத்துப் பாணியில் மிகவும் செல்வாக்கு செலுத்திய சுந்தரராமசாமி அவர்களின் 'அக்கரை சீமையிலே ' நூலை அவரிடமிருந்தே பெற்றுக் கொண்டேன் . அவரிடமிருந்து நான் பெற்று படித்த இன்னொரு முக்கிய நாவல் ந.சுப்பிரமணியம் அவர்களின் 'வேரும் ,விழுதும் '.ஊரொன்றில் பாலம் கட்டுவதையொட்டிய நிகழ்வுகள் அந்த நாவலின் சாரம்.கலை ,இலக்கியம் சார்ந்த என் ரசனைகளை மாற்றியமைத்ததில் சண்முகம் சிவலிங்கம் அவர்கள் ,அண்ணன் நுஃமான் ,நண்பர் யேசுராசா போன்றே அண்ணன் மௌனகுருவுக்கும் முக்கிய பங்குண்டு . முக்கியமாக நாடகம் பற்றி எனக்கு அறிவூட்டியதில் அவருடைய பங்கு அளப்பரியது .அவரில்லா விட்டால் சரத் சந்திர ,சுகத பால சில்வா ,ஹென்றி ஜெயசேன ,பராக்கிரம கிரியெல்ல போன்ற சிங்களக் கலைஞர்களையும் சுந்தரலிங்கம் ,தாஸீசியஸ் ,பாலேந்திரா போன்ற தமிழ்க் கலைஞர்களையும் உரிய வேளையில் அறிந்திருக்க மாட்டேன் .

என்னதான் உலக சினிமாக்களையும் , அறிவார்ந்த நவீன நாடகங்களையும் பார்த்தாலுங் கூட அந்தக் காலத்தில் 'கோமாதா என் குலமாதா ' படத்துக்கும் நான் செல்ல வேண்டித்தானிருந்தது . அண்ணன் மௌனகுருவின் வீட்டிலிருந்த பாட்டியையும் ,வத்ஸலாவையும் வெள்ளவத்தை பிளாஸா திரையரங்குக்கு அழைத்துச் சென்று காண்பிப்பது என் பொறுப்பு . மௌனமாக இருந்து படம் முழுவதையும் பார்த்து விட்டு வீடு திரும்பும் போது பாட்டி கேட்ட கேள்வியை இன்றைக்கும் மறக்க முடியாது .''மகனே ! இந்த மாடு இவ்வளவெல்லாம் செய்யுதே ,இதில் பால் கறக்கேலுமா,ஏலாதா? ''

இந்தக் காலகட்டத்தில்தான் என்னுடைய குரல் வானொலியில் முதன்முதலாக ஒலித்தது . பேராசிரியர் சண்முகதாஸ் அப்போது கலைக்கோலம் என்றொரு நிகழ்ச்சியை வானொலியில் நடத்திக் கொண்டிருந்தார் .அண்ணன் மௌனகுரு, சித்ரா அக்காவின் சிபாரிசின் பேரில்தான் அந்த நிகழ்ச்சியில் நூல் விமர்சனமொன்றை செய்யும் வாய்ப்புக் கிட்டியது . நான் விமர்சனம் செய்த நூல் நண்பர் அ.யேசுராசாவின் 'தொலைவும் இருப்பும் ஏனைய கதைகளும் '. இறைவன் கருணையிருந்திருந்தால் நான் அந்த உரையை நிகழ்த்தாமல் இருந்திருப்பேன் .அல்லது இறைவன் அற்புதங்களைப் புரிபவராக இருந்திருந்தால் அந்த வானொலி உரையை அ.யேசுராசா கேட்காமல் தடுத்தாவது இருப்பார் .இரண்டும் நிகழவில்லை .இரண்டாம் நாள் என் பெயருக்கு யேசுராசா அவர்களிடமிருந்து ஓர் அஞ்சலட்டை வந்தது . அதன் தொடக்கம் இப்படி ஆரம்பித்தது .'அன்புள்ள உமா வரதராஜன் , அழுக்கைத் தேடி அலையும் இலையான்கள் போன்ற உங்கள் வானொலி விமர்சனத்தைக் கேட்டேன் ......'

அண்ணன் மௌனகுரு ஊருக்கு கிளம்பும் சிலவேளைகளில் அவருக்குத் துணையாக ரயில் நிலையம் வரை இரவில் நான் செல்வதுண்டு .மரங்களும் இருளும் அடர்ந்த சாலையில் பஸ் சென்று கொண்டிருக்கும் போது குறுக்கிடும் சில கட்டிடங்களை சுட்டிக்காட்டி ''இங்கு எப்போது வரப் போகிறீர்கள் ?'' என அவர் ஒரு நாள் கேட்டார் . அது கொழும்பு பல்கலைக்கழகம் .ஒரு திரைப்படத்தின் உணர்ச்சி ததும்பும் காட்சி போல் அது இருந்தது .வெளிக்காற்று முகத்தில் மோதி சடசடக்க நான் மௌனமாக இருந்தேன் . நான் படித்துப் பட்டம் பெற வேண்டுமென்பது அவருடைய விருப்பம் . ஆனால் அவருடைய ஆசையை நிறைவேற்ற என்னால் முடியவில்லை . மாறாக அந்தப் பல்கலைக்கழகப் பக்கமாகச் செல்லும் பஸ்ஸில் தப்பித் தவறியும் கூட ஏறுவதைத் தவிர்த்துக் கொண்டேன் .

நான் சிறிது காலத்துக்குப் பின் ஊர் திரும்பி விட்டேன் .அவர் யாழ் .பல்கலைக்கழகத்துக்கு சென்று விட்டார் .இந்தப் பிரிவுக்குப் பின்னர் எனக்கும் அவருக்குமான தொடர்புகள் அற்றுப் போயிருந்தன .கைபேசிகள் புழக்கத்தில் இல்லாத காலம் அது .ஒரு கடிதத்தை கைபட எழுதி ,தபாலுறையிலிட்டு ,முத்திரையொட்டி ,அஞ்சல் பெட்டியில் சேர்ப்பதென்பது ஒரு நாவலை எழுதி முடிப்பதற்கு ஒப்பான காரியம் .ஆனால் 1989 ல் என்னுடைய 'உள்மன யாத்திரை ' சிறுகதைத் தொகுப்பு வந்த போது அவர் சோம்பல் படாமல் வாழ்த்தி ஒரு கடிதம் அனுப்பி வைத்திருந்தார் .

1990 அமளியின் போது கொழும்புக்கு நான் இடம் பெயர்ந்திருந்தேன் .'நெஞ்சம் மறப்பதில்லை' படத்தில் வருவது போல் இரவு பத்து மணிக்குப் பின்னர் பூர்வ ஜென்ம நினைவுகள் பீறிட்டெழக் கூடிய ஒரு வீட்டின் புறாக்கூட்டில் வாடகைக்கு குடியிருந்தேன் . இரவு பத்து மணிக்குப் பின்னர் மின்சாரத்தைப் பயன் படுத்தக் கூடாது என்பது வீட்டு சொந்தக் காரியின் கடுமையான உத்தரவு . ஒரு 'வோக்மனு'டனும் ,சில புத்தகங்களுடனும் , என் காலம் கழிந்து கொண்டிருந்தது .பத்து மணிக்குப் பின்னர் கவ்வி விடும் கும்மிருட்டில் குறுக்கு மறுக்காகத் திரியும் வீட்டுக்காரி ஆவியாய் அலையும் 'தேவிகா' போன்று கூட என் கண்களுக்குத் தெரிய ஆரம்பித்தாள் .

நான் அங்கேயிருப்பதை அறிந்து ஒரு நாள் அண்ணன் மௌனகுரு என்னைத் தேடிக் கொண்டு வந்தார் .ஒரு மீட்பரைக் கண்டது போன்ற உற்சாகம் என்னுள் பொங்கி வழிந்தது . அவர் எனக்காக எல் ,சுப்ரமணியத்தின் 'East meets West ' 'கெஸெட்டை'க் கொண்டு வந்திருந்தார் .பதிலுக்கு 'அஞ்சலி' கெஸெட்டை நான் அவருக்குக் கொடுத்தேன் . தமிழ்த் திரை இசை மீது அவருக்கு அப்போது அவ்வளவு மதிப்பிருந்ததில்லை .ஆனால் இந்தக் கெஸெட்டில் இருந்த பாடல்கள் அவருக்கு புதுவிதமான அனுபவத்தைக் கொடுத்திருக்க வேண்டும் .' ''வித்தியாசமாக இருக்கிறது.sound of magic '' என்றார் .

கேட்டு முடித்ததும் ''கிளம்புங்கள் .இப்போது நாம் ஒருவரை சந்திக்கப் போகிறோம் .

அவருக்கு உங்களை அறிமுகப் படுத்தி வைக்கப் போகிறேன் '' என்றார் . நாங்கள் பஸ்ஸேறிச் சென்ற இடம் பம்பலப்பிட்டி க்ரீன்லேண்ட்ஸ் ஹொட்டேல் .

'' கோப்பியா , டீயா ?'' என்று கேட்டார் . எதைச் சொன்னாலும் கூட அந்த ஹொட்டேலில் உள்ள சிப்பந்திகள் அதைக் கொண்டு வந்து தருவதற்குள் நமக்குத் தாடி கூட முளைத்து விடும் என்பது என்னுடைய அனுபவம் . எனவே தெரிவை அவர் வசமே விட்டு விட்டேன் .

எனக்கு அண்ணன் மௌனகுரு அறிமுகப் படுத்த விரும்பிய நபர் சற்று நேரத்தில் ஓட்டமும் நடையுமாக வந்து சேர்ந்தார் .என்னை விட இளையவர் போல் தோன்றிய அவர் தன் சோடாப்புட்டிக் கண்ணாடிக்கூடாக என்னை அடிக்கடி குறுகுறுப்பாகப் பார்த்துக் கொண்டிருந்தார் .

''நான் சொன்னேனே ...இவர்தான் அந்த உமா வரதராஜன் '' என்று என்னை அவருக்கும் ''இவரும் வரதராஜன்தான் . எஸ் .எம் .வரதராஜன் ......ரூபவாஹினியில் தயாரிப்பாளராக இருக்கிறார் ''என்று அவரை எனக்கும் அறிமுகம் செய்து வைத்தார் .இருவரும் கைகுலுக்கிக் கொண்டோம் .இந்த மகத்தான சந்திப்புக்குப் பின் எஸ் .எம் .வரதராஜன் 'ஊர்கோலம் ',' சங்கமம் ' ஆகிய ரூபவாஹினி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் என்னைத் தொகுப்பாளராக அறிமுகம் செய்து வைத்தார் . ''நீங்கள் ஏன் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கும் போது புன்னகைக்காமல் முகத்தை உர்ரென்று வைத்துக் கொண்டிருக்கிறீர்கள் ?'' என அன்பர் கே .எஸ் .சிவகுமாரன் அவர்கள் பின்னாட்களில் கேட்டதற்கும் , 'சட்டியில் இருந்தால்தானே அகப்பையில் வரும் ' என்று நான் பதிலளித்ததற்கும் ,முகத்தில் அரிதாரம் பூசிக் கொண்டு வர்ண வர்ண ஷேர்ட்டுகள் அணிந்த படி கெமரா முன் நான் அமர்ந்ததற்கும் மூலகாரணம் இந்த இருவரும்தான் .

என்னுடனும் என்னுடைய குடும்பத்துடனும் அவர் கொண்ட உறவு மிகவும் நெருக்கமானது .எழுபதுகளின் இறுதியிலும் ,80 களின் தொடக்கத்திலும் அது மிகவும் உச்சமான நிலையிலிருந்தது . அம்மாவுக்கு சித்ரா அக்கா மீது மிகவும் வாஞ்சை . அதிலும் அப்போதிருந்த அவருடைய நீண்ட கூந்தல் மீது அளவற்ற பிரியம் . பின்னாட்களில் சித்ரா அக்கா தன் கூந்தலை நறுக்கிக் குட்டையாக்கிக் கொண்ட போது அம்மா அடைந்த துயரத்துக்கு அளவில்லை . வீதி விஸ்தரிப்பின் போது எங்கள் வீட்டின் முன்னால் நின்ற நீண்டகால வரலாறு கொண்ட மூன்று அலரி மரங்களையும் தறித்த போது கூட அவர் அவ்வளவு துயரப் பட்டதில்லை .'அண்ணன் மௌனகுருவே கவலைப்படவில்லை .நீங்கள் ஏன் அலட்டிக் கொள்கிறீர்கள் ' என்று நான் அவரை சமாதானப் படுத்தியிருக்கிறேன் .

''அவர் கவலைப் படவில்லை என்று உன்னிடம் சொன்னாரா ?''என்று அம்மா என்னிடம் திருப்பிக் கேட்டார் .

என்னுடைய மகளுடைய திருமண வைபவத்தின் போது என்னுடன் பிறந்த சகோதரர்கள் பக்கத்தில் இருக்கவில்லை .அந்தக் குறைக்கு இடம் தராமல் விடியற்காலையிலேயே அண்ணன் மௌனகுரு வந்து சேர்ந்து விட்டார் . நான் வேஷ்டி கட்டுவதும் ,ஆலயத்துக்குப் போவதும் என் வாழ்க்கையில் அபூர்வமாக நடப்பவை . ஆலயத்தில் மகளின் பக்கத்தில் சம்மணமிட்டு நான் அன்றிருந்த கோலத்தைப் பார்த்து ''சில இடங்களில் அடங்கி ,ஒடுங்கிப் போகத்தான்வேண்டியிருக்கிறது அல்லவா '' என்று கூறிச் சிரித்தார் .

என்னுடைய பிள்ளைகளோடு அவர் மிகவும் அன்பு காட்டியவர் .அவரளவுக்குப் பொறுமையுடனும் ,கனிவுடனும் நான் கூட என் பிள்ளைகளுடன் நடந்து கொண்டிருக்க மாட்டேன் . இவ்வளவு வருடகால அனுபவத்தில் அவரிடம் நான் அவதானித்த முக்கியமான விஷயம் அவர் எவருடனும் தர்க்கிப்பதில்லை . விமர்சனங்களிலும் அவர் கடுமையான தொனியைக் கையாண்டதில்லை .ஒருவர் அபத்தமான வாதங்களை முன்வைக்கும் போது தன் முகத்திலிருக்கும் புன்னகை மறைந்து போகாமல் பார்த்துக் கொள்ளுவார் .அவர் தலையசைப்பையும் பாவனைகளையும் பார்க்கும் ஒருவருக்கு அவரை வென்று விட்ட இறுமாப்பு தோன்றக் கூட இடமுண்டு .ஆனால் அவர் 'அதுவல்ல '. விரிவான அலசல்களைச் செய்து தெளிவான முடிவுகளுடன் இருப்பவர் .'வெறும் சொல்லல்ல ,செயலே பதில் என்பதில் அசையாத நம்பிக்கை உள்ளவர் . சண்முகம் சிவலிங்கம் அவர்களின் கவிதைகளுக்கு அரங்காற்றுகை வடிவம் ஒன்றை வழங்க வேண்டுமென்ற கோரிக்கையுடன் அண்மையில் அவரை சந்திக்க நான் சென்றிருந்தேன் . இந்தியன் தாத்தா போல் வெண்பஞ்சு முடி நெற்றியில் விழுந்து கிடக்க வேஷ்டி சட்டையுடன் ,வழக்கமான குமிண் சிரிப்புடன் ஜம்மென்ற கோலத்தில் அவரிருந்தார் .பேராதனை பல்கலைக் கழக தமிழ்ச் சங்கத்தின் 140வது ஆண்டு நிறைவு விழாவில் ஒளி பரப்புவதற்காக ,அவருடைய வாழ்த்துச் செய்தியொன்றை பெறும் பொருட்டு மூன்று இளைஞர்கள் வந்திருந்தனர் . ஒளிப்பதிவு செய்யும் ஆயத்தங்களில் அவர்கள் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர் .

''ஐந்து நிமிஷம் உமா ...முடித்துக் கொண்டு வந்து விடுகிறேன் '' என்றார் . நான் காத்திருந்தேன் . முதலாவது டேக் குடனேயே அது சிறப்பாக முடிந்திருக்க வேண்டியது .ஆனால் ஒளிப்பதிவில் கவனமாக இருந்த அந்த இளைஞர்கள் ஒலிப்பதிவைத் தவற விட்டிருந்தார்கள் . இப்படியே மேலும் இரண்டு 'டேக்'குகள். ஆனால் அண்ணன் மௌனகுருவின் முகத்தில் சுளிப்போ சலிப்பின் சாயலோ சிறிதுமில்லை .தான் நடித்த 'பொன்மணி ' திரைப்படப் பிடிப்பின் போதும் இதே போல் நடந்த ஒரு சம்பவத்தை நகைச்சுவை ததும்ப விபரித்தார் . எல்லாம் முடிந்ததும் இளைஞர்கள் அவருடனும் ,என்னுடனும் படமெடுத்துக் கொண்டு விடை பெற்றார்கள் .

பின் இருவரும் பேசிக் கொண்டிருந்தோம் .சண்முகம் சிவலிங்கத்தின் குறிப்பிட்ட சில கவிதைகளை வாசித்துக் காட்டிக் கொண்டிருந்தேன் . 'விலை ' என்ற கவிதை அவரை ஈர்த்திருக்க வேண்டும் .மறுபடியும் அதை வாசிக்கச் சொன்னார் .வாசித்தேன் .

''இது ஒரு தந்தையின் மனக்குமுறல் .ஆற்றாமை .இதையே அடிப்படையாகக் கொண்டு பாவனை வடிவில் மேடைக்குக் கொணர்வோம் '' என்றார் .மகிழ்ச்சியுடன் விடை பெற்றேன் .

அன்று இரவே தொலைபேசியில் அழைத்தார் .

''அதில் வரும் அப்பாவாக நானே நடிக்கலாம் என்று எண்ணுகிறேன்.'' என்றார் .

அப்போது அது அண்ணன் மௌனகுருவின் குரலாகத் தெரியவில்லை . அன்று காலையில் சந்தித்த மூன்று இளைஞர்களில் ஒருவனுடைய குரல் போல் அது இருந்தது .

கலைஞனுக்கு வயதேது ? சாவேது ?

21.04.2017


பதிவேற்றம் - நவம்பர் 2017
© பதிப்புரிமை உமா வரதராஜன் - 2017
Designed By : HLJ Solutions